search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ராஜீவ்காந்தி மருத்துவமனை பஸ் நிறுத்தம் இடம் மாற்ற பரிந்துரை
    X

    போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ராஜீவ்காந்தி மருத்துவமனை பஸ் நிறுத்தம் இடம் மாற்ற பரிந்துரை

    • கிண்டி பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கிண்டி தபால் நிலையம் அருகில் ஒரு பஸ் நிலையம் அமைக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
    • பூங்கா ரெயில் நிலைய சுரங்கப்பாதை நீட்டிப்பு செய்யப்பட உள்ளது.

    சென்னை:

    சென்னையில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணைய அதிகாரிகள் சென்னை நகரம் முழுவதும் சோதனை செய்து ஒரு சில இடங்களில் புதிய பஸ் நிலையங்களை நிறுவவும், நடை பாதைகள் அமைக்கவும், பஸ் நிறுத்தத்தை மாற்றவும் பரிந்துரை செய்துள்ளனர்.

    சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை முன்புறம் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தம் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த பஸ் நிறுத்தத்தை வேறு இடத்துக்கு மாற்ற அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர்.

    அண்ணாசாலையில் உள்ள நடைபாதையை சிட்கோ பஸ்நிறுத்தம் வரை நீட்டிப்பதன் மூலம் ரெயில்வே நடைபாலத்தை ஒருங்கிணைக்க பரிந்துரை செய்துள்ளனர். இதே போல் நுங்கம்பாக்கத்தில் உள்ள காதர் நவாஸ்கான் சாலை நடைபாதையாக மாற்றப்பட உள்ளது.

    கிண்டி பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கிண்டி தபால் நிலையம் அருகில் ஒரு பஸ் நிலையம் அமைக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. மேலும் சின்ன மலை மெட்ரோ ரெயில் நிலையம் அருகில் ஒரு பஸ் நிலையம் அமைக்கவும் ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது. மேலும் அங்கு நடைபாதை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பூங்கா ரெயில் நிலைய சுரங்கப்பாதை நீட்டிப்பு செய்யப்பட உள்ளது.

    இதற்கிடையே சில அமைப்புகள் சென்னையில் உள்ள 10 பஸ் நிறுத்தங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருப்பதாக கண்டறிந்து உள்ளன. சென்னை கொருக்குப்பேட்டை, அம்பேத்கர் கல்லூரி, அசோக் பில்லர், சின்னாண்டி மடம், ஐ.ஓ.சி. நகர், முத்தமிழ் நகர், வியாசர் பாடி மார்க்கெட், சிட்கோ, வாசுகி நகர், சைதாப்பேட்டை ஆகிய பஸ் நிலையங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறியுள்ளன.

    சில பஸ் நிறுத்தங்கள் மதுக்கடை அருகில் அமைந்துள்ளன. சில பஸ் நிறுத்தங்களில் ஆண்கள் மது அருந்துகிறார்கள். விளக்குகள் இல்லாத சில பஸ் நிறுத்தங்களில் சமூக விரோத செயல்கள் நடக்கின்றன என்றும் தெரிவித்துள்ளன.

    Next Story
    ×