search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலீசில் மாட்டிவிட்டதால் அண்ணன், தம்பியை கொன்றோம்-கைதான சகோதரர்கள் வாக்குமூலம்

    • கொலை செய்யப்பட்ட சகோதரர்கள் குடும்பத்துக்கு அரசு சார்பில் நிவாரணம் அறிவிக்கப்பட்டது.
    • 2 பேரின் உடலையும் உறவினர்கள் பெற்று சென்றனர்.

    நெல்லை:

    திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு காமராஜர்புரத்தை சேர்ந்தவர் நாகராஜ்(வயது 58). இவரது மகன்கள் மணிகண்டன்(25), சபரீஸ்வரன்(13).

    நெல்லையை அடுத்த சுத்தமல்லியில் மணிகண்டன் சாலையோர கடை அமைத்து வெங்காயம் வியாபாரம் செய்து வந்தனர். அப்போது மணிகண்டனுக்கும், அதே பகுதியில் பழக்கடை வைத்திருந்த சுப்பையாவின் மகன்களான சதீஷ்குமார், பார்த்தீபன் ஆகிய 2 பேருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

    அவர்களுக்குள் ஏற்பட்ட கொடுக்கல் வாங்கல் பிரச்சினை காரணமாக மணிகண்டன், சபரீஸ்வரன் ஆகியோரை சகோதரர்களான சதீஷ்குமார், பார்த்தீபன் கொலை செய்தனர்.

    இதுதொடர்பாக சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

    அப்போது 2 பேரும், தங்களுக்கு தரவேண்டிய ரூ.10 ஆயிரம் பணத்தை தராததாலும், கஞ்சா வழக்கு ஒன்றில் போலீசாரிடம் தங்களை சிக்க வைத்ததாலும் கழுத்தை நெரித்துக்கொலை செய்ததாக அவர்கள் போலீசில் வாக்குமூலம் அளித்தனர். இதையடுத்து 2 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இதற்கிடையே கொலை செய்யப்பட்ட 2 பேரின் உடல்களையும் வாங்க மறுத்து நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் மணிகண்டனின் உறவினர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். அவர்களிடம் போலீசார் மற்றும் பாளை தாசில்தார் ஆவுடையப்பன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதைத்தொடர்ந்து கொலை செய்யப்பட்ட சகோதரர்கள் குடும்பத்துக்கு அரசு சார்பில் நிவாரணம் அறிவிக்கப்பட்டது. ஒவ்வொருவருக்கும் தலா ரூ.6 லட்சம் வீதம் 2 பேருக்கும் ரூ.12 லட்சம் நிவாரணத்திற்கான காசோலையை தாசில்தார் ஆவுடையப்பன், மணிகண்டனின் பெற்றோரிடம் வழங்கினார். இதையடுத்து 2 பேரின் உடலையும் உறவினர்கள் பெற்று சென்றனர்.

    Next Story
    ×