என் மலர்tooltip icon

    சமையல்

    • பால்பன் ரெசிபியை நீங்க கடைகளில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க.
    • ஒரு தடவை வீட்ல செஞ்சு சாப்பிட்டு பாருங்க.

    தீபாவளிக்கு எல்லார் வீட்லயும் ஏதாவது ஒரு பலகாரம் செய்ய ஆரம்பிச்சு இருப்பீங்க. அந்த வகையில இன்னைக்கு நம்ம ஒரு சூப்பர் டேஸ்டான பால்பன் தீபாவளி பலகாரமா பாக்கப் போறோம். இந்த பால்பன் திண்டுக்கல் மாவட்டத்தில் ரொம்ப ரொம்ப ஃபேமசான ஒரு ரெசிபி. இந்த பால்பன் ரெசிபியை நீங்க கடைகளில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. ஆனா ஒரு தடவை வீட்ல செஞ்சு சாப்பிட்டு பாருங்க அதுக்கப்புறம் கடையில வாங்கவே மாட்டீங்க வீட்லயே செஞ்சு சாப்பிடுவீங்க.

    தேவையான பொருட்கள்:

    மைதா மாவு- 1 கப்

    சர்க்கரை- 1 கப்

    ஏலக்காய் தூள்- 1 டீஸ்பூன்

    தயிர்- 1/4 கப்

    நெய்- 2 டேபிள் ஸ்பூன்

    உப்பு- தேவையான அளவு

    பேக்கிங் சோடா- 1 டீஸ்பூன்

    எண்ணெய்-தேவையான அளவு


    செய்முறை:

    முக்கால் கப் சர்க்கரையை மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்து ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    அதனுடன் மைதா மாவு, ஏலக்காய் தூள், தயிர், பேக்கிங் சோடா சிறிதளவு மற்றும் உப்பு நெய் சேர்த்து நன்றாக கலந்து தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு போல கொஞ்சம் இலக்கமாக பிசைந்து கொள்ள வேண்டும்.

    கடாயில் மீதி உள்ள சர்க்கரை சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்துக் கொள்ளவும்.

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கலந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக சேர்த்து பொரித்து எடுத்து சர்க்கரைப்பாகில் சேர்த்தால் சுவையான பால்பன் தயார்.

    • இனிப்பு என்றால் யாருக்கு தான் பிடிக்காது.
    • கும்மாயம் அருமையான ருசியில் இருக்கும்.

    இனிப்பு என்றால் யாருக்கு தான் பிடிக்காது. பெரும்பாலும் பண்டிகை தினங்களில் மட்டுமே இந்த கும்மாயம் செய்யப்படும். இந்த கும்மாயம் அருமையான ருசியில் இருக்கும். கும்மாயம் ஒரு பாரம்பரிய செட்டிநாடு ஸ்பெஷல் இனிப்பு உணவு.

    கும்மாயம் என்பதற்கு குழைய சமைத்த பருப்பி என்று பொருள். உளுந்து, பாசிப் பருப்பு, நெய், பனங்கருப்பட்டி, ஆகியவை சேர்த்து வேகவைத்து செய்யப்படும் இனிப்பு பலகாரம் ஆகும். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே எளிமையான முறையில் செய்துவிடலாம். இந்த தீபாவளிக்கு நீங்களும் உங்களது வீட்டில் கும்மாயம் செய்து அசத்துங்கள்.

    தேவையான பொருட்கள்:

    உளுந்து- 100 கிராம்

    பச்சரிசி- 50 கிராம்

    பாசிப்பருப்பு- 25 கிராம்

    நெய்- 150 கிராம்

    வெல்லம் அல்லது கருப்பட்டி- 150 கிராம்


    செய்முறை:

    முதலில் பாசிப்பருப்பு, உளுந்து, பச்சரிசி ஆகியவற்றை தனித்தனியாக கடாயில் இளம் வறுப்பாக வறுத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    வறுத்து வைத்துள்ள ஒவ்வொன்றையும் மிக்சி ஜாரில் போட்டு நன்றாக பொடித்து சலித்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை போட்டு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். கொதித்தவுடன் அதனை வடிகட்டி பாகு காய்ச்ச வேண்டும்.

    நெய்யில் வறுத்து வைத்துள்ள மாவை தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கடைத்துக்கொள்ள வேண்டும். கரைத்து வைத்திருக்கும் மாவை கொதிக்கும் வெல்லப்பாகில் சேர்க்க வேண்டும்.

    கிண்டும் போது கட்டியாகாமல் இருக்க இடை இடையே நெய் சேர்த்துக்கொள்ள வேண்டும். மாவு நன்றாக வெந்து பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும்போது இறக்க வேண்டும்.

    சுவையான கும்மாயம் ரெடி. வாயில் வைத்தவுடன் கரைந்து ஓடிவிடும். இது பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் புடிக்கும்.

