search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ‘ஆன்-லைன்’ மணல் விற்பனையில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை: எடப்பாடி பழனிசாமி பேச்சு
    X

    ‘ஆன்-லைன்’ மணல் விற்பனையில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை: எடப்பாடி பழனிசாமி பேச்சு

    ‘ஆன்-லைன்’ மணல் விற்பனையில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று தஞ்சையில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
    தஞ்சாவூர்:

    ‘ஆன்-லைன்’ மணல் விற்பனையில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று தஞ்சையில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

    மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மாநகராட்சி திடலில் நேற்று நடைபெற்றது.

    விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு 40 ஆயிரத்து 101 பயனாளிகளுக்கு ரூ.271 கோடியே 90 லட்சத்து 30 ஆயிரத்து 387 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கியும், ரூ.186 கோடியே 77 லட்சத்து 7 ஆயிரம் மதிப்பிலான பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.632 கோடியே 48 லட்சத்து 6 ஆயிரம் மதிப்பிலான பணிகளை தொடங்கி வைத்தும் மொத்தம் ரூ.1,091 கோடியே 15 லட்சத்து 43 ஆயிரத்து 387 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கியும் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாங்கள் இரவு, பகல் பாராமல் தினமும் மக்கள் பணி ஆற்றி வருவதை பலர் விமர்சிப்பதையே வாடிக்கையாக கொண்டிருக்கிறார்கள். அமைச்சர்கள் முதல் தொண்டர்கள் வரை எந்த வேறுபாடுகளும் இல்லாமல் நாங்கள் உழைப்பது அவர்களுடைய கண்களை உறுத்துகிறது. எங்கள் ஒற்றுமையை குலைப்பதற்கு எப்படியெல்லாமோ சதி திட்டங்கள் போடுகிறார்கள்.

    ஜெயலலிதாவின் ஆட்சியை அழித்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிறார்கள். அது ஒருகாலமும் நடக்காது. ஜெயலலிதா கடவுளாக இருந்து நம்மை வழிநடத்துகிறார். ஆதலால் இனி நமக்கு அனைத்துமே வெற்றி தான். எதிர்ப்பவர்கள் அனைவருக்கும் தோல்வியே மிஞ்சும்.

    தி.மு.க.வை சேர்ந்த துரைமுருகன் மணல் பிரச்சினை தொடர்பாக அளித்த பேட்டியில், இந்த ஆட்சி 24 மணி நேரமும் மணல் கொள்ளையில் ஈடுபடுவதாக கூறுகிறார். உண்மையில் அப்படி எதுவும் நடைபெறவில்லை.

    இவர்களுடைய ஆட்சி காலத்தில் தான் அது நடந்தது. இவர் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த போது நடைபெற்றது வேண்டுமானால் உண்மை. ஜெயலலிதாவின் அரசில் அப்படி நடைபெறவில்லை. இன்றைக்கு மணல் குறைந்த விலையில் கிடைக்கவேண்டும் என்பதற்காகத்தான் அரசே ஏற்று நடத்துவதாக அறிவித்து செயல்படுத்தி வருகிறது. ஒருசிலர் உயர்நீதிமன்றத்தை நாடியதின் விளைவாக அது தடைபட்டது. அதனால் விலை உயர்ந்தது. இன்றைக்கு கூட மதுரை உயர்நீதிமன்ற கிளை ஒரு தீர்ப்பை வழங்கி இருக்கிறது.

    இந்த அரசை பொறுத்தவரைக்கும், ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் மணல் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் மணல் விற்பனையை அரசே ஏற்று நடத்தியது. ஆன்-லைன் மூலமாக மணல் விற்பனையை தொடங்கினோம். எந்த முறைகேடுக்கும் இடமளிக்காமல் ஆன்-லைன் மூலம் மணல் விற்பனையை செய்தோம். மணல் அள்ளுகிற குவாரியில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டுள்ளது. யாரும் தவறு செய்ய முடியாது.

    மணல் அள்ளுகிற லாரி சி.சி.டி.வி. கேமரா மூலம் பதிவு செய்யப்படும். அதே போல ஆன்-லைன் புக்கிங் செய்தால் தான் மணல் அள்ள முடியும். ஆன்-லைனிலேயே பணம் கட்டப்படும். இப்படிப்பட்ட முறைகளையெல்லாம் கையாளும் போது தவறே ஏற்படாமல் உண்மையாக மணல் விற்பனையை அரசு ஏற்று நடத்தும் என்று அறிவித்து அதன்படி நாங்கள் செய்து வந்தோம்.

    ஆனால் நீதிமன்ற தீர்ப்பின்படி செயல்படுகின்ற காரணத்தினால் இன்றைய தினம் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது. இதில் எந்த தவறும் ஏற்படவில்லை. தவறு ஏற்பட நாங்கள் ஒருபோதும் துணைபோகவில்லை என்பதை திட்டவட்டமாக கூறிக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    எம்.ஜி.ஆரை அரசியல் ஆசானாக ஏற்று உண்மை தொண்டனாக ஜெயலலிதா விளங்கியதால் தனிப்பெரும் தலைவியாக திகழ்ந்தார். தன்னலம் கருதாமல் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி தங்களை அர்ப்பணிக்கும் தியாக தொண்டர்களை கொண்ட இயக்கம் தான் அ.தி.மு.க. விசுவாசமிக்க தொண்டர்களாக, தீமைக்கு அடிபணியாத தொண்டர்களாக, நியாயத்திற்கு குரல் கொடுக்கும் தொண்டர்களாக, தலைமையின் பேச்சுக்கு கட்டுப்படும் தொண்டர்களாக அண்ணா, எம்.ஜி.ஆர். வழியில் கட்டுப்பாடு மிக்க தொண்டர்களாக நம்மையெல்லாம் ஜெயலலிதா உருவாக்கி இருக்கிறார்.

    அப்படி விசுவாசமிக்க தொண்டர்களாகிய நாம் நமது இயக்கத்தை ஒரு துரும்பும் அணுகாதபடி காக்க வேண்டும். தமிழக அரசுக்கு சிறு களங்கம் ஏற்படாதபடி கட்டிக்காப்போம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் புண்ணிய ஆன்மாக்களின் துணையோடு ஆர்.கே.நகர் சட்டசபை இடைத் தேர்தலில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெறுவோம். எதிர்வரும் அனைத்து தேர்தலிலும் வெற்றி காண்போம். ஜெயலலிதா வழியில் செயல்படும் அரசை எதிர்த்து, ஜெயலலிதா கட்டிகாத்த இயக்கத்தை எதிர்த்து எதிரிகள் எத்தனை பேர் வந்தாலும், அவர்கள் எந்த திசையில் இருந்து வந்தாலும், அவர்கள் எத்தனை பட்டாளத்துடன் வந்தாலும் வெற்றி நமக்கே. அ.தி.மு.க. தொண்டர்களுக்கே வெற்றி.

    இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×