என் மலர்
செய்திகள்

கிரண்பேடியை வெளியேற்றும் வரை காங்கிரஸ் போராட்டம் ஓயாது: நமச்சிவாயம் அறிவிப்பு
வில்லியனூர்:
புதுவை சட்டசபைக்கு 3 நியமன எம்.எல்.ஏ.க்களை குறுக்கு வழியில் நியமித்த மத்திய பாரதீய ஜனதா அரசை கண்டித்தும், மத்திய பாரதீய ஜனதா அரசின் ஏஜெண்டாக செயல்படும் கவர்னர் கிரண்பேடியை கண்டித்து, அவரை திரும்ப பெற வேண்டியும் காங்கிரஸ் சார்பில் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம் அருகே இன்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
இந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு மாநில காங்கிரஸ் செயலாளர் செந்தில்குமரன் தலைமை தாங்கினார். உண்ணாவிரத போராட்டத்தை மாநில காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் தொடங்கி வைத்து பேசினார்.
ஜனநாயக படுகொலை செய்துள்ள மத்திய பாரதீய ஜனதா அரசின் ஏஜெண்டு என்பதை கவர்னர் கிரண்பேடி நியமன எம்.எல்.ஏ. நியமிக்கப்பட்டது மூலம் நிரூபித்து உள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக கவர்னர் கிரண்பேடி செயல்பட்டு வருகிறார். மக்கள் நலத்திட்டங்களை கவர்னர் கிரண்பேடி முடக்கி காங்கிரஸ் ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தி வருகிறார்.

மக்கள் நல திட்டங்கள் முடக்கப்படுவதால் புதுவை மாநில வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. உடனடியாக கவர்னர் கிரண்பேடியை மத்திய பாரதீய ஜனதா அரசு திரும்ப பெற வேண்டும். கவர்னர் கிரண்பேடியை வெளியேறும் வரை புதுவை காங்கிரஸ் கட்சியின் போராட்டம் ஓயாது. இன்று வில்லியனூரில் போராட்டம் நடக்கிறது. நாளை நெல்லித்தோப்பில் போராட்டம் நடைபெறுகிறது. நாளை மறுநாள் அனைத்து கட்சியினர், சமூக அமைப்புகள் சார்பில் முழு கடையடைப்பு போராட்டம் நடக்கிறது. 11-ந்தேதி காரைக்காலில் போராட்டம் நடக்கிறது. இதுபோல கவர்னருக்கு எதிராக போராட்டம் தொடர்ந்து நடத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
உண்ணாவிரத போராட்டத்தில் அனந்தராமன் எம்.எல்.ஏ., காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் ஏ.கே.டி. ஆறுமுகம், ஏகாம்பரம், கண்ணபிரான், வட்டார காங்கிரஸ் தலைவர்கள் முரளிதரன், அய்யூப், சங்கர், தெற்குமாவட்ட காங்கிரஸ் பொருளாளர் குமரேஸ்வரன் உள்ளிட்ட காங்கிரசார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.