    • சாமை அரிசி மலச்சிக்கலை போக்க வல்லது.
    • சாமை உடல் வெப்பத்தை சமநிலைபடுத்தி உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கிறது.

    சாமை அரிசியில் இரும்புச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற தாதுக்கள் அதிகமாக உள்ளது, இது சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் கொண்டுவர முக்கிய பங்குவகிக்கிறது.

    சாமை அரிசி மலச்சிக்கலை போக்க வல்லது. சாமை அரிசி நமது உடல் வெப்பத்தை சமநிலைபடுத்தி உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கிறது.

    இந்த சாமை அரிசியை பயன்படுத்தி ஒரு இனிப்பான ரெசிப்பிதான் இந்த பதிவில் நாம் பார்க்கப்போகிறோம். சாமை அரிசி, கல்கண்டு வைத்து சாமை கல்கண்டு சாதம் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    சாமை அரிசி 1 கப்

    பயத்தம் பருப்பு - ½கப்

    நெய் - 2 ஸ்பூன்

    கல்கண்டு - முக்கால் கப்

    முந்திரிப் பருப்பு, உலர் திராட்சை- 50 கிராம்

    தண்ணீர் 4 கப்


    செய்முறை:

    பயத்தம் பருப்பை வெறும் வாணலியில் சிவக்க வறுக்க வேண்டும். சாமை அரிசியையும், பயத்தம் பருப்பையும் தண்ணீரில் களைந்து, குக்கரில் போட்டு 6 விசில் வரும் வரை வேக விடவும்.

    கல்கண்டை மிக்சியில் பொடியாக பொடித்துக் கொள்ள வேண்டும்.

    வாணலியில் நெய் ஊற்றி முந்திரிப் பருப்பு, உலர் திராட்சையை வறுக்கவும்.

    வேக வைத்த சாமை அரிசியில் தேவையான அளவு நெய், கல்கண்டு தூள், முந்திரிப் பருப்பு. திராட்சை சேர்த்து கிளறி, சூடாக பரிமாறவும்.

    குறிப்பு: தண்ணீருக்குப் பதில் பால் சேர்த்து வேகவிட்டால் இன்னும் சுவை கூடும்.

    • தீபாவளி என்றாலே நமது நினைவுக்கு வருவது புத்தாடையும், பட்டாசும் தான்.
    • அவலில் கலோரிகள் குறைவாகவும் நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது.

    தீபாவளி என்றாலே நமது நினைவுக்கு வருவது புத்தாடையும், பட்டாசும், நொறுக்கு தீனியும், இனிப்புகளும் தான். தீபாவளி வர ஒரு வாரம் இருக்கும் போதே நமது வீடுகளில் பலகாரங்கள் செய்ய துவங்கி விடுவார்கள். அதிரசம், லட்டு, குளோப் ஜாமும், வடை, அப்பம், முறுக்கு, ஜாங்கிரி என இனிப்புக்கு பஞ்சமே இல்லாமல் அடுக்கி வைப்பார்கள்.

    இந்த முறை அவலை வைத்து சுவையான அவல் லட்டு செய்வது எப்படி என பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    வேர்க்கடலை - 1/4 கப்

    பொட்டு கடலை - 1/4 கப்

    அவல் - 1 கப் (250 மி.லி கப்)

    நெய்- தேவையான அளவு

    முந்திரி- 10

    திராட்சை- 10

    வெல்லம் - 3/4 கப்

    துருவிய தேங்காய் - 1/2 கப்

    ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி


    செய்முறை:

    முதலில் கடாயில் நிலக்கடலையை போட்டு இரண்டு நிமிடம் வறுத்து, பொட்டு கடலை சேர்த்து கலந்து விடவும். பின்னர் அவல் சேர்த்து இரண்டு நிமிடம் மிதமான தீயில் வறுக்கவும்.

    இரண்டு நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து ஒரு தட்டில் எடுத்து போடவும்.

    பிறகு அதே கடாயில் சிறிது நெய், முந்திரி, திராட்சை சேர்த்து வறுத்து தனியாக வைக்கவும்.

    வெல்லப் பாகு செய்ய, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் வெல்லம் சேர்த்து வெல்லம் உருகியதும் அடுப்பை அணைத்து தனியாக வைக்கவும்.

    வறுத்த பொருட்களை மிக்சி ஜாரில் போட்டு அரைக்கவும்.

    பிறகு ஒரு அகன்ற பாத்திரத்தில் வெல்லப் பாகு, துருவிய தேங்காய், வேர்க்கடலை அவல் தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.

    கலவையை நன்கு கலந்து, வறுத்த முந்திரி, திராட்சை மற்றும் இரண்டு மேசைக்கரண்டி நெய் சேர்க்கவும்.

    பிறகு அடுப்பை அணைத்து விட்டு கலவையை ஒரு தட்டில் வைத்து முழுமையாக ஆற வைக்கவும்.

