search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு தொடங்கியது
    X

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு தொடங்கியது

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. இதற்காக 2,794 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. #Plus2Exam #PublicExam
    சென்னை:

    தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத் தேர்வு இன்று தொடங்கியது.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 6 ஆயிரத்து 903 மேல் நிலைப்பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவ-மாணவிகளும், 40 ஆயிரத்து 686 தனித்தேர்வர்களும் என 9 லட்சத்து 7 ஆயிரத்து 620 பேர் எழுதினர்.

    இதற்காக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2,794 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. தேர்வுப் பணியில் 95 ஆயிரம் ஆசிரியர்கள், ஊழியர்கள் ஈடுபட்டுத்தப்பட்டனர்.

    தேர்வு எழும் மாணவ- மாணவிகள் காலையிலேயே கோவில், ஆலயங்களுக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்தனர். தேர்வை சிறப்பாக எழுத வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டனர்.

    காலை 9 மணிக்கே மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வந்தனர். அவர்கள் தேர்வுக்கு முன்பு பாடங்களை மீண்டும் ஒருமுறை மும்முரமாக படித்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு ஆசிரியர்கள் ஆலோசனைகளை வழங்கினார்கள்.

    முதல் நாளான இன்று தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களில் முதல்நாள் தேர்வு நடந்தது. தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கியது. முதல் 10 நிமிடம் வினாத்தாள்களை படித்து பார்ப்பதற்கும், அடுத்த 5 நிமிடம் விடைத்தாளில் உள்ள விவரங்களை சரிபார்ப்பதற்கும் அனுமதிக்கப்பட்டது. மதியம் 1.15 மணிக்கு தேர்வு முடிவடைகிறது.

    தேர்வில் மாணவர்கள் காப்பி அடித்தல், ‘பிட்’ அடித்தல் உள்ளிட்ட ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவதை தடுக்க 4 ஆயிரம் பறக்கும் படை அமைக்கப்பட்டன.


    அவர்கள் தேர்வு மையங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். தேர்வு மைய வளாகத்துக்கு செல்போன்களை கொண்டு வருவதற்கு தடை விதிக்கப்பட்டது. தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களும் செல்போன் வைத்துக் கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.

    காது கேளாதோர், வாய் பேச இயலாதோர், பார்வையற்றோர், மாற்று திறனாளிகளுக்கு தேர்வு மையங்களில் தரை தளத்தில் தனி அறைகள் ஒதுக்கப்பட்டு இருந்தன.

    புழல், வேலூர், கடலூர், சேலம், கோவை, மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி, சிறைகளில் உள்ள 103 ஆண் கைதிகள் தேர்வு எழுத புழல் சிறையில் தேர்வு மையம் அமைக்கப்பட்டது. அதில் கைதிகள் பிளஸ்-2 தேர்வை எழுதினார்கள்.

    பிளஸ்-2 தேர்வு ஏப்ரல் மாதம் 6-ந் தேதி முடி வடைகிறது.

    இன்று தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

    தேர்வு எழுதும் அனைத்து தமிழக மாணவ-மாணவிகளுக்கு வாழ்த்துக்கள்.

    இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார். #Plus2Exam #PublicExam #TamilNadu #Puducherry #Tamilnews
    Next Story
    ×