search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டான்லி ஆஸ்பத்திரி சுரங்கப்பாதையில் பிணம் மீட்பு: மலேசியாவில் கள்ளக்காதலில் ஈடுபட்டதால் வாலிபர் கொலை
    X

    ஸ்டான்லி ஆஸ்பத்திரி சுரங்கப்பாதையில் பிணம் மீட்பு: மலேசியாவில் கள்ளக்காதலில் ஈடுபட்டதால் வாலிபர் கொலை

    சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி சுரங்கப் பாதையில் பிணமாக மீட்கப்பட்ட வாலிபர் கள்ளக்காதல் தகராறில் கொலை செய்யப்பட்டார் என்று போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
    ராயபுரம்:

    சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி சுரங்கப் பாதையில் கடந்த ஏப்ரல் 25-ந்தேதி காலில் வெட்டுக்காயத்துடன் வாலிபர் பிணமாக கிடந்தார். அவர் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது தெரியாமல் இருந்தது.

    இதுகுறித்து ராயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். கொலையாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர் ராஜா ராபர்ட், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. கடந்த 2 மாதமாக இந்த கொலையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது.

    இந்நிலையில் தமிழகம் முழுவதும் மாயமானவர்கள் பற்றிய விபரங்களை போலீசார் சேகரித்தனர். அப்போது உடல் மீட்கப்பட்ட அதே நாளில் திருவாரூர் அருகே தென்பாடியைச் சேர்ந்த லட்சுமணன் என்பவரது மகன் விஜயராகவன் (வயது 31) மாயமாகி இருந்தார்.

    இதையடுத்து அவரது பெற்றோரை அழைத்து போலீசார் விசாரித்தனர். அப்போது கொலையுண்ட வாலிபர் விஜயராகவன் என்பது தெரிந்தது. அவரது உடலை பெற்றோர் அடையாளம் காட்டி உறுதி செய்தனர்.

    விசாரணையில் மலேசியாவில் ஏற்பட்ட கள்ளக்காதல் பிரச்சனையில் விஜய ராகவனை தீர்த்துக்கட்டியது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

    விஜயராகவன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மலேசியாவுக்கு கூலி வேலைக்காக சென்று இருக்கிறார். அப்போது அங்குள்ள திருமணமான ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இது அந்த பெண்ணின் கணவருக்கு தெரிந்ததும் பிரச்சனை ஆரம்பமானது.

    இதையடுத்து விஜயராகவன் சொந்த ஊருக்கு திரும்பி வந்து விட்டார். எனினும் அந்த பெண் அடிக்கடி தமிழகம் வந்து விஜயராகவனுடன் சேர்ந்து ஜாலியாக சுற்றி உள்ளார்.

    கடந்த ஏப்ரல் மாதம் 13-ந்தேதி அந்த பெண் மீண்டும் தமிழகம் வந்துள்ளார். அவருடன் விஜய ராகவன் சேர்ந்து சுற்றி இருக்கிறார். கடைசியாக திருச்சி வரை அவர்கள் சென்றுள்ளனர். அதன் பின்னர் விஜயராகவன் மாயமாகி உள்ளார்.

    எனவே திருமணம் செய்ய வற்புறுத்தியதால் கள்ளக்காதலியே கூலிப்படையை ஏவி விஜயராகவனை தீர்த்து கட்டியிருக்கலாம். அல்லது கள்ளக்காதலை அறிந்த அந்த பெண்ணின் கணவர் கூலிப்படையை ஏவி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதுதொடர்பாக போலீசாரிடம் கேட்டபோது, கொலையுண்ட விஜயராகவனின் சட்டை பையில் தாம்பரத்தில் இருந்து கடற்கரை வரை எடுக்கப்பட்ட மின்சார ரெயில் டிக்கெட் இருந்தது. எனவே கொலையை திட்டமிட்டு மர்மகும்பல் அரங்கேற்றி உள்ளனர்.

    இதில் தொடர்புடைய மலேசிய பெண்ணிடம் விசாரணை நடத்தினால்தான் முழுவிபரம் தெரியவரும். அவரை பிடிக்க இன்டர் போல் போலீசை நாடி உள்ளோம் என்றார். #Tamilnews
    Next Story
    ×