search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வணிகர் சங்க பேரமைப்பு மாநாடு: மு.க.ஸ்டாலின்-அனைத்துக்கட்சி தலைவர்கள் பங்கேற்பு
    X

    வணிகர் சங்க பேரமைப்பு மாநாடு: மு.க.ஸ்டாலின்-அனைத்துக்கட்சி தலைவர்கள் பங்கேற்பு

    விக்கிரமராஜா தலைமையில் வணிகர் சங்க பேரமைப்பு மாநாடு இன்று தொடங்கியது. இதில் மு.க.ஸ்டாலின்-அனைத்துக்கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். #mkstalin #vanigarsangam #vikramaraja

    சென்னை:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 35-வது வணிகர் தினம், இந்திய வணிகர் உரிமை மீட்பு மாநாடாக சென்னை வேலப்பன்சாவடியில் இன்று தொடங்கியது. இதற்காக திருவேற்காடு சாலையில் உள்ள 100 ஏக்கர் நிலப்பரப்பில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் நிர்வாகிகள் திடலுக்கு வந்ததும் தென் சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் என்.டி.மோகன் தலைமையில் மாநில துணைத்தலைவர் ஆவடி அய்யார்பவன் அய்யாத்துரை மாநாட்டு பந்தலில் வணிகக் கொடியை ஏற்றி வைத்தார்.

    அதனை தொடர்ந்து மத்திய சென்னை மாவட்ட தலைவர் எஸ்.சாமுவேல் தலைமையில் செயலாளர் ஷேக் முகைதீன் வரவேற்புரையுடன் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    இதில் மத்திய சென்னை மாவட்ட பொருளாளர் வி.வினோத்பாபு முன்னி லையில் பேரமைப்பு நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

    அதனை தொடர்ந்து காலை 9 மணியளவில் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் மாநாடு தொடங்கியது.

    பொதுச் செயலாளர் கோவிந்தராஜூலு வரவேற் றார். தொழில் அதிபர்கள் ஜெயமுருகன், அப்துல்சலாம், கிருஷ்ணமூர்த்தி, ஜெயந்திலால் ஜெலானி, ராஜேந்திரன் ஆகியோர் குத்துவிளக்கேற்றினார்கள்.

    மாநில பொருளாளர் ஏ.எம்.சதக்கத்துல்லா மாநாட்டு தீர்மானங்களை வாசித்தார். இதில் சென்னை மண்டலத் தலைவர் கே.ஜோதிலிங்கம், ஆம்பூர் கிருஷ்ணன், பண்ருட்டி சண்முகம், பொன்னேரி ஜெயபால், காஞ்சி அமல்ராஜ், திண்டுக்கல் கிருபாகரன், திருச்சி தமிழ்செல்வம், சூலூர் சந்திரசேகரன் உள்பட முக்கிய வணிக தலைவர்கள், மாவட்ட தலைவர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.

    இதில் அகில இந்திய வணிகர்கள் சம்மேளன தேசிய தலைவர் பி.சி.பார்டியா, தேசிய பொதுச் செயலாளர் பிரவீன் கண்டேல்வால் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

    மாநாட்டில் முதுபெரும் வணிகர் பெருமக்களுக்கு வ.உ.சி. வணிகச்செம்மல் விருதுகளை அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், பா.பெஞ்சமின் வழங்கி சிறப்புரையாற்ற உள்ளனர்.

    இதைத் தொடர்ந்து தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் வணிகர்களின் வாரிசுகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கி விழா பேருரையாற்றுகிறார்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பால கிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா பங்கேற்று பேசுகின்றனர்.

    இன்று மாலை 3 மணிக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் சிறப்புரையாற்றுகின்றனர்.

    இன்று நடைபெற்ற மாநாட்டில் தமிழ்நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான வணிகர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

    வணிகர்கள் தங்களது கடைகளுக்கு விடுமுறை அளித்து பங்கேற்றதால், அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது.


