search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    திருமணமான பெண்கள் முதல் மூன்று மாதங்களில் சந்திக்கும் பிரச்சினைகள்
    X
    திருமணமான பெண்கள் முதல் மூன்று மாதங்களில் சந்திக்கும் பிரச்சினைகள்

    திருமணமான பெண்கள் முதல் மூன்று மாதங்களில் சந்திக்கும் பிரச்சினைகள்

    திருமணமான ஒவ்வொரு பெண்ணும் கணவன் வீட்டில் ஆரம்ப காலத்தில் தன்னை எப்படி நடத்துகின்றனர், ஒவ்வொரு விசயத்திற்கும் தன்னை எப்படி எல்லாம் குறை கூறினார்கள் என்பதை மறப்பதில்லை.
    ஒரு பாத்திரம் கூட சரியாக கழுவ தெரியவில்லை. எவ்வளவு தண்ணீர் வீணாக செலவு செய்கிறாள், இப்படியா சாம்பார் வைப்பாங்க, சாம்பாருக்கு இவ்வளவு பருப்பா, என சமையலில் தொடங்கி அனைத்து வேலைகளிலும் மாமியார்கள் தங்களது மருமகளை குறை கூறுவார்கள். புதிதாக திருமணம் நடைபெறக்கூடிய அனைத்து வீடுகளிலும் முதல் மூன்று மாதத்திற்கு வரக்கூடிய பிரச்சனைகள் தான் இவை. இதில் சில வீடுகள் விதிவிலக்கே. இருந்தாலும், கல்யாணம் ஆகி முதல் ஒரு வருடம் அனைத்து பெண்களுக்குமே சவாலான ஒன்றுதான்.

    புது வீடு, புது உறவுகள், புதிய நடைமுறைகள் என பலவற்றை பழக வேண்டியிருக்கும். அதுவரை தனது வீடுகளில் மகாராணிகளாக இருக்கும் பெண்கள் திருமணம் ஆனதும் எனக்கென ஒரு ஆண், எனது ஹீரோ வந்துவிட்டான் என புது வாழ்க்கைக்குள் நுழைவர்.

    ஆனால், அந்த புது வாழ்வில் வரக்கூடிய இன்னல்களை கையாளுவதற்கு பெரும்பாலானோர் தயாராவதில்லை. அப்படி புதுமண வாழ்வில் ஒரு பெண் எவற்றையெல்லாம் கையாளவேண்டும், அவளுக்கு வரக்கூடிய சிக்கல்கள் என்ன என்பது குறித்து உளவியல் ஆலோசகர் கூறுவதை கேட்கலாம்.

    ஒவ்வொரு வீட்டிற்கும் எழுதப் படாத பல விதிமுறைகள் இருக்கும். உதாரணமாக இந்த கரண்டியை இதற்குத்தான் பயன்படுத்த வேண்டும், ஒவ்வொரு வேலையையும் இப்படித் தான் செய்யவேண்டும் என பல நடைமுறைகள் இருக்கும். அப்படி இருக்கும் போது ஒரு பெண் திருமணமாகி வரும்போது அவற்றை புரிந்துகொள்ளுதல் அவசியமாகிறது.

    அவளுடைய வீட்டிலும் இதே போன்ற விதிமுறைகள் இருந்திருக்கும் அவற்றைக் கடந்து புதிய நடைமுறைகளுக்கு அவள் பழகவேண்டும். ஆனால், இவற்றை புரிந்து கொள்வதிலிருந்தே பிரச்சனைகள் ஆரம்பமாகிறது.

    திருமணத்திற்கு முன்பு வரை எல்லா மாமியார்களும் தங்களது மருமகளிடம் மிகவும் பாசமாக இருப்பார்கள். ஆனால் திருமணம் ஆன பின்பு அவர்களுக்கும் ஒரு பாதுகாப்பின்மை, பொசசீவான மனப்பான்மை ஏற்படும். அதுவரை தன் மகனைப் பாராட்டி சீராட்டி வளர்த்திருப்பார்கள். திருமணம் ஆனதும் மகன்களும் தன்னை விட்டு சற்று விலகி செல்வது போன்ற உணர்வு ஏற்படும்.

    அதே சமயம் இந்த பெண்ணிற்கும் தனது கணவருடன் அதிக நேரம் செலவிட வேண்டும், அவரை நன்கு புரிந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணங்கள் இருக்கும். இந்த சூழ்நிலை மாமியார் மருமகள் இடையே சற்று விரிசலை ஏற்படுத்தவும் வழிவகுக்கிறது. மகனை தன்னிடம் இருந்து பிரித்து செல்வது போன்ற உணர்வு உண்டாகும். இப்படி மாமியார்களுக்கு ஏற்படும் இந்த உணர்வுகள் சில சமயங்களில் மருமகளின் மீது கோபமாக வெளிப்படலாம்.

