search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சுகமாக செல்லும் பெண்களின் வெற்றிப் பயணம்...
    X

    சுகமாக செல்லும் பெண்களின் வெற்றிப் பயணம்...

    வாழ்க்கையில் இன்று முன்னேறிய நிலையில் இருக்கும் பல பெண்கள் மனோபலத்தை தங்கள் வாழ்க்கை அனுபவம் மூலம் பெற்றிருக்கிறார்கள். பெண்கள் மனோபலத்தை பெறுவதற்கான வழிகளை பார்க்கலாம்.
    மனபலம் நிறைந்த பெண்களால் மட்டுமே வாழ்க்கையில் சாதனை படைக்க முடியும். மனபலம் என்பது இன்னொருவரிடம் இருந்து பெறப்படும் விஷயம் அல்ல, ஒவ்வொரு பெண்ணும் தனக்குள் தானே அதனை உருவாக்கிக்கொள்ள வேண்டும். வாழ்க்கையில் இன்று முன்னேறிய நிலையில் இருக்கும் பல பெண்கள் மனோபலத்தை தங்கள் வாழ்க்கை அனுபவம் மூலம் பெற்றிருக்கிறார்கள். இந்த அனுபவம் என்பது பொருள் பொதிந்த வார்த்தையாகும், வாழ்க்கையில் ஒருவருக்கு வெற்றியை விட தோல்விகளே அதிக அனுபவத்தைத் தரும். வெற்றியில் கிடைக்கும் அனுபவம் எல்லைக்கு உட்பட்டது, ஆனால் தோல்வியில் கிடைக்கும் அனுபவங்கள் எல்லை இல்லாதது. அதனால் தோல்விகளை கண்டு ஒருபோதும் துவண்டுவிடாதீர்கள்.

    பெண்கள் மனோபலத்தை பெறுவதற்கான வழிகள்:

    நிறைய புத்தகங்களைப் படியுங்கள். சாதனையாளர் களின் சுய சரிதைகளை படித்து அவர்கள் கடந்து சென்ற பாதைகளையும், கஷ்டங்களையும் புரிந்துகொள்ளுங்கள். வாழ்க்கையில் கஷ்டங்களையும், தோல்விகளையும் சந்திக்கும்போதெல்லாம், ‘நாம் கஷ்டங்களை சந்திப்பதற்காகவே பிறந்திருக்கிறோம்’ என்று நினைத்தால் மனம் சோர்ந்து போகும். மாறாக அந்த மாதிரியான நேரங்களில், ‘நாம் வாழப் பிறந்திருக்கிறோம். நிச்சயம் வெற்றியடைவோம்’ என்ற தன்னம்பிக்கையை மனதில் அதிகரிக்கச் செய்யவேண்டும்.

    நீங்கள் எந்த துறையில் இறங்கினாலும் உங்களுக்கு அதைப்பற்றிய அடிப்படை அறிவு தேவை. அதனை கல்வி மூலமும், பக்குவம் மூலமும் பெற்றிடுங்கள். கல்வியும், பக்குவமும், பண்பான செயல்பாடுகளும் உங்கள் மனோபலத்தை அதிகரிக்கச்செய்யும்.

    குறைகள் இல்லாத பெண்கள் இல்லை. வெற்றியடைந்த எல்லா பெண்களுமே, குறை என்ற அந்த சுமையையும் சுமந்துகொண்டுதான் வெற்றியை நோக்கி பயணித்திருக்கிறார்கள். குறைகளை முடிந்த அளவு நிவர்த்திசெய்யுங்கள். அதன் மூலம் சுமைகள் குறைந்து, வெற்றிக்கான உங்கள் பயணம் சுகமானதாக மாறும்.

    குறைகள் எல்லா பெண்களிடமும் இருப்பதுபோல் நிறைகளும் எல்லா பெண்களிடமும் இருக்கின்றன. அந்த நிறைகளை அடையாளங்காணவேண்டும். அவைகளை மேம்படுத்தவேண்டும். மேம்படுத்தும் அந்த பயணத்தில் தொடக்கத்தில் சிலவித தயக்கங்களும், தடுமாற்றங்களும் ஏற்படத்தான் செய்யும். தொடர்ந்து முயற்சித்தால் தயக்கம் அகலும். மனோபலம் மேம்படும்.

    பெண்கள் ஒருபோதும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளக்கூடாது. பொது இடங்களில் நிற்கவும் பொதுமக்களிடம் பேசவும் தயங்குகிறவர்கள் மனோபலம் இல்லாதவர்கள். அத்தகைய குறைகள் உங்களை குடத்தில் இட்ட விளக்காய் மாற்றிவிடும். அதனால் உங்களுக்குரிய அங்கீகாரத்தைப்பெற எல்லோரிடமும் சகஜமாகப் பழகுங்கள். அது அன்பானதாகவும், எல்லைகொண்டதாகவும், அர்த்தமிக்கதாகவும் இருக்கவேண்டும்.

    பெண்கள் என்றாலே பலகீனமானவர்கள் என்ற எண்ணம் தவறு. இன்றைய சமுதாயத்தில் பெண்களின் கல்விக்கும், முன்னேற்றத்திற்கும் நல்ல அங்கீகாரம் கிடைக்கிறது. எல்லா துறைகளிலும் அவர்களால் சிறந்துவிளங்கமுடியும். ‘நானும் ஒரு பெண். என்னாலும் பிரகாசிக்கமுடியும்’ என அடிக்கடி உங்கள் மனதிடமே சொல்லிக் கொள்ளுங்கள். மனோபலம் அதிகரிக்கும்.

    உங்கள் மனோபலத்தை சிதைப்பது மனநெருக்கடிதான், அந்த மன நெருக்கடியை களைந்து மனோபலத்தை பெருக்க முதலில், எந்த நேரம் உங்களுக்கு அதிக மன நெருக்கடி ஏற்படுகிறது என்பதை கணியுங்கள், அந்த நேரத்தில் குறைந்தது 15 நிமிடம் அமைதியாக நடந்தால் மனநெருக்கடி நீங்கும். தினமும் குறைந்தது 10 நிமிடம் தியானம் செய்யுங்கள். அந்த நேரத்தில் வேறு சிந்தனைகள் எதுவும் இல்லாமல் மனது அமைதியாகும். குடும்பத்தினருடனோ, நண்பர்களுடனோ செலவிட வாரத்தில் ஒரு நாளை ஒதுக்கி வையுங்கள். அன்று முழுக்க உங்கள் மனதில் சந்தோஷம் பொங்கி புத்துணர்ச்சி ஏற்படும்.

    உங்களுக்கென்று ஒரு பொழுதுபோக்கு அவசியம் தேவை. அது இசை கேட்பதற்காகவோ, நடனம் ஆடுவதாகவோ, அல்லது பார்ப்பதாகவோ, ஓவியம் வரைவதற்காகவோ எதுவாகவும் இருக்கலாம். வீட்டு அருகில் பூஞ்செடிகள் வைத்து பராமரியுங்கள். வளர்ப்பு பிராணிகளிடமும் அன்பு செலுத்துங்கள். மனநெருக்கடிகளில் இருந்து நீங்கள் விடுபட்டுவிட்டால் மனம் அமைதிபெறும். அப்போது சிந்தனையும், செயல்திறனும் நன்றாக இருக்கும். புதிய நம்பிக்கையும் பிறக்கும். நம்பிக்கை மனோபலத்தை அதிகரிக்கும்.
    Next Story
    ×