என் மலர்
செய்திகள்

செந்துறை அருகே வீட்டு பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டத்திற்கு உட்பட்ட சிறுகடம்பூர் கிராமத்தில் உள்ள அம்மனிகுட்டை தெருவைச் சேர்ந்தவர் ராஜா. இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சிவந்தி வயது (27) இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று காலையில் குழந்தைகள் பள்ளிக்கு போய் விட்டனர். சிவந்தி 100 நாள் வேலைக்கு சென்று வீட்டிற்கு வந்த பார்த்தபோது பின்புற கதவு பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதை பார்த்த சிவந்தி அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 1.5 லட்ச ரூபாய் மதிப்பிலான 5 பவுன் தங்க நகைகள் மற்றும் 54 ஆயிரம் ரொக்கம் மற்றும் வீட்டுப்பத்திரம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டுயிருந்தது. இதுகுறித்து இரும்புலிகுறிச்சி காவல் நிலையத்தில் சிவந்தி புகார் செய்ததையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்துகொண்டு பட்டப்பகலில் வீட்டின் புட்டை உடைத்து நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப் பட்டு கைரேகைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. திருட்டில் சம்பந்தப் பட்டவர்கள் உள்ளுரைச் சேர்ந்தவர்கள் அல்லது வெளியூரை சேர்ந்தவர்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். பட்டப்பகலில் வீட்டில் நடைபெற்றுள்ள திருட்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






