search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தினகரனை மேலும் பல எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பார்கள்- செந்தில்பாலாஜி
    X

    தினகரனை மேலும் பல எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பார்கள்- செந்தில்பாலாஜி

    டி.டி.வி. தினகரனை இன்னும் ஏராளமான எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து ஆதரவு தெரிவிப்பார்கள் என்றும் இது விரைவில் நடைபெறும் எனவும் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.
    கரூர்:

    கரூரில் இன்று மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா டி.டி.வி. தினகரன் அணி சார்பில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-

    அமைச்சர் ஜெயக்குமார் பொறுப்புகளை மறந்து பேசி கொண்டிருக்கிறார். அ.தி.மு.க. அணியை எக்கு கோட்டை என்று சொல்லும் அவருக்கு ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு மறந்து விட்டதா? விளம்பரத்திற்காக அவர் மனம் போல பேசி கொண்டிருக்கிறார்.

    மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளுக்கு முன்பாக மக்களுக்கு எதிரான இந்த துரோக ஆட்சி கலையும் என்று கூறினோம். கோர்ட்டில் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று நம்பியிருக்கிறோம். தீர்ப்பு வந்து விடும் என்று எதிர்பார்த்து தான் ஜெயலலிதா பிறந்தநாளான 24-ந்தேதிக்குள் ஆட்சி கலையும் என்று கூறினோம். இன்னும் ஒரு சில நாட்களில் தீர்ப்பு வந்து விடும். தீர்ப்பு வந்தவுடன் துரோக ஆட்சி வீட்டுக்கு செல்லும். டி.டி.வி. தினகரன் முதல்வராவார். அந்த ஆட்சி மக்கள் நலத் திட்டங்களை வழங்கும் அரசாக அமையும்.

    தமிழகத்தின் பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்கள் டி.டி.வி. தினகரனுடன் பேசி கொண்டிருக்கிறார்கள். தினகரனுக்கு அவர்களின் முழுமையான ஆதரவு உள்ளது. கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு தற்போது சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார். இன்னும் ஏராளமான எம்.எல்.ஏ.க்கள் டி.டி.வி.யை சந்தித்து ஆதரவு தெரிவிப்பார்கள். இது விரைவில் நடைபெறும்.


    ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். முதல்வர் பதவி ஒப்பந்தம் வருவாயை பார்த்து கொள்வதற்கான ஒப்பந்தம்தான். என்னை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கியது சட்ட விதிகளுக்கு எதிரானது. இருப்பினும் டி.டி.வி.யுடன் இணைந்து செயல்பட கிடைத்த வாய்ப்பை பெற்றதற்காக சந்தோ‌ஷமடைகிறேன். டி.டி.வி.க்கு பின்னால் யாருமே இல்லை என்று சொன்னார்கள். ஆனால் இப்போது ஆயிரக்கணக்கானோரை நீக்கி வருகிறார்கள். இது ஒரு பகுதிதான். இன்னும் 95 சதவீதம் பேர் டி.டி.வி. பக்கம் இருக்கிறார்கள்.

    ஜெயலலிதாவின் கனவு திட்டமான மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்க பிரதமர் மோடி வருகிறார். கடந்த காலங்களில் அ.தி.மு.க. அமைச்சர்கள் மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பது தமிழகத்திற்கு திட்டங்களை பெறுவதற்காக என்றுதான் சொன்னார்கள். கடந்த சில மாதங்களாக இணக்கமாக இருந்து நீட், கதிராமங்கலம், நெடுவாசல், காவிரி போன்றவற்றில் தமிழகத்தின் உரிமையை இழந்திருக்கிறார்கள்.

    டி.டி.வி. தினகரன் சொன்னது போல் காவிரியில் மேலாண்மை வாரியம் அமைக்க சட்டமன்றத்தை கூட்டி ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews
    Next Story
    ×