    புதிதாக திருமணம் ஆகும் பெண்களுக்கு இரண்டு விதமான மனஸ்தாபங்கள் வரும். திருமணம் ஆகும் முன் தனது திருமண வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்புகள் பெண்களிடையே அதிகமாக இருக்கும். ஆனால் திருமணத்திற்கு பின் சூழ்நிலைகள் முற்றிலும் மாறாக இருக்கும்.

    பின்னர் ஒவ்வொரு ஆண்களும் தங்களது அம்மாக்களைப் பார்த்தே வளர்ந்திருப்பர். அவர்களது மனைவியும் அம்மாவை போன்றே எல்லா காரியங்களையும் செய்வார் என எதிர்ப்பார்ப்பார்கள். பெரும்பாலானோர் இங்கு ஒரு விசயத்தை கவனிக்க மறந்து விடுகின்றனர். தனது தாய் திருமணம் ஆன புதிதில் எப்படி இருந்தார் என அவர்களுக்கு தெரிவதில்லை. 55 வயதில் உள்ள அவரது பக்குவமும், பதின்ம வயதில் உள்ள தனது மனைவியின் பக்குவமும் வேறு என்பதை மறந்து விடுகின்றனர். இவையும் பெண்களிடையே மனஸ்தாபத்தை ஏற்படுத்துகின்றது.

    திருமணமான ஒவ்வொரு பெண்ணுக்கும் முதல் மூன்று மாதங்கள் என்பது மறக்கமுடியாத ஒன்று. ஆரம்ப காலத்தில் தன்னை எப்படி நடத்துகின்றனர், ஒவ்வொரு விசயத்திற்கும் தன்னை எப்படி எல்லாம் குறை கூறினார்கள் என்பதை எந்த பெண்ணும் மறப்பதில்லை.

    திருமணத்திற்கு முன்பு அந்தக் குடும்பத்தினரை பல முறை சந்தித்து பேசியிருப்போம். ஆனால், திருமணத்திற்கு பின்பு எதார்த்தம் வேறு விதமாக இருக்கும். யார் யாரை நம்பலாம், இவர்கள் நம் மீது உண்மையில் அக்கறையாக இருப்பார்களா, நம்மை நல்ல முறையில் கவனித்துக் கொள்வார்களா என்ற தயக்கம் இருக்கும்.

    புதிதாக திருமணம் ஆகும் பெண்கள் அனைவரும் முதலில் தங்களுக்கு திருமண வாழ்க்கை எப்படி இருக்கவேண்டும் என்பதை உறுதியாக முடிக்க வேண்டும். மனதளவில் எல்லாவற்றையும் சந்திக்க தயாராக இருக்க வேண்டும். அந்தக் காலத்தில் பெண்கள் எல்லாவற்றையும் சந்திக்க தயாராக இருந்தனர். அவர்கள் அந்த சூழ்நிலையிலேயே வளர்க்கப்பட்டனர்.

    எல்லா சூழ்நிலைகளுக்கும் பெண் தயாராக இருக்கவேண்டும். திருமண வாழ்க்கை ஆரம்பகாலத்தில் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். இன்று பல பெண்கள் தங்களை மனதளவில் தயார் படுத்திக்கொள்ள தவறிவிடுகின்றனர். ஒரு ஆண் எல்லாவற்றையும் தன்னிடம் பகிர்கின்றார், எப்போதும் எனக்கு முன்னுறிமை கொடுக்கின்றார் எனும் போது நான் அவரை நன்கு புரிந்து கொண்டேன் என நினைத்துக் கொள்கின்றனர். ஆனால், திருமண வாழ்க்கையில் ஈடுபடும் போது எதார்த்தங்கள் வேறு மாதிரி இருக்கலாம்.

    திருமண வாழ்க்கைக்கு என எந்த பெண்ணும் தனியாக தயாராகவேண்டும் என்றில்லை. முதலில் தங்களது உணர்வுகளை கட்டுப்படுத்த தெரிந்திருக்கவேண்டும். தங்களது உணர்வுகளை சமநிலைப்படுத்தும் போது தான் அவர் திருமண வாழ்க்கைக்கு தயாராகிவிட்டார் என்றர்த்தம். தனது திருமண வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும், அதில் நான் எப்படி செயல்படவேண்டும் என்பதில் பெண்கள் தெளிவாக இருக்கவேண்டும்.
    Next Story
    ×