    கலவை ஆறிய பிறகு அதில் சிறிது எடுத்து லட்டுவாக பிடித்தால் அவல் லட்டு தயார்.

    அவலில் கலோரிகள் குறைவாகவும் நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. இது உங்களை முழுதாக உணரவும் உங்கள் கலோரி உட்கொள்ளலை குறைக்கவும் உதவும்.

    போஹா ஜீரணிக்க எளிதானது மற்றும் மலச்சிக்கலைத் தடுக்கவும், வழக்கமான குடல் இயக்கத்தை ஊக்குவிக்கவும் உதவும்.

    • சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றிற்கும் இது அருமருந்தாகும்.
    • வாரம் ஒருமுறை சாப்பிடுவது அனைவருக்குமே நல்லது.

    தீபாவளி விருந்தாலும், பலகாரங்களாலும் ஏற்படும் வயிற்று உப்புசம், அஜீரணக் கோளாறு, திடீர் ஏப்பங்கள், வாந்தி, வயிற்று வலி, அசதி போன்றவற்றுக்கு லேகியம் நிவாரணம் கொடுக்கும். கூடவே பனிக்காலத்தில் வரக்கூடிய சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றிற்கும் இது அருமருந்தாகும்.

    தீபாவளி தினத்தில் மட்டுமல்லாமல், மற்ற நேரங்களிலும் இந்த லேகியத்தை சாப்பிடலாம். இது செரிமானக் கோளாறுகள் ஏற்படாமல் பாதுகாக்கும். பொதுவாகவே நாம் உண்ணும் உணவுகளில் கொழுப்புச்சத்து நிறைந்திருக்கிறது. இந்த லேகியத்தை வாரம் ஒருமுறை சாப்பிடுவது அனைவருக்குமே நல்லது.

    தேவையான பொருள்கள்:

    சுக்கு - 50 கிராம்

    மிளகு - 50 கிராம்

    திப்பிலி - 50 கிராம்

    சதகுப்பை - 30கிராம்

    சிறுநாகப்பூ - 50 கிராம்

    வாய்விடங்கம் - 50 கிராம்

    கருஞ்சீரகம் - 50 கிராம்

    சீரகம் - 50 கிராம்

    லவங்கப்பட்டை - 50 கிராம்

    கோரைக் கிழங்கு - 50 கிராம்

    கொத்தமல்லி - 30 கிராம்

    சித்தரத்தை - 30 கிராம்

    ஓமம் - 30 கிராம்

    அதிமதுரம் - 20 கிராம்

    கிராம்பு - 20 கிராம்

    வெல்லம்- 300 கிராம்

    தேன் - 100 கிராம்

    நெய் - 100 மில்லி

    செய்முறை:

    * அடுப்பில் பாத்திரம் வைத்து, மேலே குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு பொருளையும் தனித்தனியாக சிறு தீயில் வைத்து வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

    * வறுத்து வைத்த ஒவ்வொரு பொருளையும் தனித்தனியாக நன்றாக மிக்சி ஜாரில் போட்டு அரைத்து, சலித்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    * லேகியத்திற்கு வேண்டிய அளவு வெல்லத்தை எடுத்து ஒரு அடி கனமான பாத்திரத்தில் சேர்த்து பாகு காய்ச்ச வேண்ம்.

    * பாகு கம்பி பதம் வந்தவுடன் அடுப்பில் இருந்து எடுக்காமல் தீயை கொஞ்சம் குறைத்து வைத்து, அரைத்து வைத்திருக்கும் அனைத்து பொடிகளை ஒன்றன் பின் ஒன்றாக சிறிது சிறிதாக கெட்டி ஆகாமல் சேர்த்து கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.

    * பின்னர் வாணலியை இறக்கி வைத்து நெய் விட்டு நன்றாகக் கிளறி சிறிது ஆறிய பின் சிறிது சிறிதாக தேன் விட்டுக் கிளறி வேறு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    * ஆறிய பின்னர் வயதுக்கு ஏற்றவாறு 3 - 12 வயது வரை 5 கிராம் காலை மற்றும் இரவு உணவிற்குப் பிறகு எடுத்து சாப்பிடலாம். 13 வயதுக்கு மேற்பட்டோர் 10 கிராம் அளவு எடுத்து காலை மற்றும் இரவு உணவிற்குப் பிறகு சாப்பிடலாம்.

    -சித்த மருத்துவர் காமராஜ்..

    • தாளிக்கும் போது மிளகாய் வற்றல் கருகாமல் இருக்க தண்ணீரில் கழுவிட்டு பயன்படுத்தலாம்.
    • சாம்பார் கொதித்த பின்னரே காய்கறிகளை போடவேண்டும்.

