search icon
என் மலர்tooltip icon

    பெண்கள் மருத்துவம்

    பெண் பாலின விகிதமும்.. பிரசவமும்..
    X
    பெண் பாலின விகிதமும்.. பிரசவமும்..

    பெண் பாலின விகிதமும்.. பிரசவமும்..

    ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு ஏற்ப பிறக்கும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்பான பாலின விகிதம் 7 மாநிலங்களில் சரிவை சந்தித்துள்ளது.
    குழந்தைகள் மற்றும் தாய்வழி ஆரோக்கியம், ஊட்டச்சத்து, குடும்ப கட்டுப்பாடு, கல்வி அறிவு, திருமண வயது, நல வாழ்வு, சுகாதாரம் உள்ளிட்ட அம்சங்களை அடிப்படையாகக்கொண்டு தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு (என்.எப்.எச்.எஸ்) மேற்கொள்ளப்படுகிறது. கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கி இரண்டு கட்டங்களாக கள ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது.

    பெரியவர்களிடையே உடல் பருமன் அதிகரித்து வரும் போக்கு நிலவுவதை கள ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த 2015-16-ம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, 15-49 வயதுக்குட்பட்ட அதிக எடை கொண்ட பெண்கள் மற்றும் ஆண்களின் விகிதம் அனைத்து மாநிலங்களிலும் அதிகரித்துள்ளது. ஆந்திரப் பிரதேசம், கோவா, கர்நாடகா, தெலுங்கானா, கேரளா மற்றும் இமாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில், 15 முதல் 49 வயதுக்குட்பட்ட பெண்கள் மற்றும் ஆண்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர் உடல் பருமனாக உள்ளனர்.

    ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு ஏற்ப பிறக்கும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்பான பாலின விகிதம் 7 மாநிலங்களில் சரிவை சந்தித்துள்ளது. கோவா, இமாச்சலப் பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில், இந்த விகிதம் 900-க்கும் குறைவாக உள்ளது. ஆயிரம் ஆண்களுக்கு மேல் பெண் குழந்தைகள் பிறக்கும் பாலின விகிதம் கொண்ட ஒரே மாநிலமாக திரிபுரா உருவெடுத்துள்ளது.

    2015-16-ம் ஆண்டு 51 சதவீதமாக இருந்த பதின்ம வயது கர்ப்பம் 43 சதவீதமாக குறைந்துள்ளது. மேலும் 18 வயதிற்குள் திருமணம் செய்து கொள்ளும் பெண்களின் எண்ணிக்கையும் குறைந்திருக்கிறது. 2015-16-ம் ஆண்டு கணக்கெடுப்பின்போது குழந்தை திருமண விகிதம் 26.8 சதவீதமாக இருந்தது. தற்போது 23.3 சதவீதமாக குறைந்துள்ளது.

    மருத்துவ மையங்கள், மருத்துவமனைகள் மற்றும் பிற மருத்துவ வசதி கொண்ட இடங்களில் நடக்கும் பிரசவம் 2015-16-ல் 78.9 சதவீதமாக இருந்தது. தற்போது 88.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. எனினும் சிசேரியன் பிரசவங்கள் அரசு மருத்துவமனைகளைக் காட்டிலும் தனியார் மருத்துவ மனைகளில் அதிகம் நடைபெறுகின்றன. தனியார் மருத்துவமனைகளில் நடக்கும் சிசேரியன் பிரசவம் 47.4 சதவீதமாகும். அரசு மருத்துவமனைகளில் 14.3 சதவீதம் சிசேரியன் பிரசவம் நடைபெறுகிறது. குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலை கவலைக்குரியதாகவே உள்ளது.

    வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் எண்ணிக்கை (வயதுக்கு ஏற்ப உயரம்) சற்று குறைந்துள்ளது. 2015-16-ல் 38.4 சதவீதத்தில் இருந்து சமீபத்திய கணக்கெடுப்பில் 35.5 சதவீதமாக குறைந்துள்ளது. குடும்பத்தின் முக்கிய முடிவுகளை பெண்கள் எடுப்பது அதிகரித்து வருகிறது. தனியாகவோ அல்லது கூட்டாகவோ அதிகமான பெண்கள் சொந்தமாக வீடு வைத்துள்ளனர். இது 38.4 சதவீதத்தில் இருந்து 43.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. சமையலுக்கு கியாஸ் போன்ற எரிபொருளைப் பயன்படுத்தும் குடும்பங்களின் சதவீதம் 43.8 சதவீதத்தில் இருந்து 58.6 சதவீதமாக அதிகரித்துள்ளது.
    Next Story
    ×