என் மலர்
செய்திகள்

திண்டுக்கல்லில் காதலியை பிரித்ததால் வியாபாரி படுகொலை
திண்டுக்கல்:
திண்டுக்கல் முத்தழகு பட்டியை சேர்ந்த சண்முகவேல் மகன் சக்திவேல் (வயது22). மிட்டாய் கடை வைத்துள்ளார். நேற்று இரவு வியாபாரம் முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது இருட்டில் பதுங்கி இருந்த ஒரு கும்பல் அரிவாள் மற்றும் கத்தி போன்ற ஆயுதங்களால் சக்திவேலை சரமாரியாக வெட்டினர். படுகாயம் அடைந்து சரிந்து விழுந்த சக்திவேல் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இச்சம்பவம் உறவினர்களுக்கு தெரிய வரவே அங்கு திரண்டு வந்தனர்.
மேலும் முத்தழகுபட்டி பொதுமக்களும் ஏராளமானோர் அங்கு குவிந்து கொலையாளிகளை கண்டுபிடிக்க கோரி போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை சமாதானம் செய்து உடலை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணைக்கு பின் தெரிவித்ததாவது, கொலை செய்யப்பட்ட சக்திவேலுக்கு தட்சிணாமூர்த்தி (20) என்ற தம்பியும், கீதாலட்சுமி (17) என்ற தங்கையும் இருந்தனர். கீதாலட்சுமியை அதே பகுதியை சேர்ந்த அலெக்ஸ் ராஜ் (22) என்பவர் காதலித்து வந்தார். இந்த காதலுக்கு சக்திவேலும், தட்சிணாமூர்த்தியும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் கீதாலட்சுமியை அவர்களுக்கு தெரியாமல் அலெக்ஸ்ராஜ் தனது நண்பர்கள் உதவியுடன் கடத்தி சென்றார். திருமணம் செய்ய முயன்றபோது அவர் மைனர் என்று கூறி பிரித்து விட்டனர். வீட்டிற்கு வந்த கீதாலட்சுமி தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் அலெக்ஸ்ராஜ் காதலியை பிரிந்த சோகத்தில் இருந்து வந்தார். தனது காதலியை பிரித்த சக்திவேல் மற்றும் தட்சிணாமூர்த்தியை கொலை செய்ய திட்ட மிட்டார்.
கடந்த ஆண்டு தட்சிணா மூர்த்தியை ஒரு தரப்பினர் கொலை செய்தனர். இது குறித்து போலீசார் அலெக்ஸ்ராஜிடம் விசாரணை நடத்தி வந்தனர். தற்போது மற்றொரு சகோதரரான சக்திவேலையும் அலெக்ஸ்ராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் கொலை செய்துள்ளனர்.
காதல் பிரச்சினை காரணமாக ஒரே குடும்பத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். அலெக்ஸ்ராஜ் உள்பட 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று தெரிவித்தனர். #tamilnews






