search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குட்கா ஊழல் வழக்கு தீர்ப்பு தள்ளிவைப்பு: ஐகோர்ட்டு உத்தரவு
    X

    குட்கா ஊழல் வழக்கு தீர்ப்பு தள்ளிவைப்பு: ஐகோர்ட்டு உத்தரவு

    அமைச்சர், போலீஸ் அதிகாரிகள் மீதான குட்கா ஊழல் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. #GutkaScam
    சென்னை:

    குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களால் புற்றுநோய் பலருக்கு வருவதால், இவற்றை தடை செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.

    புகையிலை பொருட்களை விற்பனை செய்யவும், குடோன்களில் சேமித்து வைக்கவும் தடை விதிக்கப்பட்டது.

    ஆனால், தமிழக அரசின் இந்த உத்தரவை மீறி பலர் சட்ட விரோதமாக புகையிலை பொருட்களை தமிழகத்தில் தாராளமாக விற்பனை செய்தனர். இதற்காக அமைச்சர், உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு பல லட்சம் ரூபாய் லஞ்சம் வழங்கப்படுவதாகவும் கூறப்பட்டது.

    இந்த நிலையில், குட்கா புகையிலை பொருட்களை தமிழகத்தில் சட்ட விரோதமாக விற்பனை செய்து வந்த சீனிவாசராவ் என்பவரது அலுவலகம், வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது, குட்கா விற்பனைக்கு தமிழக அமைச்சர், முன்னாள் போலீஸ் கமி‌ஷனர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு மாதம் தோறும் பல லட்சம் ரூபாய் மாமூல் கொடுக்கப்பட்டதற்கான ஆவணங்கள் சிக்கின.

    இதுகுறித்து தமிழக தலைமை செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு வருமான வரித்துறை இயக்குனர் கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்துடன், தாங்கள் கைப்பற்றிய ஆதார ஆவணங்களையும் இணைத்திருந்தார்.

    இந்த கடிதத்தின் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் தமிழக அரசு எடுக்கவில்லை.

    இந்நிலையில், இந்த குட்கா ஊழல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு அல்லது ஐகோர்ட்டு ஓய்வுப்பெற்ற நீதிபதிகள் கண்காணிக்க வேண்டும் என்று கூறி தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன், சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கை தொடர்ந்தார்.

    தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் எஸ். ஜார்ஜ் ஆகியோரது பெயர் இந்த ஊழல் பட்டியலில் உள்ளதால், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பு வக்கீல் பி.வில்சன் வாதிட்டார்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் வாதிட்டார். இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    அப்போது அரசு தரப்பிலும், மனுதாரர் தரப்பிலும் தங்களது வாதங்களை மனுவாக தாக்கல் செய்தனர். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டனர். #Tamilnews
    Next Story
    ×