என் மலர்
செய்திகள்

கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்
கோவை:
கோவை சிட்கோ நாக ராஜபுரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். பஸ் டிரைவர். இவரது மகன் மணிகண்டன் (22). இவர் 10-ம் வகுப்பு முடித்துள்ளார். மேடை மற்றும் வீடு உள் அலங்காரம் செய்யும் வேலை செய்து வருகிறார்.இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் திவ்யா (23). பட்டதாரி. இவரது தம்பி மணிகண்டனுக்கு நண்பர் என்பதால் அடிக்கடி அவரது வீட்டிற்கு சென்று வந்தார். இதனால் மணிகண்டனுக்கும் திவ்யாவிற்கும் காதல் மலர்ந்தது.
இந்த விவரம் பெண் வீட்டிற்கு தெரியவந்தது. இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் இந்த காதலுக்கு திவ்யா வீட்டினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் திவ்யாவிற்கு மாப்பிள்ளை பார்க்க தொடங்கினார்கள்.
இதனால் காதல் ஜோடியினர் வீட்டை விட்டு வெளியேறினார்கள். கடந்த 27-ந் தேதி அவர்கள் போத்தனூரில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் சேலம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு சுற்றி திரிந்தனர்.இந்த நிலையில் திவ்யாவின் பெற்றோர் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் காதல் ஜோடிக்கு பயம் ஏற்பட்டது.
அவர்கள் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்தனர். அங்கிருந்த துணை கமிஷனர் லட்சுமியிடம் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி முறையிட்டனர். அவர்களை குனியமுத்தூர் போலீஸ் நிலையம் சென்று முறையிடுமாறு துணை கமிஷனர் லட்சுமி கூறினார்.
இதனை தொடர்ந்து காதல் ஜோடி அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.