search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை-சேலம் விரைவு சாலைக்கு எதிர்ப்பு - விவசாயிகள் கைது
    X

    சென்னை-சேலம் விரைவு சாலைக்கு எதிர்ப்பு - விவசாயிகள் கைது

    சேலம்- சென்னை இடையே 8 வழி சாலை அமைக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகளை கைது செய்த சம்பவம் கிராம மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Farmersarrest

    சேலம்:

    சென்னையில் இருந்து சேலத்திற்கு 8 வழி பசுமை வழிச் சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டிருந்தது.

    சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் வழியாக இந்த பசுமை வழிச்சாலை சென்னைக்கு அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கு மத்திய அரசு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்ய உள்ளது.

    சென்னை-சேலம் பசுமை வழி விரைவு சாலை திட்டத்திற்கு மொத்தம் 277 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்கப்படும். இதற்காக 7,500 ஏக்கர் விளை நிலம், 500 ஏக்கர் வனப்பகுதி, 7 ஆறுகள், 8 மலைகள் உடைக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது. 7,500 ஏக்கர் விளை நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதால் விவசாயிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

    இந்த திட்டத்தை செயல் படுத்தினால் 5 மாவட்டங்களில் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் அழியும் அபாய நிலை உருவாகி இருப்பதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சுமார் 150 கிராமங்களில் இந்த விளை நிலங்கள் பாதிக்கப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

    இதையடுத்து 150 கிராம மக்கள் பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தை தொடங்கியுள்ளனர். கடந்த சில தினங்களாக இந்த போராட்டம் தீவிரம் அடைய தொடங்கியுள்ளது.

    இந்த நிலையில் சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, காஞ்சீபுரம் மாவட்டங்களில் சிலர் விவசாயிகளை சந்தித்து பேசி பசுமைவழிச்சாலை திட்டத்திற்கு எதிராக போராட்டத்திற்கு தூண்டி விடுவதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து 5 மாவட்டங்களிலும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

    கடந்த திங்கட்கிழமை தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த சுமார் ஆயிரம் விவசாயிகள் கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்த திரண்டு வந்தனர். அவர்களை போலீசார் ஆங்காங்கே மடக்கி விரட்டிவிட்டனர்.

    இதனால் அந்த போராட்டம் பெரிய அளவில் நடக்கவில்லை.

    9 பேர் மட்டுமே அன்று கலெக்டரை சந்தித்து மனுக் கொடுக்க அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் தற்போது சேலத்திலும், திருவண்ணாமலையிலும் பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளன.

    கடந்த 6-ந் தேதி ஆச்சாங்குட்டபட்டியில் 8 வழி சாலை அமைக்க அதிகாரிகள் நிலத்தை அளவீடு செய்தனர். உடனே அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அளவீடு செய்யும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.

    இந்தநிலையில் நேற்று ஆச்சாங்குட்டபட்டி ஊராட்சிக்குட்பட்ட செங்காட்டூர், அடிமலைப் புதூர், கத்திரிபட்டி ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த பொது மக்கள் 8 வழி பசுமை சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள திரவுபதி அம்மன் கோவில் அருகில் திரண்டனர்.

     

    அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் திரண்ட விவசாயிகளின் உறவினர்கள்.

    கூட்டத்தில் 300-க்கும் ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டனர். இதில் 8 வழி பசுமை விரைவு சாலை திட்டத்திற்காக விவசாய நிலங்கள், கோவில் நிலங்கள், பள்ளி, மயானம் ஆகியவற்றுடன் பல ஆயிரம் ஏக்கர் தென்னை, பாக்கு மரங்கள், நெல் வயல்கள் அழிக்கப்பட உள்ளது. இதனால் விவசாயிகளை பாதிக்கும் இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

    இதற்கிடையே தூத்துக்குடியில் நடைபெற்றது போல 5 மாவட்டங்களிலும் மிகப் பெரிய போராட்டம் வெடிக்கும் அபாயம் இருப்பதாக உளவுத்துறை போலீசார் ஏற்கனவே எச்சரித்திருந்தனர். இதன் அடிப்படையில் உளவுத்துறையினர் முகாமிட்டு கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    போராட்டத்தை முன் எடுத்து செல்வது யார், யார்? என்பதை முன் கூட்டியே கண்டறிந்து அவர்களை முன் கூட்டியே கைது செய்யவும் உயர் போலீஸ் அதிகாரிகள் அந்தந்த மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர். இதற்கிடையே ஆச்சாங்குட்டபட்டியில் நேற்று நடந்த கூட்டத்தை போலீசார் தீவிரமாக கண்காணித்தனர்.

    அதன் அடிப்படையில் கூட்டத்தை முன் நின்று நடத்தியதாக கூறி குப்பனூரை சேர்ந்த முத்துக்குமார், நாராயணன், ராஜாகவுண்டர், கந்தசாமி, ரவிச்சந்திரன், பழனியப்பன் ஆகிய 6 பேரை இன்று அதிகாலை வீடு புகுந்து அம்மாபேட்டை போலீசார் இழுத்து சென்றனர்.

    பூலாவாரி சித்தேரியை சேர்ந்த ரவி என்பவரை கொண்டாலம் பட்டி போலீசார் வீடு புகுந்து இழுத்து சென்றனர். இதை பார்த்த உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன் போலீசாருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

    விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டவர்களின் உறவினர்கள் 100-க்கும் மேற்பேட்டோர் அம்மாபேட்டை போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர். இதனால் அங்கு பதட்டமான சூழல் நிலவியதால் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர்.

    பல மணி நேர விசாரணைக்கு பிறகு ராஜா கவுண்டர், கந்தசாமி, ரவிச் சந்திரன், பழனியப்பன் ஆகிய 4 பேரை போலீசார் விடுவித்தனர். முத்துக்குமார், நாராயணன், பூலா வாரியை சேர்ந்த ரவி ஆகிய 3 பேரிடமும் விசாரணை நடந்தது. பிறகு நாராயணன் விடுக்கப்பட்டார்.

    முத்துக்குமார் போராட்டத்தை தூண்டிவிட்டதாக போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவரை உடனடியாக கைது செய்தனர். சைக்கிள் கடை நடத்தி வரும் முத்துக்குமார் பசுமை வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து முன் நின்று போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

    ரவியிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. அவர் கைது செய்யப்படு வாரா? என்று தெரிய வில்லை. இது குறித்து துணை கமி‌ஷனர் சுப்புலெட்சுமி கூறியதாவது:-

    8 வழி பசுமை விரைவுச் சாலை திட்டத்திற்கு எதிராக சிலர் போராட்டத்தை தூண்டுவதாக கிடைத்த தகவலின் பேரில் விசாரணைக்காக அழைத்து வந்துள்ளோம். விசாரணையில் அவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தால் அவர்களை கைது செய்வோம். மற்றவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றார். #Farmersarrest

    Next Story
    ×