என் மலர்
செய்திகள்

பொம்மிடியில் பலத்த மழை: சுவர் இடிந்து விழுந்து லாரி டிரைவர் மரணம்
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் பொம்மிடி பகுதியில் நேற்று மாலை கருமேகத்துடன் குளிர்ந்த காற்று வீசியது. இரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமார் ஒரு மணிநேரம் பெய்தது.
பொம்மிடி பகுதியைச் சேர்ந்தவர் அங்கப்பன் (வயது50). லாரி டிரைவர். நேற்று இரவு வீட்டின் அருகே பலத்த மழை பெய்ததால் அங்கப்பன் வெளியே எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்தார்.
மழை பெய்து கொண்டிருந்ததால் இரவு 9 மணியளவில் வீட்டிற்குள் உறங்க சென்றார். அவரது வீட்டின் பக்கத்தில் உள்ள குடிசை வீட்டில் அவரது மனைவி தூங்கி கொண்டிருந்தார்.
அங்கப்பன் தூங்கி கொண்டிருந்தபோது திடீரென்று அவரது வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் சுவர் இடிந்து தூங்கி கொண்டிருந்த அங்கப்பன் மீது விழுந்தது.
இதில் இடிபாடுகளுக்கிடையே சிக்கி கொண்ட அவர் வலியால் அலறினார். சுவர் இடிந்த சத்தம் கேட்டதும் அங்கப்பனின் உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து இடிபாடுகளுக்கிடையே சிக்கி கொண்ட அவரை மீட்டனர்.
பலத்த காயம் அடைந்த அங்கப்பனை உடனே தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நள்ளிரவில் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பொம்மிடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






