search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    8 வழிச்சாலை - அரசியல் கட்சிகள், மக்கள் கருத்துக்கு வாய்ப்பூட்டு போடக்கூடாது - மு.க.ஸ்டாலின்
    X

    8 வழிச்சாலை - அரசியல் கட்சிகள், மக்கள் கருத்துக்கு வாய்ப்பூட்டு போடக்கூடாது - மு.க.ஸ்டாலின்

    சென்னை - சேலம் பசுமை வழிச்சாலை அமைக்கும் திட்டம் தொடர்பாக அரசியல் கட்சிகள் மற்றும் மக்கள் கருத்துக்கு வாய்ப்பூட்டு போடக்கூடாது என்று சட்டசபையில் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #GreenWayRoad #MKStalin

    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் சென்னை- சேலம் பசுமை வழிச்சாலை திட்டம் தொடர்பாக மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எந்த திட்டத்தை தீட்டினாலும் மக்கள் நலனுக்காகவே தீட்டுகிறது. மக்கள் சுதந்திரமான கருத்துக்களை தெரிவிப்பதே இந்திய அரசின் சிறப்பான வழிமுறை.

    இந்த சாலை அமைக்கும் திட்டம் தொடர்பாக அரசியல் கட்சிகளும், மக்களும் தங்கள் கருத்துக்களை சுதந்திரமாக தெரிவிக்க விடாமல் காவல்துறையினர் வாய்ப்பூட்டு போடும் வகையில் செயல்பட்டு வருகிறார்கள்.

    பசுமை வழிச்சாலை திட்டம் தொடர்பாக பொதுக் கூட்டம் நடத்த த.மா.கா.வுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பா.ம.க. பாராளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் மக்களிடம் கருத்து கேட்கவிடாமல் தடுக்கப்பட்டுள்ளார். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி கைது செய்யப்பட்டுள்ளார். ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் வசீகரனும் கைது செய்யப்பட்டுள்ளார். செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் ஒருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

     


    மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க உரிமை உண்டு. ஆனால் அதை தடுக்கும் வகையில் கைது நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படுகின்றன.

    இவ்வாறு செய்வதால் ஒரு ஜனநாயக நாட்டில் மக்களுக்கு எதிராக எதையும் செய்துவிட முடியாது. சேலம் பசுமை வழிச்சாலை வேண்டாம் என்று சொல்லவில்லை. மக்களிடம் இதற்கு கடுமையான எதிர்ப்பு இருக்கிறது. எனவே மாற்றுப் பாதையில் அமைப்பது குறித்து நிபுணர்களுடன் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும்.

    ஜனநாயக நாட்டில் சுதந்திரம், பேச்சுரிமை, எழுத்துரிமைக்கு எதிராக நடந்து கொண்ட அரசு வீழ்ந்ததுதான் வரலாறு. எனவே இந்த போக்கை அரசு கைவிட வேண்டும்.

    தி.மு.க. ஆட்சியிலும் இது போன்ற சாலைகள் அமைக்கப்பட்டன. அதற்கான நிலங்களும் கையகப்படுத்தப்பட்டன. ஆனால் மக்களிடம் எதிர்ப்பு இல்லை. இப்போது மக்களிடம் எதிர்ப்பு உள்ளது. எனவே தான் மாற்று பாதை அமைக்க வலியுறுத்துகிறோம். #GreenWayRoad #MKStalin

    Next Story
    ×