search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கிரெடிட் கார்டும் கவனிக்க வேண்டியதும்...
    X

    கிரெடிட் கார்டும் கவனிக்க வேண்டியதும்...

    நமது வருமானத்தை வழக்கம்போல திட்டமிட்டுக்கொண்டு, அதற்குள் கிரெடிட் கார்டு பயன்பாட்டையும் வைத்துக் கொண்டால் சிக்கல்கள் இல்லாமல் இருக்கலாம்.
    நவீன பொருளாதாரம் வழங்கும் எந்த வசதியையும் உடனடியாக புறக்கணிக்கவோ, அதைக் கொண்டாடவோ முடியாது. அப்படித்தான் கிரெடிட் கார்டு பயன்படுத்துவதையும் பார்க்க வேண்டும். நமது வருமானத்தை முன்கூட்டியே செலவு செய்கிறோம் என்கிற எண்ணம் இருக்க வேண்டும். கிரெடிட் கார்டு மூலம் அதிக கடன் வாங்கிவிட்டு கட்ட முடியவில்லை என்றால் அதற்கு வட்டி, அபராதம், தாமத கட்டணம் என இன்னபிற வகைகளில் கூடுதல் பணத்தையும் இழக்க வேண்டும்.

    எனவே நமது வருமானத்தை வழக்கம்போல திட்டமிட்டுக்கொண்டு, அதற்குள் கிரெடிட் கார்டு பயன்பாட்டையும் வைத்துக் கொண்டால் சிக்கல்கள் இல்லாமல் இருக்கலாம். கிரெடிட் கார்டு கடனை திருப்பி செலுத்த ஒவ்வொரு நிறுவனமும் குறிப்பிட்ட கால அவகாசம் தருகிறது. இந்த காலத்துக்குள் வாங்கிய கடனை முழுமையாக செலுத்திவிட வேண்டும்.

    மொத்த நிலுவை தொகையில் குறைந்தபட்ச தொகையை செலுத்தவும் வாய்ப்பு உண்டு. மீதம் உள்ள தொகையை கடனாகக் கருதி அதற்கு வட்டி விதிக்கப்படும். ஆனால் கிரெடிட் கார்டு கடனுக்கு வட்டி வீதம் அதிகம். கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுத்துக் கொள்ளவும் முடியும். இதற்கு பரிமாற்ற கட்டணம் மற்றும் வட்டியும் அதிகம். ரூ.1,000 எடுத்தால் அதற்கு 250 ரூபாய் வரை பரிமாற்றக் கட்டணமாக இருக்கும்.



    மேலும் பணம் எடுத்த நாளிலிருந்து திரும்ப கட்டும் தேதிவரை வட்டி கணக்கிடப்படும். வட்டி 35 சதவீதம் முதல் 40 சதவீதம் என்கிற அளவில் இருக்கும். கிரெடிட் கார்டு மூலம் வாங்கிய கடனை மாத தவணையாக திருப்பிச் செலுத்தும் வசதியும் உள்ளது. ஆனால் இதற்கான வட்டியும் அதிகம். உங்கள் மாத வருமானத்தில் இருந்து தனிநபர் கடன் செலுத்துவதுபோல செலுத்த வேண்டும்.

    நமது மாத வருமானத்தைப் போல குறைந்த பட்சம் மூன்று மடங்கிலிருந்து கடன் கிடைக்கலாம். நபர்களின் மதிப்பிற்கு ஏற்ப நிறுவனங்கள் இதை முடிவு செய்யும். ஆனால் கார்டை அதிகமாக பயன்படுத்துகிறோம், வருமானத்தின் எல்லை தாண்டி செலவு செய்கிறோம் என்று யோசித்தால் கிரெடிட் அளவை குறைக்கும்படி செய்து கொள்ளலாம். அல்லது திரும்ப அளித்து விடலாம். கிரெடிட் கார்டை பயன்படுத்தும் போது விருது புள்ளிகள் கிடைக்கும்.

    இதற்கு சில சலுகைகள் உண்டு. 100 ரூபாய்க்கு பயன்படுத்தினால் ஒரு புள்ளி என்கிற வீதத்தில் இது இருக்கலாம். அதிகப் புள்ளிகள் சேர்ந்தால், திரும்ப பொருள் வாங்கும் போது விலை குறைப்பு அல்லது சலுகை கிடைக்கும். சரியாக கையாண்டால் இந்த புள்ளிகள் மூலமும் பலன் பெறலாம். முந்தைய கடன் தொகையில் நிலுவை இருந்தால் மீண்டும் பொருள் வாங்கும் போது சலுகை கிடைக்காது.

    எனவே ஒரு கடனை முழுமையாக அடைத்துவிட்டு சலுகை பெறவும். கிரெடிட் கார்டை இனி பயன்படுத்த வேண்டாம் என முடிவு செய்து விட்டால் முறையாக ஒப்படைத்து ‘நோ டியூ’ சான்றிதழ் வாங்க வேண்டும். கார்டை ஒப்படைக்காமல், நான் பயன்படுத்தவே இல்லையே என்று சொல்ல முடியாது. பராமரிப்பு கட்டணம், ஆண்டுக்கட்டணம் கணக்கிடுவார்கள். அதைக் கட்டவில்லை என்றால் அதற்கும் வட்டி கணக்கிடப்படும்.
    Next Story
    ×