search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    வெற்றி கணக்கை தொடங்குமா மும்பை இந்தியன்ஸ்?: டெல்லி அணியுடன் இன்று மோதல்
    X

    பயிற்சியின்போது மும்பை அணி வீரர் ரோகித் சர்மா, டெல்லி அணியின் இயக்குனர் கங்குலியுடன் பேசிக்கொண்டிருந்த காட்சி - டெல்லி அணி வீரர் டேவிட் வார்னர் வலைப்பயிற்சியில் ஈடுபட்டபோது எடுத்தபடம்.

    வெற்றி கணக்கை தொடங்குமா மும்பை இந்தியன்ஸ்?: டெல்லி அணியுடன் இன்று மோதல்

    • மும்பை அணியில் பேட்டிங்கில் ரோகித் சர்மா, இஷான் கிஷன், டிவால்ட் பிரேவிஸ், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, டிம் டேவிட் என்று பெரிய பட்டாளமே இருக்கிறது.
    • லக்னோ அணி தன்னுடைய முதலாவது ஆட்டத்தில் 20 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சிடம் வீழ்ந்தது.

    மும்பை:

    17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 2 லீக் ஆட்டங்கள் அரங்கேறுகின்றன. இதில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மாலை 3.30 மணிக்கு தொடங்கும் 20-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசனில் வெற்றி கணக்கை தொடங்காத ஒரே அணியாக தத்தளிக்கிறது. தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 6 ரன் வித்தியாசத்தில் குஜராத்திடம் தோல்வி கண்ட மும்பை அணி, ஐதராபாத்துக்கு எதிரான அடுத்த ஆட்டத்தில் எதிரணிக்கு 277 ரன்களை வாரி வழங்கியதுடன், 31 ரன் வித்தியாசத்தில் பணிந்தது. சொந்த மண்ணில் நடந்த முந்தைய ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானிடம் சரண் அடைந்தது. அந்த ஆட்டத்தில் மும்பை நிர்ணயித்த 126 ரன் இலக்கை 15.3 ஓவர்களில் ராஜஸ்தான் எளிதில் எட்டிப்பிடித்தது.

    மும்பை அணியில் பேட்டிங்கில் ரோகித் சர்மா, இஷான் கிஷன், டிவால்ட் பிரேவிஸ், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, டிம் டேவிட் என்று பெரிய பட்டாளமே இருக்கிறது. இருப்பினும் திலக் வர்மா தவிர வேறு யாரும் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, ஆகாஷ் மாத்வால், ஜெரால்டு கோட்ஜீ ஆகியோர் நல்ல நிலையில் இருக்கின்றனர். இருந்தாலும் கூட்டாக பந்து வீச்சு எதிரணிக்கு அச்சுறுத்தலாக அமையவில்லை. மபாகா, பியுஷ் சாவ்லா ஆகியோர் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியமானதாகும்.

    ரோகித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கி விட்டு ஹர்திக் பாண்ட்யாவை அந்த இடத்துக்கு அதிரடியாக கொண்டு வந்ததால் அதிருப்தி அடைந்துள்ள ரசிகர்கள் பாண்ட்யாவுக்கு எதிராக குரல் எழுப்பி வருகிறார்கள். அத்துடன் அது அணி வீரர்கள் மத்தியிலும் புகைச்சலை உருவாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கடும் நெருக்கடிக்கு மத்தியில் கேப்டனாக பணியாற்றும் ஹர்திக் பாண்ட்யா களத்தில் சரியான முடிவை எடுப்பதில் திணறுவதை பார்க்க முடிந்தது.

    முந்தைய ஆட்டங்களில் பந்து வீச்சாளர்களை பயன்படுத்தியதில் இழைத்த தவறுகளை திருத்தி சரிவில் இருந்து மீண்டு வர அந்த அணி புதிய வியூகங்களுடன் வரும். அத்துடன் அறுவை சிகிச்சையில் இருந்து மீண்டு உடல் தகுதியை எட்டி இரு தினங்களுக்கு முன்பு அணியினருடன் இணைந்த 'அதிரடி சூறாவளி' சூர்யகுமார் யாதவ் களம் இறங்குவது அந்த அணிக்கு உத்வேகம் அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதல் 2 ஆட்டங்களில் முறையே 4 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சிடமும், 12 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சிடமும் தோற்றது. அடுத்த ஆட்டத்தில் 20 ரன் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தியது. ஆனால் முந்தைய ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிராக பந்துவீச்சில் 272 ரன்களை விட்டுக்கொடுத்ததுடன், 106 ரன் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை தழுவியது.

