search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திமுக - காங்கிரஸ் தனித்து நின்று தேர்தலை சந்திக்க தயாரா? பொன்.ராதாகிருஷ்ணன் சவால்
    X

    திமுக - காங்கிரஸ் தனித்து நின்று தேர்தலை சந்திக்க தயாரா? பொன்.ராதாகிருஷ்ணன் சவால்

    திமுக மற்றும் காங்கிரஸ் தனித்து நின்று தேர்தலை சந்திக்க தயாரா? என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சவால் விடுத்துள்ளார். #PonRadhakrishnan #DMK #Congress

    சென்னை:

    பிரதமர் மோடியின் 4 ஆண்டு ஆட்சியை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. மிக மோசமான ஆட்சி என்றும், வரும் தேர்தலில் ராகுல் ஆட்சியை பிடிப்பார். தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட பா.ஜனதா வெற்றி பெற முடியாது என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறினார்.

    இதற்கு பதில் அளித்து மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

    ஏறக்குறைய 50 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சி செய்து இருக்கிறது. இந்திரா ஆட்சி காலம் நெருக்கடி காலம். மன்மோகன்சிங் ஆட்சி காலம் ஊழல் நிறைந்த காலம் என்பதுதானே உண்மை.

    காமராஜர் காலத்துக்கு பிறகு ஒரு சதவீத செல்வாக்கை கூட வளர்க்க முடியவில்லையே. 40 சதவீதமாக இருந்த செல்வாக்கு 4 சதவீதமாகவது இருக்குமா? என்ற நிலையில்தானே இருக்கிறது. என்ன காரணம்? நீங்கள் சாதனை செய்து இருந்தால் மக்கள் உங்களை தோளில் தூக்கி வைத்து ஆடி இருப்பார்களே. அடுத்தவர் தோளில் ஏற உங்களை அலைய விட்டிருக்க மாட்டார்களே.

    50 ஆண்டுகளாக செய்து வைத்த தவறுகளை சரி செய்து வருகிறோம். 4 ஆண்டில் என்னென்ன சாதித்தோம் என்பதை இரண்டு இரண்டு வரிகளாக 17 பக்கங்களில் அச்சிட்டு அத்தனை எம்.பி.க்களிடமும் மோடி தந்திருக்கிறார். இந்த துணிச்சல் அவரிடம் இருக்கிறது. இதை மக்களிடம் விளக்குவோம். மக்கள் பதில் சொல்வர்கள்.


    காங்கிரஸ் செய்த தவறுகளையும், பொருளாதார சுமைகளையும் சீர்படுத்தி வருகிறோம். எங்காவது ஊழல் நடந்தது என்று சுட்டிக்காட்ட முடியுமா?

    ராகுலுக்கு புகழ்பாடி இருப்பதுபோல் உருவகப்படுத்தி எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற வெறியோடு இருக்கிறார்கள்.

    தமிழகத்தில் எங்கள் செல்வாக்கைப் பற்றி பேசுவதற்கு முன்பு உங்கள் நிலைமைகளை யோசித்து பாருங்கள். யாருடைய தோளிலாவது ஏறினால் தான் நடக்க முடியும் என்ற பரிதாப நிலையில்தானே காங்கிரசும், தி.மு.க.வும் இருக்கிறது.

    சவாரி குதிரையை மாற்றக்கூடிய அல்லது சுமக்கும் தோள்களை மாற்றக்கூடிய சிந்தனையில்தானே திருநாவுக்கரசர் இருக்கிறார்.

    நாங்கள் சவால்விட்டு சொல்கிறோம். தி.மு.க., காங்கிரஸ், அ.தி.மு.க. எல்லா கட்சிகளும் தனித்து மோதிப்பார்க்க தயாரா?

    அத்தனை தவறுகளையும் செய்து வைத்து பழியை எங்கள் மீது சுமத்த பார்க்கிறீர்கள். மக்களும் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறார்கள்.

    தூத்துக்குடியில் 13 உயிர்கள் பலியாக யார் காரணம்? செத்தாலும் விடாது கருப்பு என்பது போல தி.மு.க.வும், காங்கிரசும் செய்து வைத்த துரோகங்கள்தான் இப்படி மக்களை வதைக்கிறது.


    ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மத்தியில் சம்பந்தப்பட்ட துறைகளில் பொறுப்பு வகித்த மன்மோகன் சிங், அ.ராசா, ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் 5 வி‌ஷயங்களில் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள். முதலில் அதற்கு பதில் சொல்லட்டும். 13 பேர் பலியாக காரணமாகி விட்டோமே என்று வருந்தி மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்.

    தினமும் 390 டன் காப்பர் உற்பத்தி செய்ய வேண்டிய நிலையில் 900 டன் உற்பத்தி செய்யப்பட்டது. எப்படி ஆண்டுக்கு 70 ஆயிரம் டன் உற்பத்திக்கு அனுமதித்து விட்டு 1 லட்சத்து 63 ஆயிரம் டன் உற்பத்தி செய்ய அனுமதித்தது யார்? அதை கண்டு கொள்ளாமல் இருந்தது யார்? அதற்கு பதில் சொல்லுங்கள்.

    நண்பர் திருமாவளவன் பா.ஜனதா ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் ரூ.15 கோடி நன்கொடை பெற்றதாக குறிப்பிட்டுள்ளார். அதுபற்றி எனக்கு தெரியாது.

    ஆனால் ஒருவேளை பெற்றிருந்தாலும் அது அவரது வார்த்தைப்படி தேர்தல் நன்கொடைதானே. காங்கிரசை போல் கையூட்டு பெறவில்லையே. கையூட்டு வாங்கி மக்களுக்கு துரோகம் செய்ய யாரையும் அனுமதிக்க வில்லையே.

    ஆனால் நான் துணிச்சலாக சொல்வேன் 1998 தேர்தல் காலத்தில் எனக்கு கொடுத்தனுப்பிய தேர்தல் நிதியை திருப்பி அனுப்பியவன் நான்.

    ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத் தோடு கூட்டு சேர்ந்து வரும் இந்த கட்சிகளின் முகமூடி தேர்தல் நேரத்தில் கிழிந்து போகும்.

    இவ்வாறு அவர் கூறினார். #PonRadhakrishnan #DMK #Congress

    Next Story
    ×