search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயலலிதா மரணத்தில் தமிழக அமைச்சர்களுக்கு பங்கு உள்ளது: புகழேந்தி பேட்டி
    X

    ஜெயலலிதா மரணத்தில் தமிழக அமைச்சர்களுக்கு பங்கு உள்ளது: புகழேந்தி பேட்டி

    ஜெயலலிதா மரணத்தில் தமிழக அமைச்சர்களுக்கு பங்கு உள்ளது. எனவே, சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று திருவண்ணாமலையில் நடந்த கூட்டத்தில் புகழேந்தி பேசினார்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் அ.தி.மு.க. (அம்மா) அணி சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கர்நாடக மாநில அ.தி.மு.க (அம்மா அணி) செயலாளர் புகழேந்தி பேசியதாவது:-

    சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கையெழுத்து நான் போடவில்லை இளவரசிக்கு தான் ஜாமீன் கையெழுத்திட்டேன். ஜெயலலிதாவை கண் இமை போல சசிகலா காத்தார்.

    இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். இருவரும் அ.தி.மு.க.வை. பி.ஜே.பி.யிடம் அடமானம் வைத்துள்ளனர்.

    லயோலா கல்லூரி சர்வே செய்ததில் தினகரனுக்கு 77 சதவீதம் ஆதரவு இருப்பது தெரியவந்துள்ளது. தினகரன் ஒரு சின்ன எம்.ஜி.ஆர். எடப்படி பின்னால் அமைச்சர்களை தவிர யாரும் இல்லை ஓ.பி.எஸ். மற்றும் அமைச்சர்கள் இடையே பங்கு பிரிப்பதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

    இந்த ஆட்சி உருண்டு கொண்டிருக்கிறது. கொள்ளையடிக்கும் பணம் கொல்லைபுறமாக ஓடிவிடும். நாஞ்சில் சம்பத் மீது 12 வழக்கு போட்டுள்ளனர்.

    தற்போது எதிர்கட்சி தி.மு.க. இல்லை. தினகரன் அணிதான் எதிர்க்கட்சியாக உள்ளது. தமிழகத்தில் ஜெயலலிதா அளித்த திட்டங்கள் எதுவும் இல்லை. மக்கள் ஆதரவுடன் டிடி.வி. தினகரன் ஆட்சியை பிடிப்பார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜெயலலிதா மரணம் குறித்து ஓ.பன்னீர்செல்வம் மத்திய அரசின் விசாரணை கமி‌ஷன் வேண்டும் என்றார். அது என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. என்னை பொறுத்தவரை சி.பி.ஐ. விசாரணை வேண்டும்.

    முதல் -அமைச்சர் நாற்காலி ஆடிக்கொண்டிருக்கிறது. கட்சி தாவல் தடை சட்டத்தை சபாநாயகர் பயன்படுத்தி இருக்கிறார். சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தபோது தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் அவரை காப்பாற்றினார்கள். அந்த நன்றி கூட அவரிடம் இல்லை.

    முதல்-அமைச்சருக்கும், துணை முதல் - அமைச்சருக்கும் இடையே பனிப்போர் நீடிக்கிறது. அவர்களுக்குள்ளேயே சண்டை போட்டுக் கொண்டு இந்த ஆட்சியை கலைத்து விடுவார்கள். இந்த விசாரணை கமி‌ஷன் கண்துடைப்பு வேலையாகும். ஜெயலலிதா சிகிச்சை குறித்து தவறாக அவதூறு பரப்புவது வெட்கக்கேடாகும்.

    தமிழக அமைச்சர்கள் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து கொண்டிருக்கிறார்கள். அதை வைத்து பார்க்கப்போனால் முன்னாள் முதல் -அமைச்சர் ஜெயலலிதா மரணத்திலேயே தமிழக அமைச்சர்களுக்கு பங்கு உள்ளது. எனவே, சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும். தீபக் பேட்டியை பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

    நடராஜன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது தொடர்பாக சசிகலாவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர், பரோலில் வந்து பார்க்க விரும்பினால் நாங்கள் பரோலுக்கு விண்ணப்பிப்போம். டெல்லி அரசியல் தமிழகத்தில் எதிரொலிப்பதாக கருதுகிறேன். தமிழகத்தில் தேர்தல் வர வாய்ப்புள்ளது. டி.டி.வி. தினகரன் தலைமையில் தேர்தலை சந்திப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×