என் மலர்
பொது மருத்துவம்

காலை உணவை தவிர்க்க வேண்டாமே...
- இன்றைய சூழலில் பலர் வேலை அவசரத்தில் காலை உணவைத் தவிர்க்கிறார்கள், இது சரியல்ல.
- காலையில் அலுவலகம் செல்வதற்கு முன் ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும்.
உணவே மருந்து, மருந்தே உணவு என்பார்கள். சரியான முறையில் பசித்த பின்னர் சரியான அளவோடு சுவையான உணவினை உட்கொண்டால் எந்த நோயும் அணுகாது.
முன்பெல்லாம் நோய்களை தடுக்கும் மருந்தாக நாம் உட்கொள்ளும் உணவே இருந்தது. ஆனால் இன்று அப்படியல்ல. பசி என்பதே ஒரு பிணிதான். அதற்கான மருந்துதான் உணவு.
பிடித்த உணவுகளை சாப்பிடும்போது ஏற்படும் உணர்வு அலாதியானது. அதை அளவோடு சாப்பிடும்போதே நன்மை பயப்பதாக உள்ளது.

காலை உணவு நமக்குத் தேவையான சக்தியை முதலில் அளிக்கிறது. இன்றைய சூழலில் பலர் வேலை அவசரத்தில் காலை உணவைத் தவிர்க்கிறார்கள், இது சரியல்ல. காலையில் அலுவலகம் செல்வதற்கு முன் ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும்.
காலை உணவினைத் தவிர்த்தால் அது நம்முடைய சிந்தனையை சிறப்பாக வழங்கக் கூடிய மூளையைப் பாதிக்கும் என்கின்றனர் டாக்டர்கள். இரவு உணவுக்கும் காலை உணவுக்கும்தான் நீண்ட உணவு இடைவெளி உள்ளது. அதை சரி செய்ய காலை உணவை அவசியம் சாப்பிட வேண்டும்.
இல்லையேல் ஜீரண சுரப்பி நமது குடலை பாதிக்கச் செய்யும். காலை உணவினைத் தவிர்க்கும் போது வயிற்றில் வாயுத் தொல்லைகள் ஏற்பட்டு மந்த நிலை உருவாகிவிடும்.
எத்தகைய திறமையானவர்களாக இருந்தாலும் காலை உணவை தவிர்க்கும்போது, அவர்களின் இயல்பான திறன் வெளிப்படுவதில்லை என்று ஆய்வுகள் கூறுகின்றன. தானியங்களை காலை உணவாக சாப்பிடுவதால் பல நன்மைகள் இருப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. கலப்பு தானியங்கள் கொண்ட காலை உணவுகளில் நார்ச்சத்து நிறைந்திருக்கும்.
நமது வயிற்றில் நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கும் ஊட்டச்சத்து இது.
காலை எழுந்தவுடன் ஒரு பெரிய டம்ளரில் வெது வெதுப்பான தண்ணீர் பருகுவது உடலின் செரிமான அமைப்பை தூண்டுவதற்கு உதவும். இதன் மூலமாக குடலில் இயக்கங்கள் தூண்டப்பட்டு, அவற்றில் உள்ள கழிவுகள் வெளியேறும். மேலும் உணவை உட்கொள்வதற்கு குடல் தன்னை தயார்படுத்திக் கொள்ளும்.
தேவைப்பட்டால் வெது வெதுப்பான தண்ணீரோடு ஒரு சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பது சிறந்தது.






