search icon
என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    பள்ளி, கல்லூரிகளில் பெண்களின் மீதான பாலியல் குற்றங்களைத் தடுப்பது எப்படி?
    X

    பள்ளி, கல்லூரிகளில் பெண்களின் மீதான பாலியல் குற்றங்களைத் தடுப்பது எப்படி?

    • இந்தியாவில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க போக்சோ சட்டம் உள்ளது.
    • சிறு வயதில் இருந்தே பாலின சமத்துவம் என்றால் என்ன என்று சொல்லித்தர வேண்டும்.

    காலங்கள் கடந்தபோதும், நாகரிகங்கள் வளர்ந்தபோதும் பெண்களின் மீதான வன்முறைகளும், பாலியல் தாக்குதல்களும் குறைந்தபாடில்லை.

    வரதட்சணை, தொடுதல், பாலியல் வன்கொடுமை, பாலியல் வன்கொடுமைக்கான முயற்சிகள் என பெண்களின் மீதான தாக்குதல்கள் என்பது நீண்டுகொண்டே செல்கின்றன.

    பள்ளிகள், கல்லூரிகள் என எங்கு சென்றாலும் சொல்ல முடியாத துயரத்தை பெண்கள் அனுபவித்து வருகிறார்கள்.

    பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான துன்புறுத்தல்கள் குறித்தான புகார்கள் அதிகரித்திருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தேசிய மகளிர் ஆணையம் தகவலும் தெரிவித்திருந்தது.

    பாலியல் குற்றங்கள்

    இந்தியாவில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க போக்சோ சட்டம் உள்ளது. 18 வயதுக்கு கீழ் உள்ள அனைத்து குழந்தைகளும் பாலின வித்தியாசமின்றி, இச்சட்டத்தின் வரையறைக்குள் வருவார்கள். ஆனால், பள்ளிகளில் இதுகுறித்த விழிப்புணர்வு இல்லாததால் பல பள்ளி மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும்போதும் வெளியே சொல்லப்பயப்படுகிறார்கள்.

    பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் கடந்த 5 ஆண்டுகளை காட்டிலும் கணிசமாக அதிகரித்து இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    பள்ளி, கல்லூரிகளில்

    சமீப காலமாக பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் நடைபெறும் பாலியல் துன்புறுத்தல் குறித்த சம்பவங்களும், புகார்களும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. எனவே, பாலியல் துன்புறுத்தல்கள் பற்றியும், அவற்றை எவ்வாறு தடுப்பது என்பது குறித்தும் விழிப்புணர்வு சிறு வயதில் இருந்தே பெண் பிள்ளைகளிடம் ஏற்படுத்துவது அவசியம் ஆகிறது. இதுகுறித்து பல்வேறு தரப்பினர் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

    அரசு மனநல காப்பகத்தின் பேராசிரியரும், டாக்டருமான பூர்ண சந்திரிகா:-

    சிறு வயதில் இருந்தே பாலின சமத்துவம் என்றால் என்ன என்று சொல்லித்தர வேண்டும். பாலின சமத்துவத்தை நோக்கி நமது பயணம் இருக்க வேண்டும். சிறு வயதில் இருந்தே தொடுதலில் சரி எது? தவறு எது? என்பது குறித்து சொல்லித்தர வேண்டும். இதை வெளியில் சொல்வதற்கு அவர்களுக்கு தைரியத்தை கொடுக்க வேண்டும். மாணவி சோகமாக இருந்தால் என்ன நடந்தது என்று முதலில் கேட்க வேண்டும். அதை பக்குவமாக எதிர்கொள்ள வேண்டும். சமூக மாற்றத்திற்கான முதல் அடி வீட்டில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும். பெண்ணையும், ஆணையும் சமமாக பார்க்கும் நிலை வந்துவிட்டாலே போதும் இந்த நிலை மாறும்.

    பெண் தானே என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற மனநிலை மாற வேண்டும். சில இடங்களில் வீட்டிலேயே பாலியல் ரீதியான துன்புறுத்தல் நடப்பதால் அதை வெளியே சொல்ல பயப்படுகிறார்கள். எது நடந்தாலும் தைரியமாக வெளியே சொல்ல வேண்டும். பெண் பிள்ளை தான் பாதிக்கப்பட்டது குறித்து வெளியே சொல்லி பின்னரும் அவருக்கு தொடர்ந்து பாதுகாப்பாக அரணாக நாம் இருக்க வேண்டும். மாணவர்கள் மட்டுமில்லாமல் ஆசிரியர்களுக்கும் உளவியல் ரீதியான வகுப்புகள் எடுக்க வேண்டும். பாலியல் துன்புறுத்தல் பெண் குழந்தைகளுக்கு நடப்பது போல் ஆண் குழந்தைகளுக்கும் 18 சதவீதம் நடப்பதாக ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டு உள்ளது. எனவே, இருவருக்கும் பாலியல் ரீதியான விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம்.

