என் மலர்

  செய்திகள்

  அ.தி.மு.க. இணைப்பு முயற்சியை அமைச்சர்கள் தடுக்கிறார்கள் எடப்பாடி பழனிசாமியிடம் 8 எம்.எல்.ஏ.க்கள் புகார்
  X

  அ.தி.மு.க. இணைப்பு முயற்சியை அமைச்சர்கள் தடுக்கிறார்கள் எடப்பாடி பழனிசாமியிடம் 8 எம்.எல்.ஏ.க்கள் புகார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அ.தி.மு.க. 2 அணிகள் இணைவது தொடர்பான முயற்சியை அமைச்சர்கள் தடுக்கிறார்கள் என முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் 8 எம்.எல்.ஏ.க்கள் புகார் அளித்துள்ளனர்.
  சென்னை:

  ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற சசிகலா முதல்-அமைச்சர் பதவியை குறி வைத்து காய் நகர்த்தினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக செயல்பட்டு வருகிறார்.

  அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டு 2 அணிகளாக உடைந்ததால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. சசிகலா அணியினர், அம்மா அணி என்ற பெயரிலும், ஓ.பி.எஸ். அணியினர் புரட்சி தலைவி அம்மா அணியாகவும் தேர்தலை சந்தித்தனர். சசிகலா அணி வேட்பாளரான டி.டி.வி.தினகரன் தொப்பி சின்னத்திலும், ஓ.பி.எஸ். அணி வேட்பாளரான மதுசூதனன் இரட்டை மின் விளக்கு சின்னத்திலும் களம் இறங்கினார்கள்.

  இதில் வெற்றி பெறும் அணியே அ.தி.மு.க.வில் பலம் வாய்ந்ததாக இருக்கும் என்றும் கூறப்பட்டது. ஆனால் பணப்பட்டுவாடா விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததால் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை ரத்து செய்து விட்டது.

  இதற்கிடையே சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவும் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் டி.டி.வி.தினகரனும் சிறை சென்றனர். இதனை தொடர்ந்து அ.தி.மு.க. அணிகள் இணைவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி அணியினரும், ஓ.பி.எஸ். அணியினரும் பேச்சுவார்த்தைக்கு தயாரானார்கள். ஆனால் சசிகலாவையும், தினகரனையும் கட்சியில் இருந்து நீக்க வேண்டும். ஜெயலலிதா மரணத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு செல்வோம் என்று ஓ.பி.எஸ். அணியினர் தொடர்ந்து கூறி வருகிறார்கள்.

  இந்த நிலையில் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் இணைப்பு தொடர்பாக பல்வேறு விதமான கருத்துக்களை தினமும் கூறிவருகிறார்கள்.

  அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டிகள் ஓ.பன்னீர்செல்வத்தையும், அவரது ஆதரவாளர்களையும் விரக்தி அடைய செய்யும் வகையில் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

  இணைப்பு பேச்சுக்கள் வெளிப்படையாக தொடங்காத நிலையில், ஓ.பன்னீர்செல்வத்துக்கு தான் வகித்து வரும் நிதி அமைச்சர் பதவியை தருவதாக ஜெயக்குமார் கூறினார். இதற்கு பதில் அளித்த ஓ.பன்னீர்செல்வம் அமைச்சர் ஜெயக்குமாரை கடுமையாக சாடினார். ‘என்ன ஒரு எகத்தாளம் இருந்தால் ஜெயக்குமார் இப்படி பேசுவார்’ என்று கேள்வி எழுப்பினார். ‘சசிகலாவுக்கு நத்தைகளை கொடுத்து அமைச்சர் பதவியை பெற்றவர் ஜெயக் குமார்’ என்று மதுசூதனன் கடுமையாக குற்றம் சாட்டினார். இதுபோன்ற காரணங்களால் 2 அணிகளும் இணைப்பு என்பது தள்ளிப்போய் கொண்டே இருக்கிறது.

  இந்த நிலையில், அ.தி.மு.க. அம்மா அணியை சேர்ந்த 8 எம்.எல்.ஏ.க்கள் திடீரென போர்க்கொடி தூக்கி இருக்கிறார்கள். முன்னாள் அமைச்சர்களான எம்.எல்.ஏ.க்கள் தோப்பு வெங்கடாசலம், பழனியப்பன், செந்தில் பாலாஜி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் செய்யாறு தூசி மோகன், அரூர் முருகன், ஆம்பூர் பாலசுப்பிரமணி, மொடக்குறிச்சி சிவசுப்பிரமணியன், மானாமதுரை, கென்னடி ஆகிய 8 பேரும் கோட்டையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேற்று திடீரென சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

  இந்த சந்திப்பின் போது அ.தி.மு.க. அணிகள் இணைப்பில் ஏற்படும் கால தாமதம் குறித்து எம்.எல்.ஏ.க் கள் தங்களது ஆதங்கத்தையும், கவலைகளையும் வெளிப்படுத்தினர். அ.தி.மு.க. அணிகளின் இணைப்பு தாமதமாகிக் கொண்டே செல்வதால் தொண்டர்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள் என்றும், எனவே இணைப்பு வி‌ஷயத்தில் தெளிவான முடிவை முதல்-அமைச்சராகிய நீங்களே எடுக்க வேண்டும், இணைப்பு குறித்து அமைச்சர்கள் மாறுபட்ட கருத்துக்களை அடிக்கடி கூறுவதை தடுக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தினர்.

  இது தொடர்பாக முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான தோப்பு வெங்கடாசலம் கூறியதாவது:-

  அ.தி.மு.க.வையும், ஆட்சியையும் கட்டிக்காத்து வந்த ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு கட்சி பிளவுபட்டிருப்பது தொண்டர்கள் மத்தியில் சோர்வை ஏற்படுத்தி இருக்கிறது. 2 அணிகள் இணைவது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடக்கிறதா? இல்லையா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தினோம்.

  அதில் தெளிவான முடிவை எடுத்து கட்சியை கட்டுக்கோப்பானதாக மாற்றினால்தான் தொண்டர்கள் புத்துணர்வு பெறுவார்கள்.

  இணைப்பு வி‌ஷயத்தில் அமைச்சர்கள் ஆளாளுக்கு கருத்துக்களை தெரிவிப்பதே முட்டுக்கட்டையாக உள்ளது. சிந்தனையின்றி அவர்கள் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டோம். அதே போல தொகுதியில் நிலவும் பிரச்சினைகள் பற்றி அவ்வப்போது எம்.எல்.ஏ.க்களுடன் கலந்து பேச வேண்டும் என்றும் வலியுறுத்தினோம்.

  இவ்வாறு தோப்பு வெங்கடாசலம் கூறினார்.

  எம்.எல்.ஏக்களின் இந்த கருத்துக்களை கவனமுடன் கேட்டுக் கொண்ட எடப்பாடி பழனிசாமி, இரு அணிகள் இணைப்பு பற்றி விரைவில் தெளிவான முடிவை எடுப்பதாகவும், இது தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசிப்பதாகவும் உறுதி அளித்துள்ளார்.
  Next Story
  ×