என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாளை அருகே 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சாவில் திருப்பம்-ரூ.50 லட்சம் தகராறில் தொழிலாளி கொலை செய்யப்பட்டது அம்பலம்:பெண் கைது
- ராமனை பார்க்க வந்த சப்பானி முத்து, ராணி என்பவரை அறிமுகம் செய்துள்ளார்.
- ராமனை கடத்தி சென்று பணத்தைக் கேட்டு சரமாரியாக தாக்கி உள்ளனர்.
நெல்லை:
பாளை கீழநத்தம் தெற்கூர் கண்ணப்பன் காலனியை சேர்ந்தவர் ராமன் (வயது 45). தொழிலாளி.
இவரை கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் பணம் விவகாரம் தொடர்பாக ஒரு கும்பல் சரமாரியாக அடித்து உதைத்தது. இதில் ஊமை காயம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ராமன் ஆகஸ்டு 12-ந்தேதி உயிரிழந்தார். இதையடுத்து பாளை தாலுகா போலீசார் இந்த விவகாரம் தொடர்பாக சாதாரண வழக்குப்பதிவு செய்து வழக்கை முடித்தனர்.
தற்போது ராமன் மனைவி ராமலட்சுமி மறு விசாரணை நடத்த கோரி புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் பணம் கொடுக்கல்-வாங்கல் தகராறில் கும்பல் ராமனை அடித்து கொலை செய்தது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பன்னீர்குளம் பகுதியை சேர்ந்தவர் சப்பானி முத்து( 52). இவரும், ராமனும் உறவினர்கள். கடந்த 2020-ம் வருடம் ஜூலை மாதம் ராமனை பார்க்க வந்த சப்பானி முத்து பாளை பகுதியை சேர்ந்த ராணி (56) என்பவரை அறிமுகம் செய்துள்ளார். அப்போது வெளிநாட்டிலுள்ள தொண்டு நிறுவனத்திலிருந்து ராணிக்கு ரூ. 50 லட்சம் பணம் வரவுள்ளது. அதனை உனது வங்கி கணக்கிற்கு அனுப்புவார்கள். பணம் வங்கிக் கணக்கில் ஏறியவுடன் அதனை எடுத்து தருமாறு ராமனிடம் சப்பானி முத்துவும், அந்த பெண்ணும் கூறியுள்ளனர். அதன்படி அவரது வங்கி கணக்கிற்கு ரூ.49 லட்சத்து 95 ஆயிரம் பணம் வந்துள்ளது. ஆனால் ராமன் ரூ.13 லட்சத்தை மட்டும் எடுத்துக் கொடுத்துவிட்டு மீதி உள்ள 37 லட்சம் ரூபாயை கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராணி, சப்பானி முத்துவை வரவழைத்துள்ளார். அவர்கள் மணக்கரை கிராமத்தை சேர்ந்த அவரது கூட்டாளிகள் 3 பேரை வரவழைத்துள்ளனர். அதைத் தொடர்ந்து ராமனை அவர்கள் கடத்தி சென்று பணத்தைக் கேட்டு சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் ராமன் படுகாயம் அடைந்தார். சிகிச்சையில் இருந்த ராமன் 3 மாதங்களில் இறந்து விட்டார் என்ற விவரம் எங்களுக்கு தெரிய வந்துள்ளது. இது குறித்து கொலை வழக்குப்பதிந்து ராணியை கைது செய்துள்ளோம். இதில் தொடர்புடைய மற்றவர்களை தேடி வருகிறோம் என்றனர்.