    தமிழ்நாடு மாணவர்-பெற்றோர் நல சங்கத்தின் மாநில தலைவர் அருமைநாதன்:-

    உளவியல் ரீதியாக மாணவர்களை, ஆசிரியர்கள் எதிர்கொள்வது மட்டுமே இதற்கு தீர்வாக அமையும். ஒவ்வொரு பள்ளிக்கும், கல்லூரிக்கும் உளவியல் ஆசிரியர்களை அரசே நியமிக்க வேண்டும். தற்போது இருக்கும் மாணவர்கள் சின்ன அவமானத்தையோ, ஏமாற்றத்தையோ தாங்க முடியாத நிலையில்தான் வளர்கிறார்கள். ஒரு சின்ன அவமானம் ஏற்பட்டவுடன் தற்கொலை செய்துகொள்ளும் மனநிலையில் தான் இருக்கிறார்கள். பள்ளிகளிலோ, கல்லூரிகளிலோ எந்த பிரச்சினை நடந்தாலும் அதை வெளியில் கொண்டுவருவதில்லை. ஆசிரியர்கள், பெற்றோர்களிடம் பிரச்சினையை சொன்னால் நம்மைத்தான் தவறாக நினைப்பார்கள் என்று நினைத்துக்கொள்கிறார்கள்.

    பாலியல் குற்றங்களுக்கு தண்டனை மட்டுமே தீர்வு கொடுக்காது. தண்டனை கொடுத்தாலும் இதை சரிசெய்ய முடியாது. பாலியல் என்பது உளவியல் ரீதியான ஒன்று. சமுதாய மனநிலை மாறவேண்டும். பள்ளியில் இருந்தே மாணவ, மாணவிகளிடம் உளவியல் ரீதியாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். நாள்தோறும் உளவியல் ரீதியான விஷயங்களை பேச வேண்டும். அரசு செலவினம் பார்க்காமல் ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு உளவியல் ஆலோசகரை ஆசிரியராக நியமிக்க வேண்டும்.

    கல்லூரி மாணவி ரித்திகா ரமேஷ்:-

    12-ம் வகுப்பு படிக்கும் போது நானும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன். ஒவ்வொரு பெண்ணுக்கும் வெளியில் சொல்ல முடியாத நிறைய கதைகள் இருக்கின்றன. பெண் வெளியில் வந்து சொல்லும் போது அவர்களை மரியாதைக்குரியவர்களாக நடத்த வேண்டும். பாலியல் கல்வி கண்டிப்பாக அனைவருக்கும் தேவை. பெண் குழந்தைகள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று சொல்வதை காட்டிலும் ஆண் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று வளரும் போதே சொல்லி வளர்க்க வேண்டும். முடிந்த அளவிற்கு தவறு செய்தவர்களுக்கு தண்டனை விரைந்து வழங்கப்பட வேண்டும். அப்போது தான் சட்டத்தின் ஓட்டைகளில் இருந்து வெளியில் வர முடியாது என்ற பயம் தவறு செய்தவர்களுக்கு வரும்.

    கல்வியாளர் கல்யாணந்தி:-

    கோடை விடுமுறையின் போது மாணவர்களுடன் பெற்றோர்கள் நீண்ட நேரம் செலவிட முடியும். இந்த நேரத்தை பயன்படுத்தி பெற்றோர்கள் அவர்களிடம் செக்ஸ் கல்வி குறித்து பேசலாம். வெளியே செல்லும் நேரங்களில் யாராவது தவறாக நடந்துகொண்டால் உடனே என்னிடம் சொல்லுங்கள். நாங்கள் உங்களுக்கு உடன் இருப்போம் என்று தைரியம் சொல்ல வேண்டும். பெண் பிள்ளைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் நடந்த ஓரிரு நாட்களில் அவர்களிடம் சிறிய மாறுதல்கள் இருக்கும். அப்போது அவர்களிடம் உட்கார்ந்து பேச வேண்டும். பெற்றோர்கள் புகார் தெரிவிக்க முன்வரும் போதுதான் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு பயம் வரும். விழிப்புணர்வு அதிகமாக அதிகமாக தான் குற்றங்கள் குறையும்.

    Next Story
    ×