என் மலர்

  செய்திகள்

  தத்தெடுத்த கிராமத்திற்கு பள்ளி, கழிவறை கட்டித்தருவதாக உறுதியளித்த கமல்ஹாசன்
  X

  தத்தெடுத்த கிராமத்திற்கு பள்ளி, கழிவறை கட்டித்தருவதாக உறுதியளித்த கமல்ஹாசன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அதிகத்தூர் கிராமத்துக்கு கூடுதலாக பள்ளி கட்டிடங்களையும், கழிவறைகளையும் கட்டித் தருவதாக மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். #MakkalNeedhiMaiam #KamalHaasan #Adigathur
  திருவள்ளூர்:

  மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி உள்ள நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளார்.

  மதுரையில் பிரமாண்டமான வகையில் மாநாட்டை நடத்தி புதிய கட்சியை தொடங்கிய கமல் தொடர்ச்சியாக சுற்றுப் பயணத்தையும் மேற்கொண்டுள்ளார்.

  கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்த மகளிர் தின விழாவில் பங்கேற்ற கமல் 8 கிராமங்களை தத்தெடுத்துள்ளதாக அறிவித்தார். இதில் திருவள்ளூர் அருகே உள்ள அதிகத்தூர் கிராமமும் ஒன்றாகும். இந்த கிராமங்களுக்கு தேவையான வசதிகள் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் செய்து கொடுக்கப்படும் என்றும் கமல் அறிவித்தார்.

  தத்து எடுக்கப்பட்ட கிராமங்களில் ஒன்றான அதிகத்தூர் கிராமத்தில் நடக்கும் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க போவதாகவும் அவர் அறிவித்திருந்தார்.

  இதன்படி இன்று காலையில் சென்னையில் இருந்து காரில் புறப்பட்ட கமல் அதிகத்தூர் கிராமத்துக்கு சென்றார். அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கூட்டம் நடைபெற்றது. கடம்பத்தூர் வட்டார அலுவலர் ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் கிராம மக்கள் பலர் பங்கேற்றிருந்தனர்.


  கூட்டம் நடந்து கொண்டிருந்த போதுதான் கமல் அதிகத்தூர் கிராமத்தை சென்றடைந்தார். அவரை பொது மக்கள் வரவேற்றனர். அவர்களோடு கமல் கைகுலுக்கினார்.

  கிராம சபை கூட்டத்தில் பொது மக்களோடு பார்வையாளராக அவர் பங்கேற்றார். கிராம சபை கூட்டம் முடிந்ததும் அங்கிருந்த பொது மக்களிடமும் மக்கள் நீதி மய்ய நிர்வாகிகளிடமும் அதிகத்தூர் கிராமத்தை பற்றி கேட்டறிந்தார்.

  மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் மாதிரி கிராம சபை கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

  இதற்காக கிராமத்து வயல் வெளியில் சாமியானா பந்தல் போட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பொது மக்கள், மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அவர்கள் மத்தியில் கமல்ஹாசன் பேசினார். அப்போது அதிகத்தூர் கிராமத்துக்கு கூடுதல் பள்ளி கட்டிடங்களையும் கழிவறைகளையும் கட்டித் தருவதாக அவர் உறுதி அளித்தார்.

  கூட்டத்தில் கமல் பேசியதாவது:-

  உங்கள் கிராமத்துக்கு என்ன வேண்டும் என்பதை கேட்டறிந்தோம். எங்களால் இயன்றவரை அதை செய்யப் போகிறோம். அரசு செய்ய முடிந்ததை ஒரு தனி கூட்டம் செய்ய முடியாது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். முடியும் என்று நாங்கள் காட்டப் போகிறோம். அதனால்தான் 12500 கிராமத்தையும் நாங்கள் தத்தெடுக்கவில்லை.

  ஏனென்றால் அது முடியாது. அது ஒரு அரசின் பணி. நாங்கள் எங்களால் இயன்றது என்ன என்பதை யோசித்து வெற்றி பெற முடியும் என்று நினைத்து அந்த பாதையில் தைரியமாக நடத்திருக்கிறோம்.

