search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பந்தலூர் அருகே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட காட்டு யானை சிகிச்சை பலனின்றி இறப்பு
    X

    பந்தலூர் அருகே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட காட்டு யானை சிகிச்சை பலனின்றி இறப்பு

    பந்தலூர் அருகே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட காட்டு யானை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது.
    பந்தலூர்:

    பந்தலூர் தாலுகா படச்சேரி பகுதியில் ஏராளமான குடும்பங்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த கிராமத்தை ஒட்டி அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளன. இங்கு காட்டு யானைகள், காட்டெருமைகள், மான்கள் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இந்த கிராமத்திற்குள் காட்டு யானை ஒன்று புகுந்தது. உடல் மெலிந்த நிலையில் காணப்பட்ட அந்த காட்டு யானை, அங்கும், இங்குமாக சுற்றி திரிந்தது. பின்னர் அங்குள்ள ஒரு நடைபாதையில் படுத்து விட்டது. இந்த தகவல் அந்த பகுதியில் பரவியதால் ஏராளமான பொதுமக்கள் காட்டு யானையை காண குவிந்தனர்.

    காட்டு யானை குறித்து சேரம்பாடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் கூடலூர் கோட்ட வன அதிகாரி ராகுல், வனச்சரகர்கள் மனோகரன், கணேசன் மற்றும் வனத்துறை ஊழியர்கள் ராஜேஸ் குமார், மாதவன், சங்கர், ஆலன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    அங்கு காட்டு யானை உயிருக்கு போராடி கொண்டு இருப்பதை பார்த்தனர். இதனை தொடர்ந்து கால்நடை டாக்டர் வரவழைக்கப் பட்டு காட்டு யானைக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர். ஆனால் பொதுமக்கள் தொடர்ந்து அங்கு குவிந்ததால், பாதுகாப்பு கருதி காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு செல்ல முடிவு செய்தனர். இதற்காக கிரேன் வரவழைக்கப்பட்டு, ஒரு லாரியில் காட்டு யானை தூக்கி வைக்கப்பட்டது.

    இதன்பின்னர் காட்டு யானை அருகில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு வைத்து சேரம்பாடி கால்நடை டாக்டர் பிரபு காட்டு யானைக்கு சிகிச்சை அளித்தார்.

    ஆனால் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் காட்டு யானை இறந்தது. இறந்த பெண் காட்டு யானைக்கு சுமார் 35 வயது இருக்கும். பின்னர் காட்டு யானை பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அங்கு புதைக்கப் பட்டது.

    இதுகுறித்து வனத்துறை யினர் கூறியதாவது:-

    இறந்த பெண் யானையின் நாக்கில் புண் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த காட்டு யானையால் சரியாக சாப்பிட முடியவில்லை. இதனால் உடல் மெலிந்து பலவீனமான நிலையில் இருந்த யானை, சிகிச்சை பலனின்றி இறந்து உள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே இதுகுறித்து விரிவாக தெரியவரும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். 
    Next Story
    ×