search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    நியமன எம்.எல்.ஏ.விவகாரத்தில் சபாநாயகர் சட்டரீதியாக முடிவெடுப்பார்: புதுவை பாஜக தலைவர் சாமிநாதன்
    X

    நியமன எம்.எல்.ஏ.விவகாரத்தில் சபாநாயகர் சட்டரீதியாக முடிவெடுப்பார்: புதுவை பாஜக தலைவர் சாமிநாதன்

    நியமன எம்.எல்.ஏ. விவகாரத்தில் சபாநாயகர் சட்டரீதியாக முடிவெடுப்பார் என்று புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில பா.ஜனதா தலைவர் சாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்தியாவின் இரும்பு மனிதர் வல்லபாய் படேலின் பிறந்தநாள் வருகிற 31-ந் தேதி நாடு முழுவதும் பா.ஜனதா சார்பில் கொண்டாடப்படுகிறது.

    புதுவையில் அன்றைய தினம் தேச ஒற்றுமையை வலியுறுத்தி ஓட்டம் நடக்கிறது. காலை 7 மணிக்கு அவ்வை திடலில் தொடங்கி காந்தி திடல் வரை தேச ஒற்றுமை ஓட்டம் நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கின்றனர். நவம்பர் 12-ந்தேதி ஊழலுக்கு எதிரான நடைபயணத்தை புதுவையில் நடத்த உள்ளோம்.


    புதுவையை ஆண்ட காங்கிரஸ் ஆட்சியாளர்கள் 50 ஆண்டில் ஊழலில் திளைத்துள்ளனர். அமைச்சர்களின் சொத்து மதிப்பு பலமடங்கு உயர்ந்துள்ளது. ஊழலில் சம்பாதித்த அமைச்சர்களின் பட்டியலை வெளியிட உள்ளோம்.

    தற்போதைய காங்கிரஸ் ஆட்சியிலும் இந்த ஊழல் அனைத்து துறையிலும் தொடர்கிறது. மத்திய பொதுப்பணித்துறை கட்டிடங்கள் கட்டுவதற்கு சதுர அடிக்கு ரூ.1700 என நிர்ணயித்துள்ளனர். ஆனால், புதுவையில் பொதுப்பணித்துறை ரூ.3 ஆயிரத்து 300 நிர்ணயித்துள்ளது. இது 90 சதவீதம் அதிகம். மக்களின் வரிப்பணம் கொள்ளையடிக்கப்படுகிறது.

    மின்துறையில் புதைவட கேபிள் பதிப்பதில் மிகப் பெரும் ஊழல் நடந்துள்ளது. ஆதிதிராவிடர் நலத் துறையில் ஹைமாஸ் விளக்கு அமைப்பதில் ரூ.5 கோடி ஊழல் நடந்துள்ளது.

    இதுபோல சுகாதார துறையில் மருந்து வாங்கியது, கிராமப்புற கல்வி திட்டம் என அனைத்து துறையிலும் ஊழல் கொடிகட்டி பறக்கிறது. இந்த ஊழலுக்கு எதிராக நவம்பர் 12-ந்தேதி தவளகுப்பத்தில் இருந்து சுதேசி மில் நோக்கியும், வில்லியனூரில் இருந்து சுதேசி மில் நோக்கியும் நடைபயணம் நடத்துகிறோம்.

    சுதேசி மில் அருகில் பொதுக்கூட்டம் நடைபெறும். அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணையும் கோருவோம். நியமன எம்.எல்.ஏ. தொடர்பாக சபாநாயகர் கோரிய அனைத்து விவரங்களையும் மத்திய உள்துறை அமைச்சகம் புதுவை அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது.

    சட்டரீதியாகவும், ஜனநாயக முறையிலும் சபாநாயகர் முடி வெடுப்பார் என நம்புகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது துணைத்தலைவர் ஏம்பலம் செல்வம் பொதுச்செயலாளர்கள் தங்க.விக்ரமன், ரவிச் சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

    Next Story
    ×