search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மகளிர் சுய உதவி குழு பெண்களுக்கு ரூ.11 ஆயிரம் கோடி வங்கி கடன்- முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு
    X

    மகளிர் சுய உதவி குழு பெண்களுக்கு ரூ.11 ஆயிரம் கோடி வங்கி கடன்- முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

    மகளிர் சுய உதவிக் குழுக்களின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, நடப்பாண்டில் 11,000 கோடி ரூபாய் வங்கிக் கடன் வழங்கப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் 110-வது விதியின் கீழ் அறிக்கை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    ஊரகப் பகுதிகளில், குடியிருப்பு பகுதிகளின் சமையலறை மற்றும் குளியலறைகளிலிருந்து வெளியேறும் திரவக் கழிவு நீர், சாலைகள் மற்றும் தெருக்களில் தேங்கி நோய் தொற்று ஏற்படாமல் பாதுகாக்க, தனிநபர் உறிஞ்சு குழிகளும், ஊரகப் பகுதிகளில், ஆழ்துளை கிணறு, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி போன்ற குடிநீர் அமைப்புகளை சுற்றி கழிவு நீர் தேங்காமல் தடுத்திட சமுதாய உறிஞ்சு குழிகள் என மொத்தம் 2 லட்சத்து 500 உறிஞ்சு குழிகள் 168 கோடியே 94 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும். இதனால் கழிவு நீர் வடிகட்டப்பட்டு நிலத்தடி நீர் செறிவூட்டப்படும்.

    ஊரகப் பகுதிகளில் நடப்பாண்டில், 8 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 1,000 அங்கன்வாடி மையங்கள், 87 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்.

    பழமையான மற்றும் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடங்களுக்குப் பதிலாக, நடப்பாண்டில் தலா 17 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில், 500 புதிய ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடங்கள், 88 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்படும்.

    பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டம்-1ஐ தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுத்தியதைத் தொடர்ந்து, பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டம் 11-னை செயல்படுத்த 201718ஆம் ஆண்டு மத்திய அரசு அனுமதி வழங்கியது.

    இத்திட்டத்தின்கீழ், நடப்பாண்டில், 192 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 287 கிலோ மீட்டர் நீளமுள்ள ஊரகச் சாலைகள் மேம்படுத்தப்படும். மேலும், 10 உயர்மட்டப் பாலங்கள் கட்டப்படும்.

    பல்வேறு வகையான சாலைகளை ஒரே திட்டத்தின் கீழ் மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு ஊரகச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், நடப்பாண்டில் 1,200 கோடி ரூபாய் செலவில் 5,500 கிலோ மீட்டர் நீளமுள்ள ஊரகச் சாலைகள் மேம்படுத்தப்படும்.

    ஊரகப் பகுதிகளுக்கு குடிநீர் வழங்குவதில் ஆழ்துளை கிணறுகள் முக்கிய குடிநீர் ஆதாரங்களாக உள்ளன. உப்பு அல்லது கடின தன்மை மற்றும் குடிநீரில் காணப்படும் இதர குறைகளை சீர் செய்து, பாதுகாக்கப்பட்ட குடிநீரினை மக்களுக்கு வழங்க நடப்பாண்டில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில், குக்கிராமங்களில், எதிர் சவ்வூடு பரவல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும்.

    மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கு அருகாமையில் உள்ள கிராம ஊராட்சிகளுக்கும், அடர்த்தியான மற்றும் அதிகமான மக்கள் தொகை கொண்ட பெரிய கிராம ஊராட்சிகளுக்கும், தெருவில் வைக்கும் 60,000 குப்பைத் தொட்டிகள் தலா 25,000 ரூபாய் மதிப்பில், 150 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும்.

    ஊரகப் பகுதிகளில் பல்வேறு அரசு திட்டங்களின் கீழ் 25 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட வீடுகள் பழுதடைந்துள்ளதால், இவ்வீடுகளை பராமரிப்பு செய்து தரக் கோரி மக்கள் பிரதிநிதிகளிடமிருந்தும், பொது மக்களிடமிருந்தும் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் மனுக்கள் தொடர்ந்து வருவதை ஒட்டி, பழுதடைந்த நிலையில் உள்ள 45,594 வீடுகளை ஒரு வீட்டிற்கு 50,000 ரூபாய் வீதம் மொத்தம் 227 கோடியே 97 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பழுதுநீக்கம் செய்யப்படும். இதற்கான தொகை மாநில அரசு நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்படும்.

    கடந்த 7 ஆண்டுகளில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 41,180 கோடி ரூபாய் வங்கிக் கடனாக வழங்கப்பட்டுள்ளது. 201718ஆம் ஆண்டில் விதி எண் 110ன் கீழ் 7,000 கோடி ரூபாய் வங்கிக் கடன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு, அதனை விஞ்சி 8,332 கோடி ரூபாய் வங்கிக் கடன் வழங்கி, 119 சதவீதம் சாதனை எய்தப்பட்டது. அம்மா வழியில் செயல்படும் அம்மாவின் அரசால், மகளிர் சுய உதவிக் குழுக்களின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, நடப்பாண்டில் 11,000 கோடி ரூபாய் வங்கிக் கடன் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் இப்பேரவைக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் 110-வது விதியின் கீழ் அறிக்கை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் உள்ள 135 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் (சென்னை தவிர) 35 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பாதாள சாக்கடைத் திட்டம் முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. மேலும், 3 மாநகராட்சிகள், 25 நகராட்சிகளில் பாதாள சாக்கடை பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்துவதில் எதிர்கொள்ளும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, ஒரு மாற்று ஏற்பாடாக, கசடுக்கழிவு மேலாண்மைத் திட்டத்தினை செயல்படுத்த முடிவெடுத்து 51 நகராட்சிகள் மற்றும் 59 பேரூராட்சிகள் பயன்பெறும் வகையில் 49 நகரங்களில் கசடுக்கழிவு சுத்திகரிப்பு நிலையம் 217 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

    மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் திட்டங்களில் குழாய்கள் பதித்தல் மற்றும் மழையினால் சேதமடைந்த சாலைகளை மறு சீரமைக்கும் பொருட்டு, நடப்பாண்டில் 1,350 கிலோ மீட்டர் நீளத்திற்கு 1,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

    பேரூராட்சிப் பகுதிகளில் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில், சாலை மேம்பாட்டுப் பணிகள் நபார்டு வங்கி நிதி உதவியுடன் மேற்கொள்ளப்படும் என்பதை இப்பேரவைக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார். #TNAssembly #TNCM #EdappadiPalanisamy
    Next Story
    ×