search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "police commissioner office"

    • 'ஜெய்பீம்' திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளானது.
    • சாமானிய மக்களும் அவரவர் உடைகளில் வந்து செல்ல அனுமதி வழங்க வேண்டும்.

    சென்னை :

    நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'ஜெய்பீம்' திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளானது. இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரத்துடன் தொடர்புடைய தஞ்சாவூரைச் சேர்ந்த குளஞ்சியப்பன், 'ஜெய்பீம்' படம் தொடர்பாக காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று புகார்மனு அளிக்க வந்தார்.

    பட்டியல் இனத்தைச் சேர்ந்த அவர், லுங்கி, சட்டையுடன் வந்ததால் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை உள்ளே அனுமதிக்க மறுத்தனர். அதனால் அவர் அங்குள்ள பத்திரிகையாளர் அலுவலகம் அருகே செய்வதறியாது திகைத்து நின்றார்.

    அதை கவனித்த பத்திரிகையாளர்கள் சிலர், நடந்த விவரங்களை குளஞ்சியப்பனிடம் கேட்டறிந்தனர். பின்னர் அருகில் உள்ள கடைக்கு சென்று வேட்டி ஒன்றை வாங்கி குளஞ்சியப்பனிடம் கொடுத்தனர். அதை கட்டிக்கொண்ட பின்னர் அவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கும் பகுதிக்கு அனுமதிக்கப்பட்டார்.

    இதுகுறித்து குளஞ்சியப்பன், இங்கு சாமானிய மக்களும் அவரவர் உடைகளில் வந்து செல்ல அனுமதி வழங்க வேண்டும் என்றார்.

    அவர் அளித்த புகார்மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    'நான் பட்டியல் இன சமூகத்தைச் சேர்ந்தவன். எனது கதையை திருடி 'ஜெய்பீம்' திரைப்படத்தை 2டி திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் எடுத்து வெளியிட்டிருப்பது தொடர்பாக சென்னை சைதாப்பேட்டை 9-வது சிட்டி கோர்ட்டில் முறையீடு அளித்தேன்.

    அந்த முறையீட்டை முதல் தகவல் அறிக்கையாக பதிவு செய்து விசாரித்து அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்யும்படி சாஸ்திரிநகர் போலீஸ் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த உத்தரவு இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

    ஆகவே, கோர்ட்டு உத்தரவை போலீசார் நிறைவேற்றும் நிமிடம் வரை ஆகஸ்டு 15-ந்தேதி காலை 9 மணி முதல் சென்னை அடையாறில் உள்ள அம்பேத்கர் நினைவு இல்லம் முன்பு காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க நான் முடிவு செய்திருப்பதால், எனக்கு போலீஸ் அனுமதி வழங்க வேண்டும்.'

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    'ஜெய்பீம்' படம் தொடர்பாக லுங்கியுடன் வந்த பட்டியல் இனத்தைச் சேர்ந்தவரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தடுத்து நிறுத்திய சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    வேப்பேரியில் போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் நள்ளிரவில் தீக்குளிக்க முயன்ற 2 பேரை போலீசார் தடுத்து நிறுத்தினர். #chennaiCommissionerOffice

    சென்னை:

    சென்னை மாங்காட்டைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மாமியார் சாந்தி. இவர்களுக்கும், பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்களுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    நேற்று மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து கிருஷ்ண மூர்த்தி-சாந்தி மாங்காடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

    இந்த நிலையில் இருவரும் நேற்று நள்ளிரவு வேப்பேரியில் உள்ள போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்துக்கு வந்தனர். திடீரென்று 2 பேரும் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் எடுத்து தங்களது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு போலீசார் ஓடி சென்று இருவரையும் தடுத்து நிறுத்தினார்கள். அவர்கள் மீது தண்ணீர் ஊற்றப்பட்டது.

    பின்னர் 2 பேரையும் வேப்பேரி போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் தாங்கள் அளித்த புகாரின் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தீக்குளிக்க முயன்றோம் என்று தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் அடிக்கடி தீக்குளிக்க முயற்சிக்கும் சம்பவம் நடந்து வருகிறது. பகல் நேரங்களில் தீக்குளிக்க முயலும் நபர்களை போலீசார் தடுத்து நிறுத்தி வருகிறார்கள்.

    பகல் நேரங்களில் போலீசார் பாதுகாப்பு பணிகளில் அதிகம் ஈடுபடுகிறார்கள். இதனால் இதுபோன்ற சம்பவங்களை உடனே தடுக்கிறார்கள்.

    நேற்று நள்ளிரவில் தீக்குளிப்பு முயற்சி சம்பவம் நடந்துள்ளதால் இரவு நேரங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் மெத்தனமாக இருக்காமல் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று கமி‌ஷனர் உத்தரவிட்டுள்ளார்.

    ×