  ஏன் 8 கிராமத்தை மட்டும் தத்தெடுத்தீர்கள் என்று கேட்டால் எங்களால் அவ்வளவு தான் முடியும். உங்கள் ஆசியும், உங்கள் உதவியும் இருந்தால் 12 ஆயிரம் கிராமத்துக்கு பொறுப்பேற்கும் நாளும் வரும்.

  இங்கு நாங்கள் கூடி என்ன செய்யப் போகிறோம் என்பதை சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். அதற்காக பெரிய லிஸ்ட் இருக்கிறது. ஆனால் உடனடியாக நான் என்ன செய்யப் போகிறேன் என்பதை மட்டும் கூறுகிறேன்.


  இங்குள்ள பள்ளிக்கூடத்தில் இன்னும் 3 அறைகள் தேவைப்படுகின்றன. அது கட்டித்தரப்படும். கல்விக்கு நிகரானது ஆரோக்கியம். எனவே கழிப்பறைகள் இந்த ஊருக்காக தனியாக கட்டித்தரப்படும். கிட்டத்தட்ட 100 கழிப்பறைகள் தேவைப்படும்.

  அதற்கான ஆயத்த பணிகளை தொடங்கி விட்டார்கள். விரைவில் அதை செய்து முடிப்போம். பிறகு மரம் நடுதல், இந்த கிராமத்தை இன்னும் பசுமையாக்குவதற்கு எல்லா ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருக்கின்றன.

  அதன்பிறகு உங்கள் திறமைகளை விரைவில் ஏதாவது ஒரு வகையில் வளர்த்துக் கொள்வதற்கு பயிற்சி முகாம் இங்கு நடத்தப்படும்.

  இங்கு சிறிய அணைகள், மடைகள் நீர் சேகரிப்பதற்காக கட்டப்படும். இப்போது இருக்கும் குளத்தை சுற்றி கல்பதித்து இன்னும் அதிகமாக நீரை தேக்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும். இங்கு இருக்கும் ஏரியின் கரையை புனரமைத்து பறவைகள் மீண்டும் வந்து தங்கும் இடமாக மாற்ற வேண்டும்.

  இந்த லிஸ்ட்டில் இன்னும் 50 வி‌ஷயங்கள் இருக்கிறது. ஒவ்வொன்றாக அதை செய்ய வேண்டும். இப்போது ஒரு ஐந்தாறு வி‌ஷயத்தை செய்கிறோம். எப்போது முடியுமோ அப்போது மாற்றத்தை செய்வோம். செய்ய முடியாததை எப்படி செய்யலாம் என்று உங்களுடன் கலந்து ஆலோசிப்போம்.

  ஏனென்றால் இங்கு நாங்கள் வந்து இதை செய்கிறோம். எங்களுக்கு ஓட்டு போடுங்கள் என்று சொல்வதற்கு அல்ல. செய்யப் போகிறோம் அவ்வளவு தான். இன்னும் நிறைய ஊருக்கு செய்ய வேண்டும் என்று நாங்கள் ஆசைப்படுகிறோம். எதற்கு என்னென்ன ஆவன செய்ய வேண்டுமோ அதை நீங்கள் செய்யுங்கள்.

  மற்ற கிராமங்கள் வரை எங்களை கொண்டு சேர்க்க வேண்டியது உங்களின் கடமை. யாரோ ஒருத்தர் வருவார். நமக்கு இதையெல்லாம் செய்து கொடுத்து விடுவார் என்று மட்டும் நினைக்காதீர்கள்.

  இதை நாம் செய்ய வேண்டும். நாம் பாதுகாக்க வேண்டும். நாம் பள்ளிகளில் போய் படிக்க வேண்டும். குளம் சுத்தமாக இருக்கிற மாதிரி நாம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

  கழிப்பறைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது நமது பொறுப்பு. எல்லோரும் கவுரவம் பார்க்காமல் அதை சுத்தம் செய்ய வேண்டும். கழிப்பறைகள் கட்டி முடித்ததும் 2-ம் நாள் அதை சுத்தம் செய்ய நான் தனிப்பட்ட வகையில் ஆலோசனை சொல்வேன். அதை செய்ய வேண்டியது கடமை.

