search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஜினிகாந்த் கோவையில் மாநாடு நடத்த முடிவு?
    X

    ரஜினிகாந்த் கோவையில் மாநாடு நடத்த முடிவு?

    ரஜினி மக்கள் மன்றத்தின் முதலாவது மாநாட்டை கோவையில் பிரமாண்டமாக நடத்துவது பற்றி இன்றைய கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது. #Rajinikanth #RajiniMakkalMandram
    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் குதிக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக தனது ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றி மாவட்ட வாரியாக நிர்வாகிகளை நியமனம் செய்துள்ளார்.

    ரஜினிகாந்த் அடிக்கடி ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நேரிலும், வீடியோ கான்பரன்சிங் முறையிலும் கலந்துரையாடி ஆலோசனைகள் வழங்கி வருகிறார். மன்ற பணிகளையும் தீவிரப்படுத்தி உள்ளார்.

    இந்த நிலையில் ‘காலா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை ரஜினிகாந்த் நேற்று சென்னை ஒய்.எம்.சி.ஏ. விளையாட்டு மைதானத்தில் பிரமாண்டமாக நடத்தினார்.

    இதில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் மத்தியில் ரஜினிகாந்த் பேசுகையில், “யார் என்ன சொன்னாலும் நான் எனது பாதையில் செல்வேன். நதிகளை இணைப்பதே எனது கனவு. எனக்கு கடமை இருக்கிறது. அதற்கான நேரம் வரும். அப்போது ஆண்டவன் ஆசீர்வாதத்தால் மக்களின் ஆதரவினால் தமிழக மக்களுக்கு நல்ல நேரம் பிறக்கும்” என்றார்.

    ரஜினியின் இந்தப் பேச்சால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இன்று அவர் தனது மன்ற பணிகளை மேலும் தீவிரப்படுத்தி உள்ளார்.

    இதற்காக அனைத்து மாவட்ட மன்ற நிர்வாகிகளையும் ரஜினிகாந்த் சென்னை வரவழைத்து போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் அவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.



    காலை 10.45 மணிக்கு தொடங்கிய கூட்டம் 12 மணி வரை நடைபெற்றது. மாவட்டங்களில் இருந்து வந்த முக்கிய நிர்வாகிகள் 32 பேர் கலந்து கொண்டனர். அவர்களுடன் தலைமை நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

    தமிழ்நாடு முழுவதும் மன்றத்தின் உள்கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும், பஞ்சாயத்து, ஒன்றியம், நகரம், மண்டலம் வாரியாக மன்றத்தின் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் இந்தப் பணிகளை வருகிற ஜூன் 2-ந்தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றும் ரஜினிகாந்த் ஆலோசனைகள் வழங்கினார்.

    ரஜினி மக்கள் மன்றத்தின் முதலாவது மாநாட்டை பிரமாண்டமாக நடத்துவது பற்றியும் இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிய வருகிறது.

    மேற்கு மண்டலத்தில் கோவையில் அடுத்த மாதம் இந்த மாநாடு நடைபெறலாம் என்றும் இதற்காகத்தான் 2-ந்தேதிக்குள் கட்டமைப்பை பலப்படுத்தும் பணியை முடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    ரஜினி நடத்திய ஆலோசனை கூட்டம் முடிந்தபின் மன்ற நிர்வாகிகள் சிலர் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.

    அப்போது அவர்கள் ஜூன் 2-ந்தேதிக்குள் ரஜினி மன்ற உள்கட்டமைப்பை பலப்படுத்துவது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிவித்தனர்.

    ரஜினியின் அரசியல் கட்சி எப்போது தொடங்கப்படும் என்று கேட்டபோது, “ரஜினி வந்தாலும் வராவிட்டாலும் அவர் பின்னால் நாங்கள் அணிவகுத்து நிற்போம்” என்று கூறினார்கள். #Rajinikanth #RajiniMakkalMandram

    Next Story
    ×