search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாடு முழுவதும் 117 ஆறுகளில் நீர்வழி போக்குவரத்து தொடங்கப்படும் - நிதின் கட்காரி தகவல்
    X

    நாடு முழுவதும் 117 ஆறுகளில் நீர்வழி போக்குவரத்து தொடங்கப்படும் - நிதின் கட்காரி தகவல்

    நாடு முழுவதும் 117 ஆறுகளில் நீர்வழி போக்குவரத்து தொடங்கப்படும் என்று சென்னையில் நடந்த விழாவில் மத்திய மந்திரி நிதின் கட்காரி தெரிவித்தார்.
    சென்னை:

    சென்னை அருகே உள்ள தையூரில் நீர்வழி போக்குவரத்து, கடல் மற்றும் துறைமுகங்களுக்கான தேசிய தொழில்நுட்ப மையம் 400 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ளது.

    இதற்கான கட்டுமான பணிகள் முடியும் வரை தற்காலிகமாக சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் தேசிய தொழில்நுட்ப மையம் இயங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    தேசிய தொழில்நுட்ப மைய அடிக்கல் நாட்டு விழா சென்னை ஐ.ஐ.டி.யில் நடந்தது. விழாவில் அடிக்கல் நாட்டி மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நீர்வளத்துறை மந்திரி நிதின் கட்காரி பேசியதாவது:-

    துறைமுகங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமானது. துறைமுகங்களை மேம்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி, துறைமுகங்களின் வருவாய் இலக்கு ரூ.7 ஆயிரம் கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ‘சாகர் மாலா’ திட்டத்தில் துறைமுகங்களை ரூ.15 லட்சம் கோடி செலவில் மத்திய அரசு மேம்படுத்தி வருகிறது.

    இவற்றில் சாலை மற்றும் ரெயில் நிலையங்களை துறைமுகங்களுடன் இணைக்கும் திட்டத்துக்காக மட்டும் ரூ.4 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.2 லட்சத்து ரூ.80 ஆயிரம் கோடி மதிப்பிலான பணிகள் நடந்து வருகிறது.

    மேலும் துறைமுகங்களை சுற்றிலும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள், கடலோர பொருளாதார மண்டலங்கள், தொழிற்சாலை தொகுப்புகள் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.

    துறைமுகங்களின் மேம்பாட்டுக்கு அறிவுசார்ந்த தொழில்நுட்பம் தேவைப்படுகிறது. அதற்காக, ஐ.ஐ.டி.யுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். துறைமுகம், கடலோர தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கு சென்னை ஐ.ஐ.டி.யுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளோம். இதனால் ஆண்டுக்கு அரசுக்கு ரூ.250 கோடி மிச்சமாகும்.

    கடல் போக்குவரத்துக்கு டீசலுக்கு பதிலாக, மெத்தனால் எரிபொருளை பயன்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம். இதனால் மாசு குறைவதோடு, எரிபொருளும் மிச்சமாகும்.

    நாடு முழுவதிலும் 117 ஆறுகளை நீர்வழி போக்குவரத்துக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர் பேசினார். #tamilnews
    Next Story
    ×