என் மலர்

  லைஃப்ஸ்டைல்

  புத்தாண்டு சபதங்களை இடைநிறுத்தாமல் நிறைவேற்றுவோம்...
  X

  புத்தாண்டு சபதங்களை இடைநிறுத்தாமல் நிறைவேற்றுவோம்...

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்த புத்தாண்டில் நீங்கள் நிறைய உறுதிமொழிகள், சபதங்களை ஏற்றிருப்பீர்கள். உங்கள் உறுதிமொழிகளையும், சபதங்களையும் இடையில் நிறுத்திவிடாமல் வெற்றிகொள்ள நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் சில....
  இந்த புத்தாண்டில் நீங்கள் நிறைய உறுதிமொழிகள், சபதங்களை ஏற்றிருப்பீர்கள். நன்றாகப் படிக்க வேண்டும், மருத்துவம், பொறியியல் என நினைத்த படிப்பில் சேர தகுதியான கட்-ஆப் மதிப்பெண் பெற வேண்டும், நினைத்த வேலையை கேம்பஸ் தேர்விலேயே வென்றுவிட வேண்டும், வேண்டாத பழக்கங்களை கைவிட வேண்டும், சொன்னதை செய்து முடித்து பெற்றோரிடம் ஆசைப்பட்டதை கேட்டுப் பெற வேண்டும் என பல்வேறு லட்சியங்களை நீங்கள் சவால்களாக ஏற்றிருக்கலாம். அதை அடைய வாழ்த்துக்கள். ஏறத்தாழ எல்லோருமே இப்படியான சபதங்களை ஏற்பதுண்டு. ஆனால் அதை தொடர்ந்து கடைப்பிடித்து வென்று முடிப்பவர்கள் வெகுசிலரே. உங்கள் உறுதிமொழிகளையும், சபதங்களையும் இடையில் நிறுத்திவிடாமல் வெற்றிகொள்ள நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் சில..

  சோம்பேறித்தனம்

  பலரது லட்சியங்களை வீழ்த்திய ஒரே அசுரன் சோம்பேறித்தனம். அலட்சிய மனப்போக்கு சோம்பேறித்தனத்தின் புகலிடமாகும். சின்ன விஷயம்தானே பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்ற அலட்சியத்தால் தள்ளிப்போடப்படும் பல்வேறு விஷயங்கள், அவசியமான நேரத்தில் நமது காலைவாரிவிடும்.

  இப்படி ஒட்டுமொத்தமாக சேர்ந்துவிடும் சின்னச்சின்ன விஷயங்கள், குறித்த நேரத்தில் எைதயும் செய்ய இயலாத சிக்கலை ஏற்படுத்தும். அதனால் பரபரப்பும், தவறுகளும் ஏற்படும். நீங்கள் எழுதி முடிக்காமல் மிச்சம் வைத்த பாடங்கள், கட்டுரைகள், ஓவியங்கள் கடைசி நேரத்தில் பரபரப்பை உருவாக்கியதை கண்டிருக்கிறீர்களா?

  ஒதுக்கி வைத்த பாடங்கள் பரீட்சையில் கேட்கப்பட்டு மதிப்பெண்களை இழந்த அனுபவம் நேர்ந்திருக்கிறதா? கல்விக்கு அவசியமான கத்தரிக்கோல், டேப், பசை, ஸ்டாப்லர் பின், காம்பஸ், புரொடக்டர், பள்ளி அடையாள அட்டை என எத்தனையோ சின்னச் சின்ன பொருட்களை பத்திரப்படுத்தி வைக்காமல், அவசியமான நேரத்தில் கையில் கிடைக்காமல் அவதிப்பட்டிருக்கிறீர்களா? அதை பள்ளி கிளம்பும் நேரத்தில் தேடி, வீட்டுப் பயிற்சிகளை செய்து முடிக்காமல் பள்ளியில் திட்டுவார்களே என சங்கடப்பட்டதுண்டா?

  இதுபோன்ற காரணங்களுக்காக பள்ளிக்கு முழுக்கு போட்டு, வகுப்பு புறக்கணிப்பவர்கள் உண்டு. இந்த விஷயங்களுக்கெல்லாம் அடிப்படையாக இருப்பது சோம்பேறித்தனம்தான். உங்களுக்கான பொருட்களை பத்திரமாக வைத்திருந்து, கொடுக்கப்பட்ட பயிற்சிகளை கடைசி நேரத்தில் முடிக்க முயலாமல், சுறுசுறுப்பாக செயல்பட்டு முன்கூட்டியே முடித்துவிட்டால் எந்த பரபரப்பும் இன்றி எல்லா செயல்களிலும் வெற்றி பெறலாம். அதற்கு முதலில் சோம்பேறித்தனத்தை களைய வேண்டும். இந்த புத்தாண்டின் லட்சியங்களையும் உங்கள் சோம்பேறித்தனம் களவுகொண்டுவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

  நேரமில்லையா?


  “எல்லாம் எனக்கும் தெரிகிறது, ஆனால் எனக்கு நேரம் போதவில்லையே” என ஆதங்கப்படுகிற ரகமா நீங்கள்? எல்லோருக்குமே இதே 24 மணி நேரம்தான் என்பதை உங்களுக்கு நினைவுபடுத்துகிறோம். இந்த 24 மணி நேரத்தில்தான் உங்களால் முடியாததையெல்லாம் இன்னொருவர் செய்து கொண்டிருக்கிறார். அப்படியிருக்க உங்களால் முடியாமல்போக காரணம் என்ன என்பதை நீங்களே ஆராய்ந்தறிந்து கொள்ள வேண்டும்.