    * ரவா உப்புமா அல்லது கிச்சடி செய்து அடுப்பிலிருந்து இறக்கும் முன் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் விட்டு ஒருமுறை கிளறவும். வாசனையும் சுவையும் அற்புதமாக இருக்கும். தமிழ்நாட்டில் நாம் அதிகமாக தேங்காய் எண்ணெய் உபயோகிப்பதில்லை. ஒருமுறை முயற்சித்துப் பாருங்களேன்.

    * சாம்பார் சாதம் தயார் செய்த பின் 15-20 சுண்டைக் காய்களை நல்லெண்ணெயில் வறுத்து சாதத்தில் கலக்கவும். பிரமாத சுவையுடன் இருக்கும்.

    * புளியோதரை சாதம் செய்த பின், தனியா 2 ஸ்பூன், கடலைப்பருப்பு 1 ஸ்பூன், காய்ந்த மிளகாய் 6. வெந்தயம் 5 ஸ்பூன், வேர்க்கடலை 10 முதல் 12 வரை, சிறிது கறிவேப்பிலை ஆகியவற்றை லேசாக வாணலியில் வறுத்து பொடி செய்து சாதத்தில் கலக்கவும். அப்போது, தனிச்சுவையுடன் கூடிய புளியோதரை சாப்பிடலாம்.

    * தக்காளி தொக்கு செய்ய மிக்சியில் தக்காளியுடன் சிறிதுபுளி, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், சிறிது வெல்லம், இரண்டு ஸ்பூன் இட்லி மிளகாய்ப் பொடி, உப்பு, கொத்தமல்லி சேர்த்து அரைத்து செய்தால் சுவையோ சுவை.

    * கொத்தமல்லி, புளி, வெல்லம். இட்லி மிளகாய்ப் பொடி, பச்சை மிளகாய் அரைத்து, கடுகு தாளித்தால், தொட்டுக்கொள்ள ருசியான அவசர சட்னி ரெடி.

    * காலை செய்த பொரியல் மீதி இருந்தால் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், மிளகாய்ப் பொடி, கரம் மசாலா சிறிது சேர்த்து பிசைந்துகொள்ளவும். மைதா மாவில் தோய்த்து, பிரட் தூளில் புரட்டி, எண்ணெயில் பொரித்து எடுத்தால், சுவையான கட்லட் தயார்.

    * சாம்பார் வைத்து அடுப்பில் இருந்து இறக்கும்போது, மிக்சியில் ஒன்றிரண்டாக பொடித்த தனியா தூளை சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்குங்கள். சாம்பார் கமகமக்கும்.

    * பிரட் சாண்ட்விச் செய்யும்போது பட்டர், வெள்ளரி, கேரட் வைத்து, அதனுடன் ஏதேனும் முறுக்கு அல்லது மிக்சர் வைத்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.

    * சாபூதானா கிச்சடி (ஜவ்வரிசி) செய்த பின், பொடித்த வேர்க்கடலையுடன் தனியா, காய்ந்த மிளகாய், பொட்டுக் கடலை வறுத்து பொடி செய்து போடவும். இப்போது சுவை அள்ளும்.

    *வீட்டில் தேங்காய் இல்லாவிட்டால், பொட்டுக்கடலை சிறிது, உப்பு, கொத்தமல்லி, சிறிது புளி சேர்த்து அரைத்து கடுகு தாளித்தால், திடீர் சட்னி தயாராகி விடும்.

    * தோசை மாவுடன் வறுத்த ரவாவை கலந்து சுட தோசை மொறு மொறுப்பாக இருக்கும்.

    * தாளிக்கும் போது மிளகாய் வற்றல் கருகாமல் இருக்க தண்ணீரில் கழுவி நன்றாக துணியில் துடைத்துவிட்டு கத்தரியால் நறுக்கிக் கொள்ளலாம்.

    * புளிக் குழம்பு, ரசம் போன்றவற்றிற்கு புளியை ஊற வைக்கும்போது உப்பையும் சேர்த்து ஊற வைக்க வேண்டும். அப்போது தான் சுவையும் நன்றாக இருக்கும்

    * காய்கறிகள் வாடிப்போய் இருந்தால் தண்ணீரில் எலுமிச்சை சாறு கலந்து காய்கறிகளை சிறிது நேரம் ஊறவிட்டு எடுத்தால் பசுமையாக இருக்கும்.

    * இரவே உருளைக்கிழங்கை நறுக்கி வைக்க வேண்டுமா? எலுமிச்சை சாற்றில் கிழங்கு துண்டுகளைப்போட்டு பிரட்டி எடுத்து வைத்தால் கிழங்கு கறுத்துப்போகாமல் இருக்கும்.