    மாநாட்டு திடலில ஒவ்வொரு தயாரிப்பு நிறுவனங்களின் ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்ததை ஏராளமான வணிகர்கள் பார்வையிட்டனர்.

    மாநாட்டில் மாவட்ட தலைவர்கள் கே.ஜோதிலிங்கம், என்.டி.மோகன், அயனாவரம் சாமுவேல், ஆதிகுருசாமி, கூடுதல் செயலாளர் வி.பி.மணி, ராஜ்குமார், சம்பத்குமார், செய்தி தொடர்பாளர் பாண்டியராஜன், எட்வர்டு, நடராஜன், நிர்வாகிகள் தேசிகன், சின்லைன், ஆர்.எம். பழனியப்பன், எஸ்.பி. சண்முக சுந்தரம், ஷேக் முகைதீன், வினோத்பாபு, ஹாஜி முகம்மது, ராபர்ட், தங்க பெருமாள், பெரியசாமி, பிரபாகரன், மகேஸ்வரன், தங்கவேல், எம்.கிருஷ்ணன், அனீஸ்ராஜா, அடையார் பாஸ்கர், வி.பால்ராஜ் சிவக்குமார், அயனாவரம் கே.ஏ.மாரியப்பன், இளைஞரணி அமைப்பாளர் பால்ஆசீர், பழம்பொருள் அணி தென் சென்னை தெற்கு மாவட்ட தலைவர் பூவை ஜெ.ஜெயக்குமார், இ.எம்.ஜெயக்குமார், ஆர்.கே.எம்.துரைராஜன், அய்யார்பவன் அய்யாத் துரை, சி.மனோகரன் உள்பட லட்சக்கணக்கான வியாபாரிகள் பங்கேற்றனர்.

    மாநாட்டில் பங்கேற்றுள்ள தென்சென்னை மேற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட சங்கத்தில் உள்ளவர்களில் கடைசிவரை 25 நிர்வாகிகள் பங்கேற்கும் சங்கத்துக்கு குலுக்கல் முறையில் ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் மதிப் புள்ள மாருதிவேன் பரிசாக வழங்கப்படுகிறது. மண்டலத் தலைவர் கே.ஜோதிலிங்கம் ஏற்பாட்டில், மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வழங்குகிறார்.

    இதேபோல் மத்திய சென்னை மாவட்டத் தலைவர் அயனாவரம் சாமுவேல் ஏற்பாட்டில் தங்க காசுகள் வழங்கப்படுகிறது.

    மாநாட்டில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    * இந்திய வணிகர்களின் உரிமைகளை மீட்டெடுக்கவும், தொழில் அமைப்பினை பாதுகாக்கவும், மத்திய மாநில அரசுகள் வணிகம் சம்பந்தமான சட்டங்களை இயற்றும் போது, வணிக அமைப்பு பிரதிநிதிகளின் குழுக்கள் அமைத்து அவசியம் கலந்தாய்வு செய்துசட்டங்கள் இயற்றி அமல்படுத்த வேண்டும்.

    * நிரந்தர உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய சட்ட உரிமம் அபராதம், சிறைத் தண்டனை சட்டங்களில் மாற்றம், சாலையோர கடைகளை முறைப்படுத்த வேண்டும்.

    * சிறு குறு வணிகர்களுக்கு இ-வே பதிவு மையங்கள் அமைத்து செயலாற்றி கொள்ள மத்திய, மாநில அரசுகள் உதவிட வேண்டும்.

    * புதிய தொழில் முனைவோர் பயன்பெறும் வகையில் முத்ரா வங்கி திட்டத்தை விரிவுபடுத்தி அனைத்து தரப்பு வணிகர்களும் பயன்படுத்தி கொள்ளும் வகையில் வங்கி கடன் உதவி மையங்கள் அமைத்து செயல்படுத்த வேண்டும்.

    * நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டண உயர்வை நீக்க வேண்டும்.

    * தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுமக்கள் மற்றும் வணிகர்களின் நலன் கருதியும், அரசுக்கு பல கோடி ரூபாய் வரி இழப்பு ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டும் கடையடைப்பு கூடாது என்பதே பேரமைப்பு சமுதாய நலன் கருதி தீர்மானமாக முன்பொழிகிறது.