    டெல்லி அணியில் பேட்டிங்கில் கேப்டன் ரிஷப் பண்ட், டேவிட் வார்னர், பிரித்வி ஷா, டிரிஸ்டான் ஸ்டப்சும், பந்து வீச்சில் கலீல் அகமது, முகேஷ் குமார், அன்ரிச் நோர்டியா வலுசேர்க்கிறார்கள். ஆல்-ரவுண்டர் அக்ஷர் பட்டேல் சோபித்தால் அந்த அணி மேலும் வலுப்பெறும். இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயத்தால் கடந்த 2 ஆட்டங்களை தவற விட்ட சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், காயத்தால் அவதிப்படும் மிட்செல் மார்ஷ் இன்றைய ஆட்டத்தில் ஆகியோர் ஆடுவது சந்தேகம் தான்.

    வெற்றிக் கணக்கை தொடங்க மும்பை அணியும், வெற்றிப் பாதைக்கு திரும்ப டெல்லியும் வரிந்து கட்டுவதால் சுவாரஸ்யத்துக்கு பஞ்சமிருக்காது. இவ்விரு அணிகளும் இதுவரை 33 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் 18-ல் மும்பையும், 15-ல் டெல்லியும் வெற்றி பெற்றுள்ளன.

    லக்னோவில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் சந்திக்கின்றன.

    லக்னோ அணி தன்னுடைய முதலாவது ஆட்டத்தில் 20 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சிடம் வீழ்ந்தது. அடுத்த ஆட்டங்களில் 21 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சையும், 28 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சையும் பதம்பார்த்து எழுச்சி பெற்றது. பேட்டிங்கில் குயின்டாக் டி காக், நிகோலஸ் பூரன் கைகொடுக்கிறார்கள். கேப்டன் லோகேஷ் ராகுல், குருணல் பாண்ட்யா ஆகியோரும் நல்ல பங்களிப்பை அளிக்கின்றனர். தேவ்தத் படிக்கல், மார்கஸ் ஸ்டோனிஸ், ஆயுஷ் பதோனி ஆகியோரின் ஆட்டம் ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது. பந்து வீச்சில் நடப்பு சீசனில் அதிவேகமாக பந்து வீசும் 21 வயது மயங்க் யாதவ் கடந்த 2 ஆட்டங்களிலும் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தியதுடன் ஆட்டநாயகன் விருதையும் பெற்று கலக்கினார். மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் சீராக வீசும் அவர் எதிரணியை கலங்கடிக்க காத்திருக்கிறார். அவரது பந்து வீச்சு லக்னோவுக்கு துருப்பு சீட்டாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

    முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணி தனது முதலாவது ஆட்டத்தில் 6 ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்சை சாய்த்தது. அடுத்த ஆட்டத்தில் 63 ரன் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சிடம் தோற்றது. அதற்கு அடுத்த ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை பந்தாடியது. முந்தைய ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சிடம் போராடி வீழ்ந்தது. அந்த ஆட்டத்தில் கேப்டன் சுப்மன் கில்லின் அரைசதம் (89 ரன்) மற்றும் சாய் சுதர்சனின் (33 ரன்) அதிரடியால் 199 ரன் குவித்த குஜராத் அணி இரு கேட்ச் வாய்ப்பை கோட்டை விட்டதன் விளைவு சறுக்கலை சந்திக்க நேர்ந்தது. அந்த அணியில் பந்து வீச்சில் உமேஷ் யாதவ், ஒமர்ஜாய், ரஷித் கான், நூர் அகமது, மொகித் ஷர்மா ஆகியோர் நம்பிக்கை அளிக்கிறார்கள். காயம் காரணமாக கடந்த ஆட்டத்தில் டேவிட் மில்லர் ஆடாததால் வில்லியம்சன் களம் இறங்கினார். மில்லரின் காயத்தன்மை குறித்த விவரம் வெளியிடப்படவில்லை. இதனால் இந்த ஆட்டத்திலும் வில்லியம்சன் ஆடுவார் என்று தெரிகிறது.

    சமபலம் வாய்ந்த அணிகள் மோதும் இந்த ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் மோதிய 4 ஆட்டங்களிலுமே குஜராத் அணியே வாகை சூடியுள்ளது.

    இந்த போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    Next Story
    ×