    * முருங்கைக் கீரை தண்ணீர் சாறு வைக்கும் போது அரிசி களைந்த நீரில் அளவான உப்பிட்டு வெங்காயம் அரிந்து போட்டு தண்ணீர் கொதிவந்ததும் கீரையைப் போடவேண்டும். தாளிக்கும் போது மிளகாய் போட்டு சீரகத்தை நுணுக்கிப் போடவேண்டும். கடுகு போட வேண்டாம். நல்ல சுவை கிடைக்கும்.

    * சாம்பார் கொதித்த பின்னரே காய்கறிகளை போடவேண்டும். காய்கறிகள் வெந்ததும் புளி கரைசலில் கலந்து அதன் பிறகு தாளிக்கவேண்டும்.

    * அரிசியையும் பருப்பையும் வாசனை வரும் வரை வறுத்து, பின்னர் களைந்து போட்டு பொங்கல் செய்தால் சீக்கிரம் வெந்து விடுவதுடன் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.

    • பூண்டு பொடியை சாப்பிட்ட அனுபவம் பலருக்கும் இருக்கும்.
    • சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமாக இருக்கும்.

    சூடான இட்லி அல்லது தோசையுடன் காரமான பூண்டு பொடியை வைத்து சாப்பிடுவதற்கு யாருக்கு தான் பிடிக்காது? ஹோட்டல்களிலும், சாலையோர ரோட்டு கடைகளிலும் இந்த பூண்டு பொடியை சாப்பிட்ட அனுபவம் பலருக்கும் இருக்கும்.

    இதை வீட்டில் செய்து பார்க்க வேண்டும் என பலரும் நினைத்தாலும் அதை முறையாக எப்படி செய்வது என்று குழப்பம் இருக்கும். அப்படி, நாம் சாப்பிட்டு மனதிற்கும் நாவிற்கு பிடித்துப்போன ஆந்திரா ஸ்டைல் பூண்டு பொடியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்..

    தேவையான பொருட்கள்:

    கடலைப்பருப்பு - 1 கப்

    உளுத்தம் பருப்பு - அரை கப்

    பயட்கி மிளகாய் (byadgi chilli) - 8

    காய்ந்த மிளகாய் - 8

    எள் - 2 தேக்கரண்டி

    பொட்டுக் கடலை - 3 டேபிள் ஸ்பூன்

    கறிவேப்பிலை - 2 கொத்து

    பெருங்காயப்பொடி - 2 சிட்டிகை

    பூண்டு பல் - 12



    செய்முறை:

    முதலில் அடுப்பை சிம்மில் வைத்து, ஒரு கடாயில் கடலைப்பருப்பை சேர்த்து நன்றாக வறுக்கவும்,

    பின்னர், இந்த பருப்பை ஒரு தட்டில் மாற்றி வைத்து, அதே கடாயில் உளுந்தப்பருப்பு சேர்த்து நன்றாக வறுக்கவும்,

    உளுந்தம்பருப்பு வறுப்பட்டதும், அதே தட்டில் மாற்றி வைத்துக்கொள்ளுங்கள் நாம் தயார் செய்யும் பொடிக்கு பருப்பு வகைகளை தனித்தனியாக வறுத்து எடுத்தால் கூடுதல் சுவை தரும்.

    இப்போது அதே கடாயில் சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து அதில், பயட்கி மற்றும் காய்ந்த மிளகாய்யை சேர்த்து வதக்கவும். பயட்கி மிளகாய் இல்லை என்றால் 15 காய்ந்த மிளகாயை வதக்கவும்.

    மிளகாய் நன்கு வதங்கியதும் எள் சேர்க்க வேண்டும். இப்போது எள் வெடிக்கத் துவங்கியதும் பொட்டு கடலை, கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். இதில், தேவைக்கேற்ப உப்பு சேர்த்து தட்டில் மாற்றி வைத்துக்கொள்ளுங்கள்.

    நாம் வறுத்து வைத்தவை நன்கு ஆறிய பின்னர், மிக்சி ஜாரில் சேர்த்துக்கொள்ளுங்கள். அதனுடன் பூண்டு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும். இப்போது சுவையான ஆந்திர ஸ்டைல் பூண்டு இட்லி பொடி தயார்.

    இட்லி பொடியை இப்படி செய்வதால் குறைந்தது இரண்டு மாதங்கள் வரை சேமிக்கலாம்

    சூடான இட்லி, பொடியுடன் சிறிது நெய் சேர்த்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமாக இருக்கும்.



    • பாசிப்பருப்பை களைந்து வேக வைக்கவும்.
    • அரிசி மாவில், வெந்த பாசிப்பருப்பு, பாகு, ஏலக்காய்த் தூள் போட்டு பணியார மாவு பதத்தில் நீர் விட்டு கரைக்கவும்.

    தேவையான பொருட்கள்:

    பச்சரிசி 1/2 கிலோ

    பாசிப்பருப்பு 1/2 கப்

    வெல்லம் 1/4 கிலோ

    ஏலக்காய்த் தூள் 1/2 ஸ்பூன்

    எண்ணெய் தேவைக்கேற்ப

    செய்முறை:

    பச்சரிசியை களைந்து இரண்டு மணி நேரம் ஊற வைத்து, நீரை வடித்து விட்டு, நிழலில் உலர வைத்து மாவாக்கிக் கொள்ளவும்.