    * வருமான வரித்துறை உச்சவரம்பு தனி நபருக்கு 5 லட்சமாக உயர்த்தி மத்திய அரசு அறிவித்திட வேண்டும்.

    * வணிகர் குடும்ப காப்பீட்டுத் திட்டம் குறைந்த பட்சம் ரூ.20 லட்சம் வழங்க வேண்டும்.

    * நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்களை போல் ஜி.எஸ்.டி. பதிவு செய்துள்ள வணிகர்களுக்கும் ஓய்வூதியம் அளித்திட வேண்டும்.

    * பொட்டல பொருட் களுக்கு உரிமம் பெற வேண்டும் என்ற நடைமுறையை தவிர்த்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    * எடையளவு தண்டனை சட்டங்களில் அபராதம் ரூ.5 ஆயிரமாக உயர்த்தி இருப்பதற்கு கண்டனம் தெரிவிக்கிறது.

    * அறநிலைய உள்ளாட்சித்துறை கடைகள் வாடகை நிர்ணயம் பெயர் மாற்றம் வாடகை தாரர்கள் பெயரிலேயே கடை மாற்றம் செய்ய வேண்டும்.

    * இளைய தலைமுறையினருக்கு வணிகத்தை ஊக்குவிக்க மண்டல மாவட்டங்களில் ஆலோசனை மையங்கள் அமைத்தல்.

    * இளைய தொழில் முனைவோருக்கு உதவிகள் செய்திட வணிக பேரமைப்பு நிதி மையங்கள் அமைப்பதற்கான அறிக்கை சமர்பிக்க குழு அமைத்தல்.

    * அத்தியாவசிய உணவு பொருட்களான பிராண்டடு அரிசி, பருப்பு, மிளகாய், புளி, தனியா, மஞ்சள், மிளகு, சீரகம், வெந்தயம், கடுகு போன்ற பொருட்களுக்கு முழுமையான ஜி.எஸ்.டி. வரி விலக்கு அளிக்க வேண்டும்.

    * வேளாண்மை உற்பத்தி பொருட்களுக்கு கொள்முதல் செய்து எடுத்து வரும் நிலையில் செஸ் வரி விதிக்காமல் உற்பத்தி மையங்களிலே நடைமுறை படுத்த வேண்டும். விவசாய விளை பொருட்களுக்கு உற்பத்தி விலையில் 50 சதவீதம் உயர்வு வழங்க வேண்டும்.

    * பிளாஸ்டிக், புகையிலை, குட்கா போன்றவற்றை உற்பத்தி நிலையிலேயே தடை செய்ய வேண்டும். சில்லரை வியாபாரிகளுக்கான அச்சுறுத்தலை தடுத்திட வேண்டும்.

    * வணிகர் நல வாரியத்தால் வணிக பிரதிநிதிகளை நியமித்து வாரியத்தை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    * வணிக பயன்பாட்டு பிளாஸ்டிக்குக்களுக்கு திடக்கழிவு மேலாண்மை சட்டத்தில் திருத்தங்கள் செய்து பயன்படுத்த முடியாத பிளாஸ்டிக் பொருட்களை தயாரிப்பு நிலையிலேயே தடை செய்து வணிகர்களை காக்க வேண்டும்.

    * விலை உயர்வுக்கு காரணமான டீசல், பெட்ரோல் எரி பொருட்களை ஜி.எஸ்.டி.க்குகள் கொண்டு வர வேண்டும்.

    * ஸ்மாட் சிட்டி அறிவிப்பால் தஞ்சை காமராஜ் மார்க்கெட் வணிகர்கள் பாதிக்கப்படாத வகையில் வாடகை உயர்வை அமல்படுத்தி மாநகராட்சி நிர்வாகமே வசூலிக்க வேண்டும். #tamilnews #mkstalin #vanigarsangam #vikramaraja

    Next Story
    ×