என் மலர்
செய்திகள்

ஆய்வுக்கு வரும் அலுவலர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்: கலெக்டர் வேண்டுகோள்
வயதானவர்களுக்கான சமூக பொருளாதார நிலை குறித்து ஆய்வு செய்ய வரும் அலுவலர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்து உள்ளார்.
திருவண்ணாமலை:
வயதானவர்களுக்கான சமூக பொருளாதார நிலை குறித்து ஆய்வு செய்ய வரும் அலுவலர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசு திட்டம் மற்றும் வளர்ச்சி சிறப்பு செயலாக்க துறை மூலம் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை மூலம் வயதானவர்களுக்கான சமூக பொருளாதார நிலை குறித்து தேர்ந்தெடுக்கப்பட்ட நகர்ப்புறம் மற்றும் கிராமப் புறங்களில் ஆய்வு நடத்த உத்தரவிட்டுள்ளது.
இந்த ஆய்வு 2 நிலைகளாக 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை என 8 ஆண்டு கால அளவில் நடத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 26 நகர்புற மற்றும் 69 கிராமப்புறங்களில் நடத்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள 55 வயது மற்றும் 55 வயதிற்கு மேற்பட்டோருக்கான ஆய்வு பணியினை ஒதுக்கீடு செய்யப்பட்ட புள்ளியியல் துறை அலுவலர்கள் மற்றும் குழுவினர் மூலம் அந்த கிராமங்களுக்கு நேரில் சென்று குடும்பங்களை வரிசைப்படுத்தும் பணிகளான விவரங்கள், குடும்பங்களின் எண்ணிக்கை, வேலை, வருமானம், மற்றும் 55 வயதிற்கு மேற்பட்டோர்களின் எண்ணிக்கை ஆகியவற்றை ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
2-ம் கட்ட ஆய்வில் 55 வயது மற்றும் 55 வயதிற்கு மேற்பட்டோர்களின் குடும்பங்களின் சமூக பொருளாதார நிலை மற்றும் முதியோர்களின் சமூக தொடர்பு, தனிநபர் தேவை, உடல்நிலை, வேலைவாய்ப்பு, ஓய்வு மற்றும் ஓய்வூதியம் ஆகிய விவரங்ளை சேகரிக்கும் பணி நடைபெற உள்ளது. இந்த ஆய்வின் மூலம் சேகரிக்கப்படும் விவரங்கள் எதிர்வரும் காலங்களில் வயதானவர்களின் வாழ்க்கை மேம்பாடு தொடர்பாக அரசின் திட்டமிடலுக்கு பயன்படுத்தப்பட உள்ளது.
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆய்வு பணியில் புள்ளியியல் துறை அலுவலர்கள் நகர்புறம் மற்றும் கிராமப்புறங்களில் ஆய்வு பணி மேற்கொள்ள வரும் போது பொதுமக்கள் அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பினை அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #tamilnews
Next Story






