search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கல்லூரி பஸ் தீப்பிடித்து எரிந்து நாசம்: பராமரிப்பு பணியின் போது விபரீதம்
    X

    கல்லூரி பஸ் தீப்பிடித்து எரிந்து நாசம்: பராமரிப்பு பணியின் போது விபரீதம்

    கரூரில் பஸ் பாடி கட்டும் நிறுவனத்தில் பராமரிப்பு பணியின் போது கல்லூரி பஸ் தீப்பிடித்து எரிந்து நாசமானது.
    கரூர்:

    கரூர் அருகே ஆத்தூர் பிரிவு ரோட்டில் பஸ் பாடி கட்டும் ஸ்ரீ வேலவன் கோச்சஸ் என்ற நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்திற்கு புதுக்கோட்டை மாவட்டம் இலூப்பூரில் உள்ள மதர்தெரசா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பஸ் ஒன்று வந்திருந்தது. இந்த பஸ்சினை ஊழியர்கள் பராமரிப்பு பணி மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை 9 மணி அளவில் பஸ்சில் வெல்டிங் வைத்துக்கொண்டு இருந்தனர். அப்போது அதில் இருந்து ஏற்பட்ட தீப்பொறிகள் மூலம் திடீரென பஸ் தீப்பிடித்து எரிய தொடங்கியது.

    இந்த தீ மளமளவென கொளுந்து விட்டு எரிய தொடங்கியது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனடியாக கரூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். மேலும் அங்கிருந்த தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. அருகில் குடியிருப்பில் வசிப்பவர்கள் அதிர்ச்சியடைந்து வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர்.

    இதற்கிடையில் நிலைய அலுவலர் ராஜகோபால் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் 2 வண்டிகளில் விரைந்து வந்தனர். அங்கு தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த பஸ்சின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். தொடர்ந்து அரை மணி நேர போராட்டத்திற்கு பின் தீ அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் பஸ்சின் இருக்கைகள் முழுவதும் முற்றிலும் எரிந்து நாசமாகி விட்டன. பஸ் எலும்பு கூடாக காட்சி அளித்தது. இதற்கிடையில் இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட தீயணைப்பு அலுவலர் அப்துல்பாரி மற்றும் டவுன் போலீசார் விரைந்து வந்து ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.

    தீப்பிடித்து எரிந்த பஸ்சின் டீசல் டேங்கில் டீசல் இருந்தது. அதில் தீப்பிடிக்காததால் டேங்க் வெடிக்கவில்லை. தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயை அதன் அருகே செல்ல விடாமல் அணைத்தனர். டீசல் டேங்க் வெடித்திருந்தால் அருகில் உள்ள குடியிருப்புகளுக்கும் தீ பரவி இருக்கும். நிறுவனம் முழுவதும் தீப்பிடித்து எரிந்து பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும். அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த தீவிபத்தில் கல்லூரி பஸ் முற்றிலும் எரிந்து நாசமானது.

    தீப்பிடித்து எரிந்த பஸ் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் ஒருவரின் உறவினருக்கு சொந்தமான கல்லூரியின் பஸ் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தீ விபத்தால் அந்த பகுதியில் நேற்று காலை சிறிது நேரம் பரபரப்பானது.
    Next Story
    ×