
தைராய்டு பிரச்சினைக்காக தைராக்சின் சிகிச்சையை தொடங்கியதும், உடலில் இருந்து நீர் வேகமாக வெளியேறும். சராசரியாக 10 லிட்டர் நீர் வெளியேற்றப்பட்டால், உடல் எடையில் 10 கிலோ அளவுக்கு குறையும். எனவே, உடல் பருமனுக்கு தைராய்டு மட்டுமே காரணம் என்று நினைப்பது தவறு.
அதே நேரத்தில் கொழுப்புச் சத்து காரணமாக உடல் பருமன் ஏற்பட்டவர்களுக்கு உடல் எடை அதிகமாக இருக்கும். அவர்களுக்கு தைராய்டு உள்ளதாக நினைத்து மருந்துகளை கொடுத்து உடல் எடையைக் குறைக்க முயல்வது தவறான மருத்துவ முறையாகும்.
அதேபோல குழந்தையின்மைக்கும் தைராய்டு காரணம் என்று சொல்லப்படுகிறது. சில பெண்களுக்கு குழந்தையின்மை என்பது இயல்பானதாக இருக்கும். எனினும் தைராய்டு பிரச்சினையால் ஒரு பெண்ணுக்கு தாய்மை அடைவதில் சிக்கல் இருக்குமானால் அவற்றை உரிய பரிசோதனை மூலம் உறுதி செய்யலாம்.
தைராய்டு மிகுதியாலோ, குறைவாலோ அல்லது தைராய்டு எதிர் அணுக்களாலோ பெண்கள் பாதிக்கப்பட்டது நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு தகுந்த சிகிச்சை வழங்கி இந்த பிரச்சினையை சரிசெய்து விடலாம். அவர்கள் தாய்மை அடையவும் முடியும். இதற்கு மாறாக சில பெண்களுக்கு உடல்நல குறைபாட்டால் மகப்பேறின்மை பிரச்சினை இருக்கும். இதுபோன்ற பெண்களுக்கு தைராய்டு சிகிச்சை செய்வதில் பலனில்லை என்கிறார்கள் மருத்துவர்கள்.