என் மலர்
செய்திகள்

வரதட்சணை கொடுமை: மதுரை அருகே இளம்பெண் எரித்துக் கொலை?
மதுரை:
மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள காயாம்பட்டி மேடு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி. இவரது மனைவி நந்தினி (வயது 22).
இவர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது 10 பவுன் நகை மற்றும் மோட்டார் சைக்கிள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் பாண்டி, அவரது தாயார் ராணி, உறவினர்கள் பாண்டிச் செல்வி, பாண்டிசெல்வம், ராமச்சந்திரன் ஆகியோர் கூடுதலாக வரதட்சணை கேட்டு நந்தினியை சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக நந்தினி தனது தந்தை அமராவதியிடம் செல்போனில் அடிக்கடி தகவல் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தன்று நந்தினி வீட்டில் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக உறவினர்கள் மூலம் கிடைத்த தகவலின் பேரில் அமராவதி அங்கு சென்று பார்த்தார். அங்கு வீட்டில் கருகிய நிலையில் நந்தினி பிணமாக கிடந்தார்.
வேறு யாரும் இல்லாததால் அவர் எரித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து அமராவதி மதுரை ஒத்தக்கடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தீயில் கருகி பிணமான நந்தினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வரதட்சணை கொடுமையில் நந்தினி எரித்துக் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆனால் நந்தினியின் கணவர் பாண்டி மற்றும் அவரது உறவினர்கள் அனைவரும் தலைமறைவாகி விட்டதால் நந்தினி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இது தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.






