search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குட்கா வழக்கு: சி.பி.ஐ. அலுவலகத்தில் தி.மு.க. மனு
    X

    குட்கா வழக்கு: சி.பி.ஐ. அலுவலகத்தில் தி.மு.க. மனு

    குட்கா வழக்கில் விசாரணையை விரைவில் தொடங்க வேண்டும் என்று சென்னை சி.பி.ஐ. அலுவலகத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் மனு அளித்தார்.
    சென்னை:

    தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை விற்ணீபனை செய்வதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உள்பட அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக புகார்கள் எழுந்தது.

    இதுதொடர்பாக தி.மு.க. மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். அதில், அவர் சி.பி.ஐ. விசாரணை கோரியிருந்தார். இந்த வழக்கு கடந்த வாரம் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது தமிழக அரசு சார்பில் சி.பி.ஐ. விசாரணை தேவை இல்லை என்று வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த பின்னர் குட்கா வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தீர்ப்பு வழங்கினார்.

    சென்னை ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யலாம் என்று தகவல் வெளியானது. இதையடுத்து ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. சார்பில் சுப்ரீம்கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.

    இந்தநிலையில் குட்கா வழக்கில் விசாரணையை விரைவில் தொடங்க வேண்டும் என்று சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரிபவனில் இயங்கும் சி.பி.ஐ. இணை இயக்குனர் அலுவலகத்தில் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. நேற்று மனு அளித்தார்.

    இதுதொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    குட்கா வழக்கில் அ.தி.மு.க. முக்கிய பிரமுகர்கள், போலீஸ் டி.ஜி.பி., போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்டு உள்ளதாக வருமான வரித்துறை சொல்லியிருக்கிறது. எனவே சி.பி.ஐ. விசாரித்து உண்மையை வெளிக்கொணர வேண்டும் என்பது தான் எங்கள் எண்ணம்.

    அடுத்த வாரத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறும் என்று சி.பி.ஐ. அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். எனவே நம்பிக்கையுடன் இருப்போம். மீண்டும் தாமதமாகும் பட்சத்தில் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அதிகாரிகளை சந்தித்து வலியுறுத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×