என் மலர்

  செய்திகள்

  ஸ்ரீதேவி மறைவு: கவர்னர், அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்
  X

  ஸ்ரீதேவி மறைவு: கவர்னர், அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நடிகை ஸ்ரீதேவி மறைவிற்கு கவர்னர், முதல்வர் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். #Sridevi
  சென்னை:

  கவர்னர் பன்வாரிலால் புரோகித்:- நடிகை ஸ்ரீதேவியின் மறைவு எனக்கு மிகுந்த வருத்தத்தையும், அதிர்ச்சியையும் அளித்தது. பன்முகத்தன்மை கொண்ட அவர் தனது திறமை மற்றும் அறிவாற்றலாலும் திரை உலகில் கொடி கட்டி பறந்தார். தமிழகத்தின் மகளான அவர் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பெரும் புகழும், கவுரவமும் பெற்றார்.

  அவரை இழந்து வாழும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா அமைதி அடைய கடவுளை பிரார்த்திக்கிறேன்.

  முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

  புகழ்பெற்ற திரைப்பட நடிகை ஸ்ரீதேவி துபாயில் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயரம் அடைந்தேன்.

  திரைப்பட நடிகை ஸ்ரீதேவி சிறு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் அடியெடுத்து வைத்து, பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களில் நடித்த பெருமைக்குரியவர். நடிப்பில் பன்முகத்தன்மை கொண்டவர்.

  இவர் தமிழில் நடித்த 16 வயதினிலே, மூன்றாம் பிறை, சிவப்பு ரோஜாக்கள், பிரியா, வறுமையின் நிறம் சிவப்பு போன்ற திரைப்படங்கள் இவரின் நடிப்புத் திறமைக்கு சான்றாகும்.

  ஸ்ரீதேவி தனது நடிப்புத் திறமைக்காக பத்மஸ்ரீ விருது, பிலிம்பேர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்ற பெருமைக்குரியவர் ஆவார்.

  அனைவரிடமும் அன்பாக பழகக்கூடியவரும், சுமார் 50 ஆண்டுகாலமாக திரைத்துறையில் தனக்கென தனி முத்திரை பதித்தவருமான நடிகை ஸ்ரீதேவியின் மறைவு தமிழ் திரையுலகிற்கு மட்டுமின்றி இந்திய திரையுலகிற்கே ஒரு பேரிழப்பாகும்.

  ஸ்ரீதேவியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:- துடிப்பான, அசாதாரண நடிகை ஸ்ரீதேவியின் மறைவு துரதிருஷ்டவசமானது. ஸ்ரீதேவியின் புகழ்பெற்ற வாழ்க்கை தலைமுறைகளை தாண்டியது.

  மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன்:- 16 வயதினிலே, மூன்றாம் பிறை போன்ற திரைப்படங்கள் மூலம் தமிழ்த்திரை உலகில் தனக்கென தனி முத்திரை பதித்தவரும், தமிழ்த்திரை உலகிலிருந்து பாலிவுட் என சொல்லப்படும் இந்தி திரைத்துறையில் பல்லாண்டுகள் கோலோச்சியவருமான நடிகை ஸ்ரீதேவியின் திடீர் மறைவு திரைத்துறைக்கும், கலைத்துறைக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

  தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்:- தமிழக திரையுலகிலும் இந்திய திரை உலகிலும் தமிழ், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து தன் ஒப்பற்ற நடிப்பாற்றலால் திரையுலகில் புகழ்கொடி நாட்டியவர் ஸ்ரீதேவி. பத்மஸ்ரீ விருது உள்பட பல்வேறு விருதுகளை பெற்றவர். பலகோடி ரசிகர்களை பெற்றவர். அவரது திடீர் மறைவை நம்பமுடியவில்லை. மிகவும் துரதிஷ்டவசமானது. மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அளிக்கிறது. தமிழகத்திற்கு புகழும், பெருமையும் சேர்த்த நடிகை ஸ்ரீதேவியின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

  விஜயகாந்த்:- நடிகை ஸ்ரீதேவி துபாயில் திடீர் என மாரடைப்பால் காலமானார் என்கிற செய்தி கேட்டு பேர் அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். அவர் திரையுலகில் சிறுவயது முதல் எத்தனையோ கதாப்பாத்திரத்தில் நடித்து லட்சக்கணக்கான ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர். அவரது இழப்பு திரையுலகிற்கு மிகப்பெரிய ஈடுசெய்ய முடியாத ஒரு இழப்பாகும். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

  சத்தீஸ்கர் முதல்வர் ராமன்சிங்:- ஸ்ரீதேவியின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. எப்போதும் நினைவில் இருக்கும் பல கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர்.

  ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு:- ஈடு இணையற்ற நடிப்புத் திறமையை கொண்டவர். பல்வேறு மொழிகளில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர்.

  தெண்டுல்கர்:- நடிகை ஸ்ரீதேவி நம்மிடையே இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது. ஸ்ரீதேவியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். #Sridevi #EdappadiPalanisamy
  Next Story
  ×