என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாலையில் பூக்களை கொட்டிய விவசாயிகள்.
ஒரு கிலோ ரூ. 10-க்கும் கீழ் குறைந்ததால் சாலையில் பூக்களை கொட்டிய விவசாயிகள்-விளைச்சல் இருந்தும் விலை இல்லாததால் வேதனை
- பல ஏக்கர் நிலத்தில் கேந்தி பூ, சேவல் பூ உள்ளிட்ட வகையான பூக்களை பயிரிட்டு வருகின்றனர்.
- விலை குறைவால் நஷ்டம் ஏற்பட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் மானூருக்கு உட்பட்ட லெட்சுமியாபுரம், களக்குடி, எட்டாங்குளம், பள்ளமடை உள்ளிட்ட ஏராளமான கிராமங்கள் உள்ளது. இந்தப் பகுதிகளில் பிரதான தொழிலாக விவசாயம் நடைபெறுகிறது. அங்கு விவசாயிகள் பல ஏக்கர் நிலத்தில் கேந்தி பூ, சேவல் பூ உள்ளிட்ட வகையான பூக்களை பயிரிட்டு வருகின்றனர். இந்தாண்டு தற்போது பல ஏக்கரில் பூக்கள் பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் மானூர் பகுதியில் அறுவடை செய்யப்பட்ட பூக்கள் இன்று வாகனங்கள் மூலம் நெல்லை பூ மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் கேந்தி, சேவல் பூக்கள் கிலோ ரூ. 10-க்கும் குறைவாக கொள்முதல் செய்யப்பட்டது. இதனால் பூ விவசாயிகள் அதிர்ச்சியடைந்தன. இதைத்தொடர்ந்து அறுவடை செய்யப்பட்ட கேந்தி, சேவல் பூக்களை விவசாயிகள் இன்று மானூர்-சங்கரன்கோவில் சாலையில் கொட்டினர். இது தொடர்பாக அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-
நாங்கள் அரை ஏக்கர் நிலத்தில் பூக்கள் பயிரிட ரூ. 40 ஆயிரம் செலவு செய்யப்படுகிறது. பூக்கள் பராமரிப்பு செலவு உள்ளது.
ஒருநாள் தொழிலாளர்களுக்கு கூலி மட்டும் ஒருவருக்கு ரூ. 250 கொடுக்கப்படுகிறது. அதை கணக்கிட்டால் ஒரு கிலோ பூக்கள் ரூ. 40-க்கு கொள்முதல் செய்யவேண்டும். கடந்த 2 நாட்களாக ரூ. 10-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இன்று ரூ.10-க்கும் குறைவாக கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் நஷ்டம் ஏற்பட்டு எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.






