search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜி.எஸ்.டி.யால் வெளிநாட்டு வங்கிகளுக்கு லாபம்: தா.பாண்டியன் பேட்டி
    X

    ஜி.எஸ்.டி.யால் வெளிநாட்டு வங்கிகளுக்கு லாபம்: தா.பாண்டியன் பேட்டி

    ஜி.எஸ்.டியால் வெளிநாட்டு வங்கிகள் 20 முதல் 50 சதவிகிதம் லாபம் அடைந்துள்ளது என வள்ளியூரில் இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் தா.பாண்டியன் கூறினார்.
    வள்ளியூர்:

    இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் தா.பாண்டியன் நெல்லை மாவட்டம் வள்ளியூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ரூ. 500, 1000 நோட்டுகளை ஒழிப்பதன் மூலம் நாட்டில் கருப்பு பணமும், தீவிரவாதிகளிடம் இருந்து கள்ள நோட்டுக்களும் ஒழிக்கப்பட்டு விடும் என சொன்னார்கள். ஆனால் சொன்னபடி நடந்ததா என்றால் இல்லை. வாங்கப்பட்ட பழைய நோட்டுக்களை இன்றுவரை எண்ணிக்கூட முடிக்கவில்லை. கருப்பு பணத்தையும் ஒழிக்கவில்லை. ஜி.எஸ்.டியால் வெளிநாட்டு வங்கிகள் 20 முதல் 50 சதவிகிதம் லாபம் அடைந்துள்ளது.

    தமிழகத்தில் சாக்கடைகள் பெருகி வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யகூடிய அளவிற்கு கொசு பெருகியுள்ளது. நம்மால் சீனாவை எதிர்த்து போராட முடிகிறது. கொசுவை கொல்லுவதற்கு வழியை காணோம். விண்வெளிக்கு விண்கலன் அனுப்ப முடிகிறது. அணுகுண்டு செய்ய முடிகிறது. ஆனால் கடிக்கிற கொசுவை தடுக்க முடியவில்லை என்றால் ஆட்சியாளர்களுக்கு தங்களது கடமையை நிறைவேற்ற தெரியவில்லை.



    ஜி.எஸ்.டி மூலம் 98 ஆயிரம் கோடி வருவாய் வந்துள்ளது. இதிலிருந்து தமிழகத்திற்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் வரவேண்டும். டாஸ்மாக் வருவாய் அதிகரித்துள்ளது. எந்தவித புதிய திட்டமும் நிறைவேற்றவில்லை. அப்படி இருக்கும்போது ரேஷனில் சீனி விலை உயர்த்தியிருப்பது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை. மத்தியில் ஆள்பவர்கள் என்ன சொன்னாலும் செய்கின்ற அரசாக தமிழக அரசு செயல்படுகிறது.

    நடிகர் கமல்ஹாசன் மக்களுக்காக பேசினால் வரவேற்போம். இன்னும் அவர் வருவாரா? அல்லது வரமாட்டாரா? என்று சூதாட்டமாகவே பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×