என் மலர்
செய்திகள்

விமானம் மூலம் மிக்சியில் மறைத்து 2½ கிலோ தங்கம் கடத்தல்
ஆலந்தூர்:
வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் தங்கம் கடத்தி வரப்படுவதாக செனனை விமான நிலைய சுங்க துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து விமானங்களில் சுங்க துறையினர் இன்று அதிகாலை தீவிர சோதனை நடத்தினர்.
துபாய் மற்றும் பக்ரைன் விமானத்தில் பயணம் செய்தவர்களின் உடமைகள் சோதனை செய்யப்பட்டன. அப்போது பக்ரைன் விமானத்தில் வந்த சந்தன பாஷா (34) என்பவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தார்.
சந்தேகமடைந்து அவர் கொண்டு வந்த மிக்சியை பிரித்து பார்த்தனர். உள்ளே தங்க கட்டிகளை மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் இருந்து 1 கிலோ 200 கிராம் தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
அதே போன்று சார்ஜாவில் இருந்து வந்த விமான பயணிகளின் உடமைகள் பரிசோதிக்கப்பட்டன. அப்போது பயாஸ்அகமது (30) என்பவரும் மிக்சியில் மறைத்து தங்க கட்டிகள் கடத்தி வந்தது தெரிய வந்தது.
அவரிடம் இருந்து 1 கிலோ 300 கிராம் தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. 2 பேரிடம் இருந்தும் பறிமுதல் செய்யப்பட்ட 2½ கிலோ தங்கத்தின் மதிப்பு ரூ.70 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் தங்கம் கடத்தி வந்த சந்தனபாஷா, பயாஸ் அகமது ஆகிய 2 பேரிடமும் சுங்க துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






