என் மலர்
செய்திகள்

குதிரை பேரம் மூலம் ஆட்சியை தக்கவைக்க அரசு தினமும் போராடுகிறது: மு.க.ஸ்டாலின் பேட்டி
காஞ்சீபுரம்:
இன்று காலை காஞ்சீபுரத்தை அடுத்த செவிலிமேடு பகுதியில் திமுகவினரால் தூர் வாரப்பட்ட தாமரைக்குளத்தை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மக்கள் நலனை கருத்தில் கொண்டு தி.மு.க. பல்வேறு நலத்திட்டப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் உள்ள ஏரி, குளங்களை தூர் வாரி வருகிறோம்.
ஆட்சி அதிகாரத்தினை கையில் வைத்துள்ள அ.தி.மு.க. இதுபோன்ற மக்கள் நலப் பணிகளை செய்ய வேண்டும். நேற்றைய தினம் திருவண்ணாமலை மாவட்டத்தில் தி.மு.க. வினரால் தூர் வாரப்பட்ட 16 குளங்கள் மற்றும் 2 ஏரிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டேன்.
இது போன்று தமிழகம் முழுவதும் ஏராளமான குளங்கள் மற்றும் ஏரிகளை தூர் வாரும் பணியினை தி.மு.க. வினர் மேற்கொண்டு வருகின்றனர்.
நடைபெறும் அ.தி.மு.க. ஆட்சியில் மக்கள் நலன் குறித்த எந்த செயல்பாடும் இல்லை. நாளும் குதிரை பேரத்தின் மூலம் ஆட்சியை தக்க வைக்க அ.தி.மு.க. போராடுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத் தொடர்ந்து மு.க. ஸ்டாலின் உத்திரமேரூரில் தி.மு.க.வினரால் தூர் வாரப்பட்ட மாதிரியம்மன் குளம் மற்றும் செய்யூர் ஏரி போன்றவற்றினை பார்வையிட்டார்.
நிகழ்ச்சிகளில் மாவட்டச் செயலாளர்கள் க.சுந்தர் எம்.எல்.ஏ., தா.மோ. அன்பரசன் எம்.எல்.ஏ. மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் எழிலரசன், ஆர்.டி. அரசு, புகழேந்தி, நகர செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம், நிர்வாகிகள் சிறுவேடல் செல்வம், வி.எஸ். ராமகிருஷ்ணன், பி.எம். குமார், சி.வி.எம்.அ.சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக நேற்று இரவு மு.க. ஸ்டாலின் சின்ன காஞ்சீபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்துக்கு சென்றார். அங்கு அண்ணாவின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அங்குள்ள வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டார்.
இதைத்தொடர்ந்து அண்ணா நினைவு இல்லத்தின் அருகே தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்ட தளபதி படிப்பகத்தினையும், காஞ்சீபுரம், திருக்கச்சி நம்பித்தெருவில் கலைஞர் பவளவிழா மாளிகையில் அமைக்கப்பட்ட அண்ணா நினைவு நூலகத்தினையும் திறந்து வைத்தார்.






