search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    இன்று உலக மருந்தாளுனர்கள் தினம்
    X

    இன்று உலக மருந்தாளுனர்கள் தினம்

    • நோயாளிகளுக்கு மருத்துவம் ரீதியாக சிறந்த வழிகாட்டிகளாக உள்ளனர்.
    • பார்மசியில் முதுகலை பட்டப்படிப்பு, பி.எச்டி படிப்பு உள்ளிட்டவையும் உள்ளன.

    உலகில் மனிதர்களின் நலன்சார்ந்து பல்வேறு துறைகளும், பணிகளும் உள்ளன. ஆம்...! விவசாயம், மருத்துவம், சுகாதாரம், போலீஸ் உள்பட பல்வேறு துறைகளும், அதில் பணியாற்றுபவர்களின் சேவையும் உலகளவில் அனைத்து மனிதர்களுக்கும் இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகிறது.

    இப்படி அதில் ஒன்றான மருத்துவத்துறையில் மனிதர்களின் உடல் ஆரோக்கியத்தையும், உயிரை காக்கும் மருந்து, மாத்திரைகளை நல்ல முறையில் வழங்கி மகத்தான சேவையை செய்து வருபவர்கள் தான் மருந்தாளுனர்கள். மருந்து வழங்குதல், அதனை எப்படி, எப்போது எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது உள்பட மருந்துகள் குறித்து நோயாளிகளுக்கு ஒரு தெளிவை வழங்குவார்கள்.

    அதன்படி பாதுகாப்பான, பயனுள்ள வகையில் மருந்துகளை நிர்வகித்து வினியோகம் செய்யக்கூடியவர்கள். மேலும் நோயாளிகளுக்கு மருத்துவம் ரீதியாக சிறந்த வழிகாட்டிகளாக உள்ளனர். இதன்மூலம் மக்கள் நல்ல மருந்து, மாத்திரைகளை கிடைக்க பெற்று உடல் ஆரோக்கியத்துடன் வாழ மருந்தாளுனர்கள் என்பவர்கள் முக்கிய காரணமாக இருந்து வருகின்றனர்.

    மருந்தாளுனர்களின் குறைந்தபட்ச கல்வித்தகுதி பள்ளியில் அறிவியல் பாடம் படித்து, பின்னர் பார்மசியில் இளங்கலை அல்லது டிப்ளோ படிப்பில் தேர்ச்சி பெற்று உரிய பயிற்சி பெற்று இருக்க வேண்டும். இதுதவிர பார்மசியில் முதுகலை பட்டப்படிப்பு, பி.எச்டி படிப்பு உள்ளிட்டவையும் உள்ளன. இதில் ஒவ்வொரு படிப்புக்கும் ஏற்றபடி கால நிர்ணயம் உள்ளது.

    இப்படி தங்களது அறிவு, நிபுணத்துவம் மூலம் மருத்துவ உலகை சிறந்ததாக மாற்றுவதில் தங்களது பங்களிப்பை ஆற்றும் மருந்தாளுனர்களை கவுரவிக்கவும், அவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 25-ந்தேதி (இன்று) உலக மருந்தாளுனர்கள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

    1912-ம் ஆண்டு செப்டம்பர் 25-ந்தேதியன்று சர்வதேச மருந்து கூட்டமைப்பு நிறுவப்பட்டது. இதனை நினைவு கூறும் வகையில் கடந்த 2009-ம் ஆண்டு அந்த கூட்டமைப்பு சார்பில் செப்டம்பர் 25-ந்தேதி உலக மருந்தாளுனர்கள் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×