search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணை அக்டோபர் 2-ம் தேதி திறப்பு: முதலமைச்சர் உத்தரவு
    X

    மேட்டூர் அணை அக்டோபர் 2-ம் தேதி திறப்பு: முதலமைச்சர் உத்தரவு

    மேட்டூர் அணையில் இருந்து அக்டேர்பர் 2-ம் தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடும்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
    சென்னை:

    தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நடப்பாண்டில், மேட்டூர் அணையில் போதிய அளவு நீர் இல்லாததால் குறுவை நெல்சாகுபடிக்கு ஜூன் 12ம் தேதியன்று தண்ணிர் திறந்துவிட இயலவில்லை. மேலும், நமக்கு தேவையான அளவு நீர், மேட்டூர் அணையில் கிடைக்கப்பெறாத சூழ்நிலையில், காவேரி டெல்டா பகுதியில் குறுவை பருவத்தில் நெற்பயிர் சாகுபடி செய்வதற்கும், பயிறு வகைகளை மாற்று பயிராக சாகுபடி செய்வதை ஊக்கப்படுத்தவும், விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடவும், 56 கோடியே 92 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம், 12.6.2017 அன்று அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக, நடப்பாண்டில் டெல்டா பகுதிகளில் 3.43 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் மற்றும் பயறு சாகுபடி மேற்கொள்ளப்பட்டது.

    பொதுவாக, டெல்டா மாவட்டங்களில், சம்பா பருவத்தில், சுமார் 14 லட்சத்து 93 ஆயிரம் ஏக்கர் பரப்பில் நெற்பயிர் நாற்று நடவு முறை மூலம் சாகுபடி செய்யப்படும். நடப்பாண்டில், இதுநாள் வரை தமிழ்நாடு பெற வேண்டிய இயல்பான மழை அளவான 480.5 மி.மீக்கு 533.4 மி.மீ மழை பெறப்பட்டுள்ளது. இன்று (28.9.2017), மேட்டூர் அணையின் நீர்மட்டம் 88.29 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 47,235 கன அடியாகவும் உள்ளது.

    மேட்டூர் அணையில் தற்போதுள்ள நீர் இருப்பைக் கருத்தில் கொண்டும், இனி வரும் மாதங்களில் கர்நாடகா நீர்த்தேக்கங்களிலிருந்து கிடைக்கக்கூடிய நீரினை எதிர்நோக்கியும், இந்த ஆண்டில் வடகிழக்கு பருவமழை இயல்பானதாக இருக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலும், மேட்டூர் அணையிலிருந்து சம்பா சாகுபடிக்கென இந்த ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதியிலிருந்து பாசனத்திற்கு நீர் விடுவிக்க உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×