search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளி கட்டிடம் இடிந்து தொழிலாளி பலி: கட்டிட உரிமையாளர்- என்ஜினீயர் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு
    X

    பள்ளி கட்டிடம் இடிந்து தொழிலாளி பலி: கட்டிட உரிமையாளர்- என்ஜினீயர் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு

    பள்ளி கட்டிடம் இடிந்து தொழிலாளி பலியான சம்பவம் தொடர்பாக கட்டிட உரிமையாளர், என்ஜினீயர் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் முத்தூர் புதுக்காலனியில் அழகேஸ்வரி என்பவருக்கு சொந்தமான மகரிஷி வித்யா மந்திர் என்ற தனியார் பள்ளி உள்ளது.

    இப்பள்ளியில் தரை தளத்துடன் சேர்த்து 2 தளங்கள் கட்டப்பட்டு வருகிறது. இதில் ஒடிசா மற்றும் வட மாநிலத்தை சேர்ந்த 100-க்கும் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இப்பள்ளியில் தரை தளத்திலும், முதல் தளத்திலும் கடந்த 10 நாட்களுக்கு முன் கான்கிரீட் போட்டு மேற்கூரை அமைக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து கட்டிடத்தின் 2-வது தளத்திலும் மேற்கூரை அமைப்பதற்கு சென்ட்ரிங் கம்பிகள் கட்டி கான்கிரீட் கலவை போடும் பணியில் 19 தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது திடீரென 2-வது தளம் இடிந்து விழுந்தது. மேலும் முதல் தளத்தின் மேற்கூரையும், தரை தளத்தின் மேற்கூரையும் மொத்தமாக இடிந்து விழுந்தது.

    இதில் இடிபாடுகளுக்குள் 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். அவர்கள் அலறினார்கள். இந்த சத்தம் கேட்டு அருகில் இருந்த தொழிலாளர்களும், பொது மக்களும் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    இது குறித்து பொள்ளாச்சி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    அவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த 15 தொழிலாளர்களை மீட்டனர். இதில் ஒடிசாவை சேர்ந்த கண்ணா (18) என்பவர் சம்பவ இடத்திலே இறந்தார்.

    ஒடிசாவை சேர்ந்த லட்சுமி நாராயணன் (18), நரேன்(24), வசந்த் (35), நிரஞ்சன் (20), பிண்டு (20), தேவா (19), தினேஷ் (25) கொல்கத்தாவை சேர்ந்த ஜோதிப் (30), முத்தூர் அஜித் (21), ராமப்பட்டிணத்தை சேர்ந்த சதிஷ் (20), ஜமீன் முத்தூரை சேர்ந்த நரேன் (27), மேற்கு வங்காளத்தை சேர்ந்த ராகுல் (28), நல்லூரை சேர்ந்த மேற்பார்வையாளர் சிவமணி (40) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.



    அவர்கள் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் பலத்த காயம் அடைந்த 2 பேர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    சம்பவம் நடந்த இடத்தை தாசில்தார் செல்வபாண்டி, டி.எஸ்.பி. கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள்.

    பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தவர்களை சப்-கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    கட்டிடம் இடிந்து தொழிலாளி பலியான சம்பவம் தொடர்பாக பள்ளி தாளாளரும், கட்டிட உரிமையாளருமான அழகேஸ்வரி, என்ஜினீயர் கணேஷ்குமார், மேற்பார்வையாளர் சிவமணி, சிமெண்ட் கலவை கலக்கும் எந்திர ஆபரேட்டர் சுமன் ஆகிய 4 பேர் மீது பொள்ளாச்சி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    எந்திரத்தை பாதுகாப்பு இன்றி இயக்குதல், விபத்தை ஏற்படுத்துதல், தவறான முறையில் பணி செய்ய தூண்டியது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    கட்டிடம் இடிந்து விழுந்து காயம் அடைந்து பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் இன்று காலை பார்த்து ஆறுதல் கூறினார்.

    மேலும் இடிந்து விழுந்த கட்டிடத்தையும் அவர் பார்வையிட்டார்.

    இடிந்த பள்ளி கட்டிடம் இந்த கல்வி ஆண்டே திறக்க வேண்டும் என்பதற்காக அவசர கதியில் கட்டப்பட்டதாகவும், தரம் இல்லாமலும், ஒரு தளத்திற்கும் மற்ற தளத்திற்கும் போதிய கால இடைவெளி இல்லாமலும் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

    மேலும் இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையில் கடந்த சில மாதங்களாக ஈடுபட்டு நூற்றுக்கணக்கான மாணவர்களை சேர்த்து கட்டணமும் பெற்று விட்டதால் மாணவர்களை சில நாட்களில் சேர்க்க வேண்டும் என திட்டமிட்டு கட்டிட பணிகள் இரவு, பகலாக நடைபெற்று வந்துள்ளது.

    இதன் காரணமாக இந்த விபத்து நேரிட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். #tamilnews
    Next Story
    ×