    பாசிப்பருப்பை களைந்து வேக வைக்கவும். கனமான பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு நீர் விட்டு கொதிக்க வைத்து, வெல்லம் கரைந்ததும் வடிகட்டவும். அதை கம்பி பாகு பதத்தில் காய்ச்சி இறக்கி வைக்கவும்.

    அரிசி மாவில், வெந்த பாசிப்பருப்பு, பாகு, ஏலக்காய்த் தூள் போட்டு பணியார மாவு பதத்தில் நீர் விட்டு கரைக்கவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், மாவை கரண்டியால் எடுத்து ஊற்றவும். இருபுறமும் வெந்ததும் எடுத்து வைக்கவும்.

    சுவையான இனிப்பு பாசிப்பருப்பு பணியாரம் தயார்.

    • ரவா தோசை செய்யும்போது இரண்டு ஸ்பூன் கடலை மாவு சேர்த்தால், தோசை நன்கு சிவந்து மொறுமொறுவென்றிருக்கும்.
    • தோசை மாவு, பொங்கல் தயாரிக்கும்போது சிறிது சீரகத்தை கைகளால் தேய்த்துப் போட்டால் சுவையுடன் மணமாகவும் இருக்கும்.

    * வெங்காய பக்கோடா செய்வதற்கு மாவு பிசையும்போது வறுத்த நிலக்கடலையை தூளாக்கி அதனை மாவுடன் சேர்க்கவும். அப்படி செய்தால் பக்கோடா மொறு மொறுவென்றும், ருசியாகவும் இருக்கும்.

    * சப்பாத்தியை சுட்டெடுத்ததும் எண்ணெய் வடிகட்டியில் போட்டு மூடி வைத்தால் சப்பாத்தியின் அடியில் வியர்த்து ஈரமாவது தடுக்கப்படும்.

    * தேங்காய்த் துருவல் மீதமானால் அதை லேசாக வதக்கி சிறிது உப்பு சேர்த்துக்கொள்ளவும். அதனை மறுநாள் சமையலுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். வாடிப்போகாது.

    * கேசரி, பால்கோவா, தேங்காய் பர்பி போன்ற இனிப்பு பலகாரங்களை நான்ஸ்டிக் பாத்திரத்தில் செய்தால் அடி பிடிக்காமல் எளிதாக கிளறலாம்.

    * ரவா தோசை செய்யும்போது இரண்டு ஸ்பூன் கடலை மாவு சேர்த்தால், தோசை நன்கு சிவந்து மொறுமொறுவென்றிருக்கும்.

    * தோசை மாவு, பொங்கல் தயாரிக்கும்போது சிறிது சீரகத்தை கைகளால் தேய்த்துப் போட்டால் சுவையுடன் மணமாகவும் இருக்கும்.

    * சர்க்கரைப் பொங்கல் தயார் செய்யும்போது அரை கப் தேங்காய் பால் ஊற்றிக்கிளறி இறக்கினால் பொங்கல் சுவையாக இருக்கும்.

    * பாயசத்திற்கு உலர் திராட்சைக்கு பதிலாக பேரீச்சம் பழத்தை சிறிதாக நறுக்கி நெய்யில் பொரித்து போட்டால் சுவையாக இருக்கும்.

    • வாரம் இருமுறை சாப்பிட்டு வரலாம்.
    • வலிகளை நீக்கும் இயல்பு முடக்கறுத்தானுக்கு உண்டு.

    மூட்டுகளை முடக்கி வைக்கும் வாதநோயை அகற்றுவதால் இக்கீரைக்கு 'முடக்கறுத்தான்' (முடக்கு + அறுத்தான் எனப்பெயர் வந்தது. முடக்கு நோயை அகற்றும் தன்மை மிக்க இக்கீரை ஒரு கொடி வகையை சார்ந்தது. வேலிகளில் பற்றி செழிப்பாக படர்ந்து வளரும்.

    நாற்பது வயது கடந்த பலருக்கு மூட்டுகளில் நீர் கோர்த்து தாங்கமுடியாத வலி ஏற்படும். தோள்பட்டை வலி, முதுகு வலி, இடுப்பு வலி என பலவகையான வலிகளை நீக்கும் இயல்பு முடக்கறுத்தானுக்கு உண்டு.

    உடல்வலி, மூட்டுகளில் வீக்கம், உடல் கனத்து வலி தோன்றும் பொழுது, இரண்டு கைபிடி முடக்கறுத்தான் கீரையை 200 மி.லி. நீரில் இட்டு, ஒரு தேக்கரண்டி சீரகமும் கலந்து கொதிக்க வைத்து அருந்த உடல் வலி நீங்கும். இவ்வாறு வாரம் இருமுறை சாப்பிட்டு வரலாம்.