  பெரிய பெரிய மனிதர்கள் எல்லாம் செய்கிறார்கள். அதை நமது உடலுக்குள்ளேயே வைத்துக் கொண்டு அலைகிற ஒரு வி‌ஷயம். எல்லோருக்கும் அதை எங்கு கொண்டு வெளியில் கொட்டுவது என்பது தெரியாது.

  நமக்குள் இருக்கும் அறிவையும், கவிதையையும், தமிழையும் வைத்துக் கொண்டு இதையும் வைத்துக் கொள்ள நமது உடலுக்கு தெரிந்திருக்கிறது. அதே போல் இந்த கிராமத்துக்கும் திடக்கழிவுகளை வெளியேற்றி சுழற்சியில் நமது வாழ்க்கை எப்படி கொண்டு வரமுடியும் என்பதை நீங்கள் எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்.

  நாம் எல்லோரும் மனதுக்குள் கிராமத்தினர் தான். கொஞ்ச நாட்கள் வெளியில் சென்று சுற்றியதால் நகரத்தினர் போல வே‌ஷம் போடுகிறோம் அவ்வளவுதான். அது எல்லோருக்கும் பொருந்தும் எனக்கும் பொருந்தும்.

  எதிர்பாராத ஆச்சரியங் கள் அதிகத்தூரில் அதிகமாக காத்திருக்கிறது என்று எனக்கு தெரியும். இங்கிருந்து 3 அறை பள்ளிக் கூடத்தில் படித்து டாக்டர்களாக, வக்கீலாக, என்ஜினீயர்களாக படித்து விட்டு வரும் இளைஞர்களுடன் இங்கே நின்று பேச வேண்டிய வாய்ப்பு வரும் என்று எனக்கு தோன்றுகிறது.

  இங்கே பல இனக்குழுக்கள் இருக்கிறார்கள். முக்கியமாக நரிக்குறவர்களும், இருளர்களும் இருக்கிறார்கள். அவர்கள் வாழ்வாதாரம் மேம்படுவதற்கும் மக்கள் நீதி மய்யம் பாடுபடும். அனைவரும் எங்களுக்கு ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான்.

  நாங்கள் எப்படி உங்களை ஒரே குடும்பமாக நினைக்கிறோமோ அதைப் போல் இந்த கிராமத்தை சேர்ந்தவர்களும் அனைவரையும் ஒரே குடும்பமாக நினைத்தே ஆக வேண்டும்.

  அப்படி நினைக்கும் ஒரே குடும்பத்தின் உறவினராகத் தான் நான் இருக்கிறேன். ஆசைப்படுகிறேன். அது நடக்கும் என்பதற்கு முன்னுதாரணமாக இதுவரை அதிகத்தூர் திகழ்ந்து கொண்டிருக்கிறது.

  இங்கே சகோதரனும் சகோதரியும் நின்று கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தொடர்ந்து இதை நடத்த வேண்டும். நாங்கள் அதற்கு உறுதுணையாக நிற்போம் என்பதை மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்.

  இவ்வாறு அவர் பேசினார்.

  இதன் பின்னர் அதிகத்தூர் கண்டிகை குளத்தையும் கமல் பார்வையிட்டார். அங்கு நரிக்குறவர் இனத்தை சேர்ந்த 65 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். அவர்களையும் கமல் சந்தித்து பேசினார். அப்போது அவருக்கு நரிக்குறவர்கள் மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.

  பின்னர் அவர் சென்னை புறப்பட்டார். காலை 10.20 மணி அளவில் அதிகத்தூர் சென்ற கமல் சுமார் ஒரு மணி நேரம் கிராம மக்களோடு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #MakkalNeedhiMaiam #KamalHaasan #Adigathur
  Next Story
  ×