  அதற்கு உங்கள் நேரத்தை நீங்கள் எப்படி செலவிடுகிறீர்கள் என்பதை முதலில் எழுதிப் பாருங்கள். எந்தச் செயலுக்கு அதிகமான நேரத்தை வீணடிக்கிறீர்கள் என்பதை கண்டறிந்து அதை கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள். மிச்சம்பிடித்த நேரத்தை உங்கள் லட்சியத்தை வெற்றிகொள்ளப் பயன்படுத்துங்கள்.

  பயம் வேண்டாம்

  பலரது வெற்றிகளை தட்டிப்பறிப்பதில் பயத்திற்கு முக்கிய இடமுண்டு. தோல்வி பயத்தில் ஒரு காரியத்தை தொடங்காமலே தோற்றவர்கள் நிறைய பேர். பல திறமைகள் நம்மிடம் இருப்பதையே ஒரு ஓரமாக ஒதுங்கியிருக்கும் பயம் மறக்கடிக்கச் செய்துவிடுகிறது.  கல்விப் பருவத்தில் பயம் கொள்ள அவசியமில்லை. சிறுகச்சிறுகப் படித்துக் கொண்டே வந்தால் நிச்சயம் தோல்விக்கு வாய்ப்பே இல்லை. உண்மையில் முடியாததென்று எதுவுமில்லை. உங்களுடன் படிக்கும் சிலர் முழு மதிப்பெண் பெறும் பாடங்களில் உங்களால் தேர்ச்சிகூட அடையமுடியாதா என்ன?

  அடிப்படை பாடங்களான ஆங்கிலமும், கணிதமும், அறிவியலும் சிலருக்கு பயமுறுத்தும் பாடங்களாக அமைந்துவிடுவது உண்டு. நிச்சயம் இவை வாழ்வின் அடிப்படை அறிவை வளர்க்கத் தேவையான பாடங்களாகும். நீங்கள் எவ்வளவு சிரமப்பட்டேனும் இந்தப் பாடங்களில் தேர்ச்சிக்கு முயல வேண்டுமே தவிர பயந்து ஒதுங்கி விடக்கூடாது. பள்ளிக் கல்விக்குப் பிறகு, நீங்கள் விருப்பம்போல உங்கள் பிரியமான பாடப்பிரிவை படித்து வெற்றிபெறலாம். பயத்தை வெற்றிகொள்ள ஒரே ஒரு மந்திரச்சொல்லை மனதில் உச்சரியுங்கள், அது “என்னால் முடியும்” என்பதுதான்!

  புலம்பாதீர்கள்...

  லட்சியங்களை கோட்டைவிட்டுவிட்டு ‘என்னால் முடியவில்லையே’ என்றும், ‘எனக்கு அது கிடைக்கவில்லையே’ என்றும் புலம்பிக் கொண்டிருக்காதீர்கள். உங்கள் இயலாமைக்கு பெற்றோரையோ, ஆசிரியரையோ, மற்ற எவரையுமோ குற்றம் சொல்லாதீர்கள்.

  உங்களின் செயல்பாடுகள் முழுமையாகவும், முயற்சிகள் சரியானதாகவும் இருந்தால், இப்போது வெற்றி நழுவிப்போயிருந்தால், அடுத்தமுறை நிச்சயமாக அது சாத்தியமாகும், வெற்றி கைகூடும். அதற்காக அழுது புலம்புவதோ, யார்மீதும் குற்றம் சொல்வதோ தீர்வாகாது. கடந்த முறை உங்கள் லட்சியம் நழுவிப்போனதற்கான காரணத்தை ஆராய்ந்து, இந்த முறை நிச்சயம் அந்த வெற்றியை ருசிப்பது என உறுதியுடன் செயல்படுங்கள்.

  திட்டமும், செயலும்...


  உங்கள் லட்சியத்தை உறுதியாக அடைய நீங்கள் பின்பற்ற வேண்டியது, சரியான திட்டமிடலும், செயல்பாடும்தான். இந்த லட்சியத்தை ஏன் தேர்வு செய்தீர்கள்? அது உங்கள் வாழ்க்கையை எப்படி வளப்படுத்தும்? அதில் ஏன் நீங்கள் தோல்வி அடையக்கூடாது? என்பதை தெளிவாக சிந்தனை செய்யுங்கள்.

  அதை வென்றுமுடிப்பது எப்படி? என திட்டமிடுங்கள். அதற்கு எதையெல்லாம் தடை செய்ய வேண்டும், எதை தியாகம் செய்ய வேண்டும், எந்த விஷயங்களை முன்னுரிமை கொடுத்து செய்ய வேண்டும்? என முடிவெடுங்கள். அதன்படி செயல்படுங்கள்.

  உங்கள் செயல்களை அவ்வப்போது ஆராயுங்கள். வெற்றியை நோக்கி சீராக சென்று கொண்டிருக்கிறீர்களா? என்பதை உறுதிப்படுத்துங்கள். நிச்சயம் நினைத்ததை நிறைவேற்றி முடிக்கலாம்.

  உங்கள் சபதங்களை நிறைவேற்ற தடையாக இருக்கும் இந்த விஷயங்களில் நீங்கள் கவனமாக இருந்தால், உங்கள் புத்தாண்டு கனவுகள் எளிதில் நிறைவேறிவிடும். வெற்றி அடைய வாழ்த்துக்கள்.
  Next Story
  ×