    பெண்களுக்கு சூதகவலி, மற்றும் சூதக தடை, மாதவிடாய் சமயம் தோன்றும் வலிக்கு இரண்டு கைபிடி முடக்கறுத்தான் இலை, ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம் கலந்து 200 மிலி நீரில் கொதிக்க வைத்து அருந்த வயிறு மற்றும் தொடை, இடுப்பு பக்கங்களில் உண்டாகும் வலி நீங்கும். தோல் நோய்களுக்கு முடக்கறுத்தான் இலைகளை அரைத்து பூசி குளித்து வரலாம்.

    முடக்கறுத்தான் கீரை சாப்பிடும் பொழுது சிலருக்கு பேதி உண்டாகும். அதனால் முதலில் சாப்பிடும் பொழுது ஒரு விடுமுறை நாளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது நல்லது.

    தேவையான பொருட்கள்:

    முடக்கறுத்தான் இலை- 2 கை பிடி அளவு

    பூண்டு- 5 பல் அரைப்பதற்கு

    துவரம் பருப்பு- 1 ஸ்பூன்

    மிளகு- ½ ஸ்பூன்

    சீரகம்- 1 ஸ்பூன்

    (மேற்கண்ட துவரம் பருப்பு, மிளகு, சீரகம் போன்றவற்றை வறுத்து பொடி செய்து கொள்ளவும்)

    காய்ந்த மிளகாய்- 2

    புளி- நெல்லிக்காய் அளவு (200 மி.லி. நீரில் கரைத்து கொள்ளவும்)

    தக்காளி-1 பொடிதாக அரிந்து கொள்ளவும்

    நெய்- 3 ஸ்பூன்

    கடுகு- 1 ஸ்பூன்

    செய்முறை:

    ஒரு வாணலியில் அடுப்பில் வைத்து முடக்கறுத் தான் கீரை மற்றும் பூண்டை ஒரு தேக்கரண்டி நெய் இட்டு லேசாக வதக்கி சற்று ஆறிய பின் அரைத்து வைத்துக் கொள்ளவும். புளி தண்ணீரை தக்காளி கலந்து கொதிக்க வைக்க வேண்டும்.

    நன்கு கொதிக்கும் பொழுது அரைத்து வைத்துள்ள பொடியை கலந்து கொதிக்க விடவும்.

    இறுதியாக அரைத்து வைத்துள்ள முடக்கறுத்தான் பூண்டு கலவையை இட்டு கொதிக்க வைத்து, ஒரு தேக்கரண்டி நெய்யில் சிறிது கடுகு தாளித்து இறக்கி கொள்ளவும்.

    இதை சூப்பாகவும், சூடான சாதத்துடன் கலந்து ரசம் ஆகவும் பயன்படுத்தலாம். வயிற்று உப்புசம், மலச்சிக்கல், மூட்டுவலி, அடிவயிற்று வலிக்கு இந்த ரசம் செய்து பயன்படுத்தலாம். மூல நோய் வள்ளவர்களுக்கு தொடைப்பகுதியில் வலி ஏற்படும். அப்பொழுது இந்த ரசம் 100 மி.லி. சாப்பிட வலி குறையும்.

    • முருங்கை கீரை சிறந்த 'ஆண்டி ஆக்ஸிடண்ட்' ஆக செயல்படுகிறது.
    • மலச்சிக்கல் நீக்க உதவுகின்றது.

    முருங்கை கீரையை 'கீரைகளின் ராணி' என கூறினால் அது மிகையாகாது. முருங்கை கீரையில் ஏராளமான சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.


    இரும்புச்சத்து, புரதச்சத்து, கால்சியம், வைட்டமின் சத்துக்கள். மற்றும் ஏராளமான நுண்ணிய சத்துக்கள் முருங்கையில் நிறைந் துள்ளது. இதில் 96 வகையான சத்துகளும், 46 வகையான ஆண்டி ஆக்ஸிடண்ட்களும் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

    இதில் இரும்புச்சத்து இருப்பதால் 'அனீமியா' எனப்படும் ரத்த சோகைக்கு மிக சிறந்த உணவாகின்றது. ஏராளமான வைட்டமின் சத்துக்கள் கண் பார்வையை அதிகரிக்க செய்கிறது. இதில் உள்ள கால்சியம் சத்து எலும்புகளை உறுதி கொள்ள செய்கின்றது.

    முருங்கை கீரை சிறந்த 'ஆண்டி ஆக்ஸிடண்ட்' ஆக செயல்படுகிறது. இளமையாக இருக்க உதவுகிறது. நரம்பு தளர்ச்சியை நீக்க உதவும், தாதுபலம் பெருகும், தூக்கமின்மை நீங்கும். மலச்சிக்கல் நீக்க உதவுகின்றது.

