என் மலர்
செய்திகள்

மத்திய மந்திரி மரணம்: எடப்பாடி பழனிசாமி- பொன்.ராதாகிருஷ்ணன் இரங்கல்
சென்னை:
மத்திய மந்திரி அனில் மாதேவ் தவே மறைவுக்கு முதல்-அமைச்சர் எடப் பாடி பழனிசாமி இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் அனில் மாதேவ் தவே இன்று உடல்நிலைக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்தேன்.
மத்திய பிரதேச மாநில பாரதீய ஜனதா கட்சியின் முக்கிய தலைவரான அனில் மாதேவ் தவே, 2009-ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினராக இருந்த பெருமைக்குரியவர். அனில் மாதேவ் தவே தான் வகித்த வந்த அமைச்சர் பதவியில் திறம்பட செயல்பட்டு வந்தவர்.
அனில் மாதேவ் தவேவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-
மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் அனில் மாதவ் தவே-ன் இழப்பு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். தேசப் பணிக்காக தன் குடும்பத்தை விட்டு முழு ஈடுபாடுடன் பணியாற்றியவர். முழுமையான அர்ப்பணிப்பு, சிறந்த சிந்தனை, பிரச்சினையை எளிதில் புரிந்து கொண்டு தீர்வு காணுதல் ஆகியவை அவரது சிறப்பு இயல்பு.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு பிரச்சினையின் போது ஒரே நாளில் 3 முறை அவரை சந்தித்திருந்தேன். தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக் கட்டு நடந்திட தனது முழு ஆதரவையும் வழங்கி, இவ்வாண்டு ஜல்லிக்கட்டு நடைபெற தமிழர்களுக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர். அவரின் இழப்பு பேரதிர்ச்சியை தருகிறது.
அவரது குடும்பத்தினருக்கு எனது சார்பாகவும், நம் தமிழ் சொந்தங்கள் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் புண்ணிய ஆன்மா நற்கதியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.