என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடலூர் மாவட்டத்தில் கைப்பற்றப்பட்ட 208 ஐம்பொன் சிலைகள் பாடலீஸ்வரர் கோவிலில் வைக்கப்பட்டுள்ளது
    X

    கடலூர் மாவட்டத்தில் கைப்பற்றப்பட்ட 208 ஐம்பொன் சிலைகள் பாடலீஸ்வரர் கோவிலில் வைக்கப்பட்டுள்ளது

    கடலூர் மாவட்டத்தில் கைப்பற்றப்பட்ட ஐம்பொன் சிலைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள பாடலீஸ்வரர் கோவிலில் உள்ள அறை அருகில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    கடலூர்:

    கடலூர் முதுநகர் செட்டி கோவில் தெருவில் காசிவிஸ்வநாதர் கோவில் உள்ளது. தனியாருக்கு சொந்தமான இக்கோவில் தற்போது இந்து அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த கோவிலில் விநாயகர், வள்ளி-தெய்வானை சமேத முருகர், சோமாஸ்கந்தர், நடராஜர், சிவகாமசுந்தரி என 26 ஐம்பொன் சாமி சிலைகள் உள்ளன. பழமைவாய்ந்த இந்த கோவிலில் ஐம்பொன் சிலைகளுக்கு பாதுகாப்பு உள்ளதா? என்று அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இதில் உரிய பாதுகாப்பு வசதி இல்லை என்பது தெரியவந்தது.

    இதையடுத்து நேற்று இந்து அறநிலைய துறை உதவி ஆணையர் ரேணுகாதேவி, பாடலீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் நாகராஜ், ஆய்வாளர் சுபத்ரா, எழுத்தர் திருநாவுக்கரசு மற்றும் கோவில் ஊழியர்கள் காசிவிஸ்வநாதர் கோவிலுக்கு சென்றனர். அவர்களுடன் பாதுகாப்பு பணியில் கடலூர் முதுநகர் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் தலைமையிலான போலீசார் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகள் அங்குள்ள ஊழியர்களிடம் ஐம்பொன் சிலைகளுக்கு இங்கு பாதுகாப்பு இல்லை என்றும், அதனை பாடலீஸ்வரர் கோவிலில் உள்ள பாதுகாப்பு மையத்தில் வைக்க உள்ளோம், எனவே ஐம்பொன் சிலைகளை தங்களிடம் ஒப்படைக்குமாறு கூறினர்.

    இதனை தொடர்ந்து, கிராம நிர்வாக அலுவலர் தணிகாசலம் முன்னிலையில் அதிகாரிகள், போலீசார் கோவிலில் ஐம்பொன் சிலைகள் வைக்கப்பட்டிருந்த பெருமாள் சன்னதி, நடராஜர் சன்னதி கதவுகளை திறந்தனர். பின்னர் 2 அறைகளிலும் இருந்த 26 ஐம்பொன் சிலைகளை அதிகாரிகள் கைப்பற்றி பாதுகாப்பாக வேனில் ஏற்றி கடலூர் பாடலீஸ்வரர் கோவிலுக்கு எடுத்து வந்தனர். தொடர்ந்து, அங்குள்ள பாதுகாப்பு மையத்தில் ஐம்பொன் சிலைகளை வைத்தனர்.

    இது குறித்து உதவி ஆணையாளர் ரேணுகாதேவி நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடலூர் மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 3 ஆயிரம் ஐம்பொன் சிலைகள் உள்ளது. இதனை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். இதுவரை பாடலீஸ்வரர் கோவிலில் உள்ள ஐம்பொன் பாதுகாப்பு மையத்தில் (ஐ-கான் சென்டர்) 182 சிலைகள் வைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கடலூர் முதுநகரில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் பாதுகாப்பு இல்லாமல் இருந்த 26 ஐம்பொன் சிலைகளை கைப்பற்றினோம். அந்த சிலைகளும் பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் பாதுகாப்பு இல்லாத 105 கோவில்களுக்கு கண்காணிப்பு கேமராவும், அலாரமும் பொருத்தப்பட்டுள்ளது. இதுதவிர மேலும் 70 கோவில்களுக்கு கண்காணிப்பு கேமரா மற்றும் அலாரம் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    கைப்பற்றப்பட்ட சாமி சிலைகள் விசே‌ஷ காலங்களில் பாடலீஸ்வரர் கோவிலில் இருந்து பாதுகாப்பாக சம்பந்தப்பட்ட கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டு பூஜைகள் வழக்கம்போல் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கைப்பற்றப்பட்ட ஐம்பொன் சிலைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் உள்ள அறை அருகில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இங்கு வைக்கப்பட்டுள்ள சிலைகள் பல கோடி ரூபாய் மதிப்புள்ளது. எனவே 24 மணி நேரமும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
    Next Story
    ×