    தேவையான பொருட்கள்:

    முருங்கை பூ- 200 கிராம் (காம்பு நீக்கி பொடிதாக அரிந்து கொள்ளவும்).

    கடலைபருப்பு- 100 கிராம்

    துவரம் பருப்பு- 50 கிராம்

    உளுந்தம் பருப்பு- 50 கிராம் (இரண்டையும் தனித்தனியாக 2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்

    பெரிய வெங்காயம்- 2 (பொடிதாக அரிந்து கொள்ளவும்)

    பச்சை மிளகாய்- 4

    உப்பு- சுவைக்கேற்ப

    நல்லெண்ணெய்- தேவைக்கேற்ப


    செய்முறை:

    கடலை பருப்பு மற்றும் துவரம்பருப்பு இரண்டையும் நீர் ஊற்றி ஊறவைக்க வேண்டும். ஊற வைத்த பருப்புகளை கரகரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

    முருங்கைப் பூ, வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடிதாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அரைத்து வைத்துள்ள பருப்பு கலவையில் உப்பு சேர்த்து கலந்துகொள்ள வேண்டும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடு செய்து மாவை வடைகளாக தட்டி, பொரித்தெடுக்கவும். 

    • கல்லீரல் மற்றும் மண்ணீரலில் ஏற்படும் வீக்கங்களையும் குறைக்க உதவுகிறது.
    • மணத்தக்காளி காய், வாந்தியைப் போக்கும்.

    மணத்தக்காளி, தானாகவே தோட்டங்களில் வளரும் ஒரு கைச் செடி, இதன் இலை மற்றும் காய் மருத்துவக் குணம் வாய்ந்தது. மணத்தக்காளியின் பழம் கறுப்பாக மிளகு போல் இருப்பதால் இதனை 'மிளகு தக்காளி' என்றும் கூறுவர்.

    இந்த கீரையில் ரிபோபிளோவின், வைட்டமின் சி, பீட்டா கரோட்டின் போன்ற சத்துகளும், கால்சியம், பொட்டாசியம் மற்றும் இரும்புத் தாதுக்களும் உள்ளன.


    மணத்தக்காளி வாய்ப்புண்ணை தீர்க்கக் கூடியது. வாய்ப்புண் உள்ளவர்கள் இந்த கீரையை ஒரு கைபிடி அளவு நன்றாக மென்று சாப்பிடலாம்.

    இதை உணவிலும் தினம் சமைத்து உண்ணலாம். வயிற்றுப் புண்களைக் குணமாக்கும், மலமிளக்கும் தன்மையும் இந்த கீரைக்கு உண்டு.

    இதன் இலையில் உள்ள நைட்ரிக் ஆக்சைடு என்ற வேதிப்பொருள், வயிற்றில் உள்ள கட்டிகளைக் கரைக்க உதவுகிறது. கல்லீரல் மற்றும் மண்ணீரலில் ஏற்படும் வீக்கங்களையும் குறைக்க உதவுகிறது.

    மணத்தக்காளி காய், வாந்தியைப் போக்கும். இதை உணவில் அடிக்கடி சமைத்துச் சாப்பிடுவது நல்லது.

    தேவையான பொருட்கள்:

    மணத்தக்காளி கீரை- 100 கிராம்

    சின்னவெங்காயம்- 20

    தேங்காய்- 1/2 மூடி

    அரிசி கழுவிய நீர்- 200 கிராம்

    சீரகம்- 1 ஸ்பூன்

    நெய்- 1 ஸ்பூன்

    உப்பு- சுவைக்கேற்ப


    செய்முறை:

    மணத்தக்காளி கீரை மற்றும் சின்ன வெங்காயத்தை பொடிதாக வெட்டிக் கொள்ள வேண்டும். அதன்பிறகு ஒரு பாத்திரத்தில் கீரை மற்றும் சின்ன வெங்காயம், சீரகம் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி குழைய வேக வைத்துக் கொள்ள வேண்டும்.

    தேங்காயைத் துருவி அரைத்து பாலெடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் வேகவைத்த கீரையில் அரிசி கழுவிய நீர் மற்றும் உப்பு கலந்து ஒரு கொதி வந்ததும், தேங்காய்ப் பால் கலந்து அடுப்பை அணைத்து விட வேண்டும். நெய்யில் சீரகத்தை தாளித்து கலந்துகொள்ளவும்.

    (அரிசி கழுவிய நீரில் வைட்டமின் 'பி' சத்து உள்ளதால் இது வாய்ப் புண் விரைவில் ஆற உதவுகிறது. வாய்ப் புண், வயிற்றுப்புண் மற்றும் வயிற்றில் கட்டியுள்ளவர்கள் இந்த சூப்பை அடிக்கடி தயாரித்து சாப்பிடலாம்.

    ×